ஜார்ஜ் மெக்டொனால்ட் “ஞானமுள்ள ஸ்திரீ” என்ற தனது உவமையில் இரண்டு சிறுமிகளின் கதையைக் கூறுகிறார். அவர்களின் சுயநலம் அவர்கள் உட்பட அனைவருக்கும் துன்பத்தைத் தருகிறது. ஓர் ஞானமுள்ள பெண் அவர்களை மாற்றுவதற்கு தொடர்ச்சியான சோதனைகளை கொடுத்து அவர்களை மீண்டுவரச் செய்கிறாள். 

அந்த இரண்டு பெண்களும் தங்களுக்கு நேரிட்ட ஒவ்வொரு சோதனையிலும் தோல்வியடைந்து அவமானம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு ஆளான பிறகு, அவர்களில் ஒருவரான ரோசாமண்ட், தன்னை மாற்றிக்கொள்ள முடியாது என்பதை இறுதியாக உணர்ந்தாள். “உன்னால் எனக்கு உதவ முடியவில்லையா?” என்று அறிவுள்ள பெண்ணிடம் கேட்கிறாள். “இப்போது நீ என்னிடம் கேட்டால் ஒருவேளை என்னால் முடியலாம்” என்று அந்தப் பெண் பதிலளிக்கிறாள். புத்திசாலித்தனமான பெண்ணால் கிடைக்கப்பட்ட தெய்வீக உதவியால், ரோசாமண்ட் மாறத் தொடங்குகிறார். அப்போது அந்தப் பெண் தான் செய்த எல்லாப் பிரச்சனைகளையும் மன்னிப்பாளா என்று கேட்கிறாள். “நான் உன்னை மன்னிக்கவில்லை என்றால், உன்னை தண்டிக்க நான் ஒருபோதும் சிரமப்பட்டிருக்க மாட்டேன்” என்று அந்த பெண் கூறுகிறாள்.

தேவன் நம்மை சிட்சிக்கும் தருணங்கள் உள்ளன. ஏன் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். அவரது சிட்சையானது பழிவாங்குதல் மூலம் இயக்கப்படவில்லை, மாறாக நம் நலனில் தகப்பனின் அக்கறையால் இயக்கப்படுகிறது (எபிரெயர் 12:6). அவருடைய “பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டும்”, “நீதியாகிய சமாதான பலனை” (வச. 10-11) அடையும்பொருட்டும் அவர் விரும்புகிறார். சுயநலம் துன்பத்தைத் தருகிறது, ஆனால் பரிசுத்தம் நம்மை முழுமையாகவும், மகிழ்ச்சியாகவும், அவரைப்போல் “அழகாகவும்” மாற்றுகிறது.

தன்னைப் போன்ற சுயநலமிக்க பெண்ணை எப்படி நேசிக்க முடியும் என்று அந்த புத்திசாலியான பெண்ணிடம் ரோசாமண்ட் கேட்கிறாள். அவளை முத்தமிட குனிந்து, “நீ என்னவாக இருக்கப் போகிறாய் என்பதை நான் பார்த்தேன்” என்று இவள் பதிலளித்தாள். தேவனுடைய சிட்சையானது அன்போடும், எதிர்காலத்தில் நாம் யாராக இருக்கப்போகிறோம் என்ற புரிதலோடும் வருகிறது.