Archives: ஏப்ரல் 2024

பட்டணத்தில் மகிழ்ச்சி

 

2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ்-ம் அர்ஜென்டினாவும் மோதியபோது, அது “வரலாற்றில் மிகப் பெரிய உலகக் கோப்பைப் போட்டி” என்று பலர் அழைக்கும் ஓர் நம்பமுடியாத போட்டியாக இருந்தது. கூடுதல் நேரத்தின் இறுதி நொடிகள் நிறைவடைந்தபோது, கோல் 3-3 என சமநிலையில் இருந்ததனால் கால்பந்து அணிகள் பெனால்டி உதைக்கு அனுப்பப்பட்டன. அர்ஜென்டினா வெற்றி இலக்கை எட்டியதையடுத்து, நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் மூழ்கியது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான அர்ஜென்டினா மக்கள் புவெனஸ் அயர்ஸ் நகரில் கூட்டங்கூடினர். இந்த ஆரவாரமான, மகிழ்ச்சியான காட்சியைக் காட்டும் ட்ரோன் கேமரா காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது. ஓர் பிபிசி செய்தியறிக்கை நகரம் மகிழ்ச்சியில் எவ்விதம் மூழ்கியது என்பதை விவரித்தது.

மகிழ்ச்சி எப்போதும் ஓர் அற்புதமான பரிசு. ஒரு நகரமும் அதிலுள்ள மக்களும் நீடித்த மகிழ்ச்சியை எவ்விதம் அனுபவிக்கக்கூடும் என்று நீதிமொழிகள் விவரிக்கிறது. “நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்” (நீதிமொழிகள் 11:10) என்று நீதிமொழிகள் கூறுகிறது. மனுஷீகத்தைக் குறித்த தேவனுடைய தெய்வீகத் திட்டத்தின்படி வாழ்கிறவர்கள், சமூகத்தில் நல்ல பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு செய்யும்போது தேவனுடைய நீதி ஆளுகை செய்கிறது என்கிற  நற்செய்தியை மக்கள் பெறுகின்றனர். பேராசை குறைகிறது. ஏழைகளுக்கு ஆதரவு கிடைக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். எப்பொழுதெல்லாம் தேவனுடைய திட்டத்திற்கேற்ற வாழ்க்கைமுறை செழித்தோங்குகிறதோ, அப்போது நகரத்தில் மகிழ்ச்சியும் “ஆசீர்வாதமும்” தங்கும் (வச. 11).

நாம் தேவனுடைய வழிகளை உண்மையாக பின்பற்றினால், அதன் விளைவு அனைவருக்கும் நன்மை அளிப்பதாய் இருக்கும். நாம் வாழும் முறை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை சிறப்பாகவும், முழுமையாகவும் மாற்றும். உலகை பண்படுத்துவதற்கான தெய்வீக முயற்சியில் ஓர் அங்கத்தினராய் செயல்படுவதற்கு தேவன் நம்மை அழைக்கிறார். நகரத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர அவர் நம்மை அழைக்கிறார்.

ஐந்து நற்காரியங்கள்

தங்களிடம் இருப்பவைகளுக்காக நன்றிசொல்லும் குணம்கொண்டவர்கள் நல்ல தூக்கம், குறைவான நோயின் அறிகுறிகள், மற்றும் அதிக மகிழ்ச்சியை சுதந்தரிக்கின்றனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஈர்க்கக்கூடியவைகள். உளவியலாளர்கள் நமது நல்வாழ்வை மேம்படுத்த ஒவ்வொரு வாரமும் நாம் நன்றி செலுத்தவேண்டிய ஐந்து காரியங்களை ஒரு “நன்றி செலுத்தும் குறிப்பில்” எழுதும்படிக்கு பரிந்துரைக்கின்றனர்.

வேதம் நீண்ட காலமாக நன்றியுணர்வு நடைமுறையை ஊக்குவித்துள்ளது. உணவு மற்றும் திருமணம் முதல் (1 தீமோத்தேயு 4:3-5) படைப்பின் அழகுகள் (சங்கீதம் 104) வரை, இதுபோன்ற விஷயங்களை வரமாகப் பார்க்கவும், அவற்றை நமக்கு அருளும் தேவனுக்கு நன்றி செலுத்தவும் வேதம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. சங்கீதம் 107, நன்றியுள்ளவர்களாக இருக்கக்கூடிய ஐந்து விஷயங்களைப் பட்டியலிடுகிறது: வனாந்திரத்திலிருந்து அவர்களை மீட்டதற்காய் (வச. 4-9), சிறையிருப்பிலிருந்து விடுவித்ததற்காய் (வச. 10-16), நோயிலிருந்து குணப்படுத்தியதற்காய் (வச. 18-22), செங்கடலிலிருந்து பாதுகாத்ததற்காய் (வச. 23-32), மற்றும் வறண்ட நிலத்தில் அவர்களை செழிப்பாய் வாழச்செய்ததற்காய் (வச. 33-42). “கர்த்தரைத் துதியுங்கள்” என்று சங்கீதம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. ஏனெனில் இவை அனைத்தும் தேவனுடைய “மாறாத அன்பின்” அடையாளங்கள் (வச. 8, 15, 21, 31).

