Archives: மே 2024

இதுவே காலம்

எனது நண்பர்களான அல் மற்றும் கேத்தி ஷிஃபர் அவர்களின் இரண்டாம் உலகப் போரின் காலகட்ட விமானத்தை கண்காட்சியில் பறக்கவிட்டபோது, வயதான போர் வீரர்களின் உணர்ச்சிகள்தான் அவர்களுக்கு முக்கியமாய் தோன்றியது. தாங்கள் பணியாற்றிய போர்கள் மற்றும் அவர்கள் பறந்த விமானங்கள் பற்றி பேசுவதற்காக அவர்கள் முன்வந்தனர். அவர்களின் பெரும்பாலான போர்க் கதைகள் கண்ணீருடன் சொல்லப்பட்டன. பலர் தங்கள் நாட்டுக்கு சேவை செய்யும்போது பெற்ற சிறந்த செய்தி, “போர் முடிந்துவிட்டது, வீரர்களே; வீட்டிற்குச் செல்லவேண்டிய நேரம் இது” என்பதாகும். 

முந்தைய தலைமுறையினரின் இந்த வார்த்தைகள், பிசாசோடு விசுவாச யுத்தத்தில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவர்களோடு தொடர்புடையது. பேதுரு “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேதுரு 5:8) என்று நம்மை எச்சரிக்கிறார். அவன் பல்வேறு வழிகளில் நம்மை தூண்டி, துன்பத்திலும் துன்புறுத்தலிலும் ஊக்கமின்மையைப் பயன்படுத்தி, இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்து நம்மை விலக்க முயற்சிக்கிறான். பேதுரு தனது முதல் வாசகர்களுக்கும் இன்று நமக்கும் “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்” (1 பேதுரு 5:8) என்று சவால் விடுக்கிறார். நாம் பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து இருக்கிறோம். எனவே சத்துரு நம்மை யுத்தத்தில் சரணடையச் செய்து நம்மை வீழ்த்த அனுமதிக்கமாட்டோம்.

ஓர் நாள் இயேசு திரும்பி வருவார் என்பதை நாம் அறிவோம். அவர் வரும்போது, அவருடைய வார்த்தைகள் அந்த போர்க்கால வீரர்கள் உணர்ந்ததைப் போன்ற விளைவை ஏற்படுத்தும். நம் கண்களில் கண்ணீரையும், நம் இதயங்களில் மகிழ்ச்சியையும் வரவழைக்கும்: “போர் முடிந்துவிட்டது, வீரர்களே; வீட்டிற்குச் செல்லவேண்டிய நேரம் இது."

 

சாம்பலில் சிங்காரம்

ஓர் நாள் மாலை, என் வீட்டிற்கு அருகில் உள்ள ஓர் காலி இடத்தில், நேர்த்தியான மண் வரிசைகளைக் கவனித்தேன். ஒவ்வொரு வரிசையிலும் சிறிய பச்சை இலைகளுடன் சிறிய மொட்டுகள் வெளியே எட்டிப்பார்க்கும். மறுநாள் காலை, அந்த இடத்தில் அழகான சிவப்பு டூலிப் மலர்கள் முளைத்திருப்பதைக் கண்டபோது, நான் என் பாதையில் நிலைநின்றேன்.

முந்தைய இலையுதிர்காலத்தில், ஓர் குழு சிகாகோவின் தெற்குப் பகுதி முழுவதும் காலியாக உள்ள இடங்களில் ஒரு லட்சம் டூலிப் செடிகளை நட்டது. சிறுபான்மையினர் வசிக்கும் சுற்றுப்புறங்களில் சிவப்பு நிற பூக்கள் பூக்கச்செய்வதின் மூலம் (வங்கிகளின் கடன் பாகுபாடு) சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த அவர்கள் தீர்மானித்தனர். டூலிப்ஸ் அந்த இடங்களில் இருந்திருக்கக்கூடிய வீடுகளை அடையாளப்படுத்தியது.

தேவ ஜனங்கள் பல சவால்களைச் சகித்திருக்கிறார்கள். தங்கள் தாய்நாட்டிலிருந்து நாடுகடத்தப்படுவதிலிருந்து சிவப்பு நிறத்தைப் போன்ற பாகுபாடுகள் வரை. ஆயினும்கூட, நாம் இன்னும் நம்பிக்கையைக் காணலாம். சிறையிருப்பின் காலத்தில் இஸ்ரவேலர்களை தேவன் கைவிடமாட்டார் என்பதை ஏசாயா நினைவுபடுத்துகிறார். சாம்பலுக்குப் பதிலாக அவர்களுக்கு “அழகின் கிரீடம்” கொடுப்பதாக அறிவிக்கிறார். தரித்திரருக்கு சுவிசேஷத்தையும் (61:1), “ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும்” தேவன் வாக்குறுதி அளித்தார். இந்த உருவகங்கள் அனைத்தும் அவரது மகிமையைத் தூண்டுகின்றன. மேலும் மனச்சோர்வடைந்த இஸ்ரவேலர்கள் “கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்” (வச. 3) என்கிறார். 

