எங்களுக்கு சொந்தமான பைன்மரமானது, பைன்கூம்புகளையும் ஊசியிலைகளையும் உதிர்க்கத் துவங்கியது. மர மருத்துவர் அதை ஒருமுறை ஆராய்ந்துப் பார்த்துப் பிரச்சனையை விளக்கினார். அவர் “இது ஓர் ஊசியிலை கொண்ட பைன் மரம்” என்று சொன்னார். அவர் வேறு ஏதாகிலும் புதிய விளக்கத்தைக் கொடுப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் மீண்டும், “இது ஓர் ஊசியிலை மரம்” என்று சாதாரணமாய் சொல்லிவிட்டார். ஊசியிலை பைன் மரங்கள் அவற்றை உதிர்க்கும் விதத்திலேயே உண்டாக்கப்பட்டுள்ளது. அதனை யாராலும் மாற்றியமைக்க முடியாது. 

அதிர்ஷ்டவசமாக, நமது ஆவிக்குரிய வாழ்க்கையானது மாற்றவே முடியாத செயல்கள் அல்லது அணுகுமுறைகளால் வரையறுக்கப்படவில்லை. எபேசுவில் புதிய விசுவாசிகளுக்கு இந்த விடுதலையான உண்மையை பவுல் வலியுறுத்தினார். புறஜாதி மக்கள் தங்கள் “புத்தியில் அந்தகாரப்பட்டு” இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தேவனுக்கு அந்நியராய் இருக்கிறார்கள் என்றும் “சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்” என்றும் குறிப்பிடுகிறார் (எபேசியர் 4:18-19).

ஆனால் இயேசுவையும் அவருடைய சத்தியத்தையும் கேட்டறிந்த பின்னர், “பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோடுங்கள்” (வச. 22) என்று வலியுறுத்துகிறார். நம்முடைய பழைய வாழ்க்கையானது இச்சையினாலும் காமவிகாரங்களினாலும் எவ்விதம் பாதிக்கப்பட்டிருந்தது என்று குறிப்பிடுகிறார். மேலும் “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிடுகிறார் (வச. 22-24). 

பின்னர் அவர் வாழ்வதற்கான புதிய வழிகளைப் பட்டியலிடுகிறார். பொய் சொல்லாதிருங்கள். கோபத்தை வெறுத்திடுங்கள். சபிப்பதை நிறுத்துங்கள். திருடுவதை விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக, “குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்” (வச. 28) என்று வலியுறுத்துகிறார். கிறிஸ்துவில் உருவான நம்முடைய புதிய சுபாவம், நம்முடைய இரட்சகருக்கு விருப்பமான, நமது அழைப்பிற்கு தகுதியான ஓர் வாழ்க்கையை வாழ வழிவகுக்கிறது.