உங்கள் கைகளில் சிறிய நோட்டு கைவசம் இருக்கிறதா? இப்போது நீங்கள் நன்றி செலுத்த விரும்பும் ஐந்து நல்ல விஷயங்களை ஏன் எழுதக்கூடாது? அவை நீங்கள் இப்போது சாப்பிட்ட உணவாக இருக்கலாம், உங்கள் திருமணமாக இருக்கலாம் அல்லது இஸ்ரேலைப்போல் இன்றுவரை உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய மீட்பு கிரியைகளாய் இருக்கலாம். வெளியே பாடும் பறவைகளுக்கும், உங்கள் சமையலறையிலிருந்து வரும் வாசனைக்கும், உங்கள் நாற்காலியின் வசதிக்கும், அன்புக்குரியவர்களின் முணுமுணுப்புகளுக்கும் நன்றி சொல்லுங்கள். அவைகள் ஒவ்வொன்றும் நமக்கருளப்பட்ட வரங்கள்; தேவனுடைய மாறாத அன்பின் அடையாளங்கள்.

கிறிஸ்துவில் நம்முடைய புதிய சுபாவம்

எங்களுக்கு சொந்தமான பைன்மரமானது, பைன்கூம்புகளையும் ஊசியிலைகளையும் உதிர்க்கத் துவங்கியது. மர மருத்துவர் அதை ஒருமுறை ஆராய்ந்துப் பார்த்துப் பிரச்சனையை விளக்கினார். அவர் “இது ஓர் ஊசியிலை கொண்ட பைன் மரம்” என்று சொன்னார். அவர் வேறு ஏதாகிலும் புதிய விளக்கத்தைக் கொடுப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் மீண்டும் “இது ஓர் ஊசியிலை மரம்” என்று சாதாரணமாய் சொல்லிவிட்டார். ஊசியிலை பைன் மரங்கள் அவற்றை உதிர்க்கும் விதத்திலேயே உண்டாக்கப்பட்டுள்ளது. அதனை யாராலும் மாற்றியமைக்க முடியாது. 

அதிர்ஷ்டவசமாக, நமது ஆவிக்குரிய வாழ்க்கையானது மாற்றவே முடியாத செயல்கள் அல்லது அணுகுமுறைகளால் வரையறுக்கப்படவில்லை. எபேசுவில் புதிய விசுவாசிகளுக்கு இந்த விடுதலையான உண்மையை பவுல் வலியுறுத்தினார். புறஜாதி மக்கள் தங்கள் “புத்தியில் அந்தகாரப்பட்டு” இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தேவனுக்கு அந்நியராய் இருக்கிறார்கள் என்றும் “சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்” என்றும் குறிப்பிடுகிறார் (எபேசியர் 4:18-19).

ஆனால் இயேசுவையும் அவருடைய சத்தியத்தையும் கேட்டறிந்த பின்னர், “பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோடுங்கள்” (வச. 22) என்று வலியுறுத்துகிறார். நம்முடைய பழைய வாழ்க்கையானது இச்சையினாலும் காமவிகாரங்களினாலும் எவ்விதம் பாதிக்கப்பட்டிருந்தது என்று குறிப்பிடுகிறார். மேலும் “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிடுகிறார் (வச. 22-24). 

பின்னர் அவர் வாழ்வதற்கான புதிய வழிகளைப் பட்டியலிடுகிறார். பொய் சொல்லாதிருங்கள். கோபத்தை வெறுத்திடுங்கள். சபிப்பதை நிறுத்துங்கள். திருடுவதை விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக, “குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்” (வச. 28) என்று வலியுறுத்துகிறார். கிறிஸ்துவில் உருவான நம்முடைய புதிய சுபாவம், நம்முடைய இரட்சகருக்கு விருப்பமான, நமது அழைப்பிற்கு தகுதியான ஓர் வாழ்க்கையை வாழ வழிவகுக்கிறது. 

 

தேவனுடைய தற்போதைய மற்றும் நிரந்திர பிரசன்னம்

மிர்னாளினி சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு இருந்த கிறிஸ்தவ நண்பர்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை எப்படிக் கையாண்டார்கள் என்பதை அவள் மதித்தாள். அவர்கள் மீது கொஞ்சம் பொறாமைகூட அவளுக்கு இருந்தது. ஆனால் மிர்னாளினி அவர்கள் வாழ்ந்ததுபோல் வாழ முடியும் என்று நினைக்கவில்லை. கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு அதிக ஒழுங்குகளை கையாளவேண்டும் என்று எண்ணியிருந்தாள். இறுதியில் ஓர் கல்லூரி மாணவி, இயேசு அவளுடைய வாழ்க்கையை பாழாக்குகிற தேவனல்ல, மாறாக, வாழ்க்கையின் கடினமான தருணங்களில், அவர் நம்மோடிருந்து உதவிசெய்கிற தேவன் என்று அவளுக்கு உணர்த்தினாள். அதை புரிந்துகொண்ட மாத்திரத்தில், மிர்னாளினி, இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் அவளுக்கான தெய்வீக அன்பையும் ருசிக்க தீர்மானித்தாள். 

