என் கணவரின் மரணத்திற்குப் பிறகு ஒரு நீண்டகால நண்பர் எனக்கு ஒரு குறிப்பை அனுப்பினார்: “(ஆலன்) … தேவனுடன் போராடுபவர். அவர் ஒரு உண்மையான யாக்கோபு. மேலும் நான் இன்று ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கு அவர் ஒரு வலுவான காரணம்” என்று எழுதப்பட்டிருந்தது. ஆலனின் போராட்டங்களை முற்பிதாவான யாக்கோபுடன் ஒப்பிட நான் ஒருபோதும் நினைத்ததில்லை; ஆனால் அது சரியாய் பொருந்துகிறது. தனது வாழ்நாள் முழுவதும், ஆலன் சுயத்துடனும் பதில்களுக்காக தேவனுடனும் போராடினார்;. அவர் தேவனை நேசித்தார்; ஆனால் தேவன் அவரை நேசிக்கிறார், மன்னிக்கிறார் மற்றும் அவருடைய ஜெபங்களைக் கேட்கிறார் என்னும் சத்தியங்களை விளங்கிக்கொள்ள முடியாமல் சிலவேளைகளில் போராடினார். ஆயினும்கூட, அவரது வாழ்க்கை அதன் ஆசீர்வாதங்களைக் கொண்டிருந்தது. அவர் பலரை நேர்மறையாய் ஊக்கப்படுத்தினார். 

யாக்கோபின் வாழ்க்கையானது போராட்டங்களால் நிறைந்திருந்தது. அவன் தன் சகோதரன் ஏசாவின் சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற தீர்மானித்தான். அவன் வீட்டை விட்டு ஓடிப்போய், தனது உறவினர் மற்றும் மாமனாருமான லாபானுடன் பல ஆண்டுகளாக போராடினான். பிறகு லாபானை விட்டு தப்பி ஓடினான். அவன் தனிமையில் ஏசாவை சந்திக்க பயந்தான். ஆயினும்கூட, அவனுக்கு பரலோக தரிசனம் கிடைத்தது. “தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்” (ஆதியாகமம் 32:1). இது ஒருவேளை தேவனிடமிருந்து அவர் பெற்ற முந்தைய தரிசனத்தின் நினைவூட்டலாக இருக்கலாம் (28:10-22). இப்போது யாக்கோபு வேறொரு தெய்வீக நபரை சந்திக்கிறார்: இரவு முழுவதும் அவர் ஒரு “மனிதனுடன்” போராடினார். மனித உருவில் இருந்த தேவனுடைய பிரதிநிதியான அந்த தெய்வீக நபர், “தேவனோடும் மனிதரோடும் போராடி” (32:28) மேற்கொண்டான் என்பதினால் யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்று பெயர் மாற்றம் செய்கிறார். இவையெல்லாவற்றிலும் தேவன் யாக்கோபோடு இருந்து அவனை நேசித்தார். 

நம் அனைவருக்கும் போராட்டங்கள் உள்ளன. ஆனால் நாம் தனியாக இல்லை. ஒவ்வொரு சோதனையிலும் தேவன் நம்முடன் இருக்கிறார். அவரை விசுவாசிக்கிறவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், மன்னிக்கப்படுகிறார்கள், நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கின்றனர் (யோவான் 3:16). நாம் அவரைப் உறுதியாய் பற்றிக்கொள்வோம்.