அழுக்கு மற்றும் பாகுபாடு ஆகியவற்றிலிருந்து தேவனால் சிறப்பான ஒன்றை உருவாக்க முடியும் என்பதையும் அந்த டூலிப்ஸ் காட்டுகின்றன. ஒவ்வொரு வசந்த காலத்திலும் எனது சுற்றுப்புறத்திலும் பிற சமூகங்களிலும் நம்பிக்கையை புதுப்பிக்கும் டூலிப் மலர்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 

 

தேவன் செய்ததை அவர்களுக்குச் சொல்

எனது கல்லூரி நண்பர் பில் டோபியாஸ் ஓர் தீவில் பல வருடங்களாய் மிஷனரியாக சேவை செய்துள்ளார். ஓர் இளைஞன் தன் சொந்த ஊரைவிட்டு வெளியேறி தனது அதிர்ஷ்டத்தைக் கண்டடையச் சென்றக் கதையைக் கூறுகிறார். ஆனால் வேறொரு நண்பர் அவரை தேவாலயத்திற்கு அழைத்துச் செல்ல, அங்கு அவர் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டார். 

ஓர் இளைஞன் “பில்லிசூனியத்தில் மூழ்கியிருந்த” தனது மக்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்ல விரும்பினான். அதனால் ஜனங்களை சந்திக்க ஓர் ஊழியக்காரரைத் தேடினான். ஆனால் ஊழியக்காரரோ அவரிடம் “கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்” (மாற்கு 5:19 ஐப் பார்க்கவும்). அதைத்தான் அந்த இளைஞன் செய்தான். அவனது சொந்த ஊரில் பலர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். அந்தப் பட்டணத்தில் இருந்த மாயவித்தைக்கார மருத்துவர் இயேசுவே “வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்” (யோவான் 14:6) என்று ஏற்றுக்கொண்டபோது மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. அவன் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்த பிறகு, அவரைப் பற்றி ஊர் முழுவதும் கூறினான். நான்கு ஆண்டுகளுக்குள், ஓர் இளைஞனின் சாட்சி அப்பகுதியில் ஏழு திருச்சபைகளை நிறுவ வழிவகுத்தது.

2 கொரிந்தியரில், கிறிஸ்துவை இன்னும் அறியாதவர்களுக்கு நற்செய்தியை அறிமுகப்படுத்துவதற்கான தெளிவான திட்டத்தை பவுல் முன்வைக்கிறார். அது அந்த இளைஞனுக்கு சொல்லப்பட்ட ஆலோசனையோடு ஒத்துப்போகிறது. “ஆனபடியினாலே... நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்“ (2 கொரிந்தியர் 5:20). ஒவ்வொரு விசுவாசியிடமும் இயேசு எவ்வாறு அவர்களை புது சிருஷ்டியாய் மாற்றியிருக்கிறார் என்றும் தேவனோடு அவர்கள் எவ்விதம் ஒப்புரவானார்கள் என்றும் சொல்ல ஓர் தனித்துவமான கதை உள்ளது (வச. 17-18). அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வோம்.

 

முத்தத்தோடு திருத்துதல்

ஜார்ஜ் மெக்டொனால்ட் “ஞானமுள்ள ஸ்திரீ” என்ற தனது உவமையில் இரண்டு சிறுமிகளின் கதையைக் கூறுகிறார். அவர்களின் சுயநலம் அவர்கள் உட்பட அனைவருக்கும் துன்பத்தைத் தருகிறது. ஓர் ஞானமுள்ள பெண் அவர்களை மாற்றுவதற்கு தொடர்ச்சியான சோதனைகளை கொடுத்து அவர்களை மீண்டுவரச் செய்கிறாள். 