சாலொமோன் ராஜாவும் மிர்னாளினிக்கு இதேபோன்ற அறிவுரைகளை வழங்கியிருக்கலாம். இந்த உலகத்திற்கு அதன் பாடுகள் உண்டு என்பதை அவர் ஒப்புக்கொள்ளுகிறார். “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” (பிரசங்கி 3:1) என்றும் “புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு” (வச. 4) என்றும் பிரசங்கி சொல்லுகிறார். அதுமட்டுமல்ல, இன்னும் அநேகம் இருக்கிறது. தேவன் “உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்” (வச. 11). உலகம் என்றால், தேவனுக்கு முன்பாக நாம் வாழும் வாழ்க்கையைக் குறிக்கிறது. 

மிர்னாளினி இயேசுவை விசுவாசித்தபோது (யோவான் 10:10), அவர் வாக்களித்த நிறைவான வாழ்க்கையை பெற்றுக்கொண்டாள். அதைக்காட்டிலும் மேலானவைகளையும் பெற்றாள். விசுவாசத்தின் மூலம் அவளுடைய இருதயத்தில் இருக்கும் நித்தியமானது (பிரசங்கி 3:11), பிரச்சனையில்லாத எதிர்காலத்தையும் (ஏசாயா 65:17) நித்தியமான தேவனுடைய பிரசன்னத்தையும் அடையாளப்படுத்துகிறது. 

கர்த்தருடைய புயத்தில்

அந்தத் துளையிடும் கருவியின்  சத்தம் ஐந்து வயது சாராவை பயமுறுத்தியது. அவள் பல் மருத்துவரின் நாற்காலியில் இருந்து குதித்து ஓடி மீண்டும் உள்ளே வருவதற்கு மறுத்துவிட்டாள். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தலையசைத்தவாறே, பல் மருத்துவர் அவளுடைய தந்தையைப் பார்த்து, “நீங்கள் நாற்காலியில் ஏறி அமருங்கள்” என்று கூறினார். ஜேசனும், சிகிச்சை எவ்வளவு இலகுவானது என்பதை காண்பிப்பதற்காக மருத்துவர் தன்னை ஏறி அமரும்படிக்கு சொல்லுகிறார் என்று எண்ணி, நாற்காலியில் ஏறி அமர்ந்தார். ஆனால், மருத்துவர் அவளிடம் திரும்பி, “இப்போது மேலே ஏறி அப்பாவின் மடியில் உட்காரு” என்றார். அவளது தந்தை இப்போது அவளை உறுதியளிக்கும் கரங்களில் ஏந்தியிருப்பதால், சாரா முற்றிலும் நிதானமாகிவிட்டாள். இப்போது பல் மருத்துவரால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கமுடிந்தது. 

அன்று, ஜேசன் தன் பரலோகத் தகப்பனின் பிரசன்னத்தின் ஆறுதலைப் பற்றிய ஓர் சிறந்த பாடத்தைக் கற்றுக்கொண்டார். “சில வேளைகளில் நாம் கடந்துசெல்லவேண்டிய துயரமான பாதையினூடாய்  தேவன் நம்மை நடத்திச்செல்வார்.” ஆனால் “நான் உன்னோடேகூட இருக்கிறேன்” என்று அவர் விளங்கப்பண்ணுகிறார். 

 சங்கீதம் 91, தேவனுடைய ஆறுதலான பிரசன்னத்தையும் வல்லமையையும் பற்றிக் கூறுகிறது. அவை நம்முடைய சோதனைகளை எதிர்கொள்ள நமக்கு பெலனை அளிக்கிறது. அவருடைய வல்லமையின் கரத்தில் பாதுகாப்பாய் இருப்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. அதே போன்று அவரை நேசிப்பவர்களுக்கு “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” (வச. 15) என்று வாக்களிக்கப்படுகிறது. 

வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பல சவால்கள் மற்றும் சோதனைகள் உள்ளன. மேலும் நாம் தவிர்க்க முடியாமல் வலியையும் துன்பத்தையும் கடந்து செல்லவேண்டியிருக்கும். ஆனால் தேவனுடைய வல்லமையின் கரங்கள் நம்மைச் சுற்றியிருப்பதால், நம் நெருக்கடிகளையும் சூழ்நிலைகளையும் நாம் தாங்கிக்கொள்ள முடிகிறது. மேலும் நாம் அவரில் வளரும்போது, நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவாராக.