எனது நண்பர்களான அல் மற்றும் கேத்தி ஷிஃபர் அவர்களின் இரண்டாம் உலகப் போரின் காலகட்ட விமானத்தை கண்காட்சியில் பறக்கவிட்டபோது, வயதான போர் வீரர்களின் உணர்ச்சிகள்தான் அவர்களுக்கு முக்கியமாய் தோன்றியது. தாங்கள் பணியாற்றிய போர்கள் மற்றும் அவர்கள் பறந்த விமானங்கள் பற்றி பேசுவதற்காக அவர்கள் முன்வந்தனர். அவர்களின் பெரும்பாலான போர்க் கதைகள் கண்ணீருடன் சொல்லப்பட்டன. பலர் தங்கள் நாட்டுக்கு சேவை செய்யும்போது பெற்ற சிறந்த செய்தி, “போர் முடிந்துவிட்டது, வீரர்களே; வீட்டிற்குச் செல்லவேண்டிய நேரம் இது” என்பதாகும். 

முந்தைய தலைமுறையினரின் இந்த வார்த்தைகள், பிசாசோடு விசுவாச யுத்தத்தில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவர்களோடு தொடர்புடையது. பேதுரு “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேதுரு 5:8) என்று நம்மை எச்சரிக்கிறார். அவன் பல்வேறு வழிகளில் நம்மை தூண்டி, துன்பத்திலும் துன்புறுத்தலிலும் ஊக்கமின்மையைப் பயன்படுத்தி, இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்து நம்மை விலக்க முயற்சிக்கிறான். பேதுரு தனது முதல் வாசகர்களுக்கும் இன்று நமக்கும் “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்” (1 பேதுரு 5:8) என்று சவால் விடுக்கிறார். நாம் பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து இருக்கிறோம். எனவே சத்துரு நம்மை யுத்தத்தில் சரணடையச் செய்து நம்மை வீழ்த்த அனுமதிக்கமாட்டோம்.

ஓர் நாள் இயேசு திரும்பி வருவார் என்பதை நாம் அறிவோம். அவர் வரும்போது, அவருடைய வார்த்தைகள் அந்த போர்க்கால வீரர்கள் உணர்ந்ததைப் போன்ற விளைவை ஏற்படுத்தும். நம் கண்களில் கண்ணீரையும், நம் இதயங்களில் மகிழ்ச்சியையும் வரவழைக்கும்: “போர் முடிந்துவிட்டது, வீரர்களே; வீட்டிற்குச் செல்லவேண்டிய நேரம் இது.”