அந்த இரண்டு பெண்களும் தங்களுக்கு நேரிட்ட ஒவ்வொரு சோதனையிலும் தோல்வியடைந்து அவமானம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு ஆளான பிறகு, அவர்களில் ஒருவரான ரோசாமண்ட், தன்னை மாற்றிக்கொள்ள முடியாது என்பதை இறுதியாக உணர்ந்தாள். “உன்னால் எனக்கு உதவ முடியவில்லையா?” என்று அறிவுள்ள பெண்ணிடம் கேட்கிறாள். “இப்போது நீ என்னிடம் கேட்டால் ஒருவேளை என்னால் முடியலாம்” என்று அந்தப் பெண் பதிலளிக்கிறாள். புத்திசாலித்தனமான பெண்ணால் கிடைக்கப்பட்ட தெய்வீக உதவியால், ரோசாமண்ட் மாறத் தொடங்குகிறார். அப்போது அந்தப் பெண் தான் செய்த எல்லாப் பிரச்சனைகளையும் மன்னிப்பாளா என்று கேட்கிறாள். “நான் உன்னை மன்னிக்கவில்லை என்றால், உன்னை தண்டிக்க நான் ஒருபோதும் சிரமப்பட்டிருக்க மாட்டேன்” என்று அந்த பெண் கூறுகிறாள்.

தேவன் நம்மை சிட்சிக்கும் தருணங்கள் உள்ளன. ஏன் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். அவரது சிட்சையானது பழிவாங்குதல் மூலம் இயக்கப்படவில்லை, மாறாக நம் நலனில் தகப்பனின் அக்கறையால் இயக்கப்படுகிறது (எபிரெயர் 12:6). அவருடைய “பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டும்”, “நீதியாகிய சமாதான பலனை” (வச. 10-11) அடையும்பொருட்டும் அவர் விரும்புகிறார். சுயநலம் துன்பத்தைத் தருகிறது, ஆனால் பரிசுத்தம் நம்மை முழுமையாகவும், மகிழ்ச்சியாகவும், அவரைப்போல் “அழகாகவும்” மாற்றுகிறது.

தன்னைப் போன்ற சுயநலமிக்க பெண்ணை எப்படி நேசிக்க முடியும் என்று அந்த புத்திசாலியான பெண்ணிடம் ரோசாமண்ட் கேட்கிறாள். அவளை முத்தமிட குனிந்து, “நீ என்னவாக இருக்கப் போகிறாய் என்பதை நான் பார்த்தேன்" என்று இவள் பதிலளித்தாள். தேவனுடைய சிட்சையானது அன்போடும், எதிர்காலத்தில் நாம் யாராக இருக்கப்போகிறோம் என்ற புரிதலோடும் வருகிறது.

 

வானத்தை அண்ணாந்து பார்

அலெக்ஸ் ஸ்மாலி, அனைவரும் சீக்கிரமாய் எழுந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார், ஏன்? சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றைப் பார்ப்பதற்க்காக. பிரமிப்பைத் தூண்டும் வானிலை விளைவுகள் குறித்த பிரிட்டிஷ் ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளரான ஸ்மாலியின் கூற்றுப்படி, அந்த விரைவான தருணங்கள் நாளின் மிகவும் அழகான, பிரமிக்க வைக்கும் நேரங்களாகும். நீல வானங்கள் அல்லது பளபளக்கும் இரவுக் காட்சிகளைவிடவும், அற்புதமான சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் மனநிலையை மேம்படுத்தலாம்; நேர்மறையான உணர்ச்சிகளை அதிகரிக்கலாம் மற்றும் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம். ஸ்மாலி கூறும்போது, “பெரிய மற்றும் மிகப்பெரிய அல்லது இந்த பிரமிப்பு உணர்வை உருவாக்கும் ஒன்றை நீங்கள் காணும்போது, உங்கள் சொந்த பிரச்சனைகள் குறைந்துவிடும், ஆகையால் நீங்கள் அவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படவேண்டாம்” என்று குறிப்பிடுகிறார். 

ஆச்சரியமான அவரது கண்டுபிடிப்புகள் தீர்க்கதரிசி எரேமியாவின் கண்டுபிடிப்புகளை எதிரொலிக்கின்றன: “ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையம் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை” (எரேமியா 32:17). 

தாவீது ராஜாவும் தேவனுடைய படைப்பைப் பார்த்து, “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (சங்கீதம் 19:1) என்கிறார். சூரியனைப் பொறுத்தவரை, அது வானத்தின் ஒரு முனையில் உதித்து மறுமுனையில் சுற்றி, அதின் வெப்பத்தால் யாரும் பாதிக்கப்படாத வகையில் செயல்படுகிறது. ஆகையால், தாவீது எழுதும்போது, “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது” (வச. 7) என்று எழுதுகிறார். தேவனுடைய மகிமையான படைப்பு சர்வ வல்லமையுள்ள சிருஷ்டிகரை பிரதிபலிக்கிறது. வானத்தை அண்ணாந்து பார்த்து, அவரை வியக்க ஏன் இன்று நேரம் ஒதுக்கக்கூடாது!