Archives: பிப்ரவரி 2024

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், "இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை" என்று எழுதப்பட்டுள்ளது. 

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: "கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?" (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக "ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?" எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், "நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்"(வ. 5). பிரசங்கி 3:11, "அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்" என்று நமக்கு நினைவூட்டுகிறது. 'நேர்த்தியாக" என்ற சொல்லுக்கு "பொருத்தமானது" அல்லது "மகிழ்ச்சியின் காரணம்" என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.

ஜெபிக்க தூண்டப்படல்

ஒரு சக பணியாளரின் ஜெபவாழ்க்கை எங்களது மேலாளரால் வளர்ச்சியடைந்ததாக ஒருமுறை என்னிடம் கூறினார். சற்று கடினமான எங்கள் மேலாளர், அவளுடன் சில ஆவிக்குரிய விஷயங்களை பகிர்ந்து அவள் அதிகமாக ஜெபிக்கத் தூண்டினார் என்று எண்ணி அதனால் நானும் ஊக்கமடைந்தேன். ஆனால் என் யூகம் தவறாயிற்று. எனது சக பணியாளரான தோழி இவ்விதமாக விளக்கினார்: "ஒவ்வொரு முறையும் மேளானா் வருவதைப் பார்த்ததும், நான் ஜெபிக்க ஆரம்பித்து விடுவேன்." அவருடன் பேசும் முன்பு ஒவ்வொரு முறையும்  அவள் ஜெபித்ததால், அவளுடைய ஜெப நேரம் அதிகரித்தது. ஏனெனில், தனது மேலாளருடன் பணியாற்றுவது சவாலானது, சரியான பணி உறவிற்குத் தேவனின் உதவி அவளுக்குத் தேவை என அறிந்திருந்தாள், அதனால் அவள் தேவனை அதிகம் கூப்பிட்டாள்.

கடினமான நேரங்களிலும், உரையாடல்கள் மத்தியிலும் ஜெபிக்கும் எனது சக பணியாளரின் பழக்கத்தை நானும் பின்பற்ற ஆரம்பித்தேன். இது வேதாகம பழக்கம்தான், 1 தெசலோனிக்கேயரில் கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு பவுல், "இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்" (5:17-18) என நினைவூட்டினார். நாம் எதை எதிர்கொண்டாலும், ஜெபிப்பதே சிறந்தது. இது நம்மைத் தேவனோடு இணைக்கவும், பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலுக்காக அவரை அழைக்கவும் உதவுகிறது (கலாத்தியர் 5:16). இதனால் நாம் மனித சித்தத்திற்கு இசைவதை தவிர்ப்போம். நாம் எதிர்க்கப்படும்போதும் "ஒருவருக்கொருவர் சமாதானமாக வாழ" (1 தெசலோனிக்கேயர் 5:13) நமக்கு உதவுகிறது.

தேவனுடைய ஒத்தாசையோடு, அவரில் மகிழ்ந்து, எல்லாவற்றுக்காகவும் ஜெபித்து, அடிக்கடி நன்றி கூறலாம். இயேசுவுக்குள் நம் சகோதர சகோதரிகளுடன் இன்னும் இசைவுடன் வாழ இவை நமக்கு உதவி செய்யும்.

தேவனின் அன்பு கரங்களில்

மற்றுமொரு வியாதிக்குப்பின், எனக்கு புரியாத என் கட்டுப்பாட்டிலில்லாத ஒரு காரியத்தைக் குறித்து நான் அதிகம் பயந்தேன். ஒருநாள் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கட்டுரையில்,  "பூமியின் சுழற்சி வேகம்" அதிகரித்துள்ளதால் , பூமி "தடுமாறுகிறது" மற்றும் "வேகமாக சுழல்கிறது" என்பதாக விஞ்ஞானிகள் எழுதியிருந்ததை வாசித்தேன். "உலக கடிகார நேரத்திலிருந்து ஒரு விநாடியை அதிகாரப்பூர்வமாக நீக்க வேண்டும்" என்று அவர்கள் கூறினார்கள். ஒரு விநாடி இழப்பு பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும், பூமியின் சுழற்சி மாறக்கூடும் என்பது எனக்கு ஒரு பெரிய தாக்கத்தைக் கொடுத்தது. சிறிய உறுதியற்ற தன்மை கூட என் விசுவாசத்தைத் தடுமாறச் செய்யும். இருப்பினும், தேவன் அனைத்தையும் ஆளுகிறார் என்பதை அறிவது, நாம் அறியாதவை எவ்வளவு பயமுறுத்துகிறதாயினும் அல்லது நம் சூழ்நிலைகள் எவ்வளவு நிலையற்றதாயினும், தேவனை நம்ப எனக்கு உதவுகிறது.

சங்கீதம் 90-ல் மோசே சொன்னார், "பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்." (வ. 2). எல்லா படைப்பின் மீதும் தேவனின் எல்லையற்ற வல்லமை, கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டவராக, காலம் தேவனைக் கட்டுப்படுத்த முடியாது என்று மோசே அறிவித்தார் (வ.3-6).

தேவனையும் அவர் உருவாக்கிய அற்புதமான உலகத்தையும் அறிய நாம் முயலும்போது; அவர், காலத்தையும் அனைத்து படைப்பையும் தொடர்ந்து  நேர்த்தியாக ஆளுவதைக்  கண்டுகொள்ளலாம். நமது வாழ்விலும்கூட புரியாத மற்றும் புதிதாக அறிந்த ஒவ்வொரு காரியத்தின் மத்தியிலும், தேவனை நம்பலாம். அவருடைய அனைத்துப் படைப்புகளும் அவரின் அன்பான கரங்களில் பாதுகாப்பாக உள்ளன.

இயேசுவில் வளா்தல்

நான் சிறுவனாயிருக்கும் போது, பெரியவர்களை ஞானிகளென்றும் தோற்கடிக்கப்படாதவர்களென்றும் நினைத்தேன். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும், எனக்கும் நான் வளர்ந்த பிறகு, அன்றன்று நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வரும் என்று நினைத்தேன். இப்படி, "ஒரு நாள்" என் வாழ்வில் பல ஆண்டுகளுக்குப் பின் வந்தது, அது எனக்குக் கற்றுக்கொடுத்தது என்னவென்றால், பல முறை, எனக்கு இன்னும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதே. குடும்பத்தில் நோய், வேலையில் பிரச்சினைகள் அல்லது ஒரு உறவில் மோதல் வந்தபோது, அந்த நேரத்தில் அவைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாததால், நான் போராட வேண்டியதாயிருந்தது, இவை எனக்கு விட்டு சென்ற ஒரே ஒரு வழி, நான் என் கண்களை மூடி, "ஆண்டவரே, என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கு உதவி செய்யும்" என்று மனதில் ஜெபிப்பது மட்டமேயாகும்.

அப்போஸ்தலன் பவுல் இந்த உதவியற்ற உணர்வை அனுபவித்தார். அவர் வாழ்விலிருந்த "முள்" அது சரீர நோயாக இருந்திருக்கலாம், அது அவருக்கு மிகுந்த வலியையும் தவிப்பையும் கொடுத்தது. ஆனால் இந்த முள்ளின் மூலம் தான் பவுல்  தேவனின் அன்பும், வாக்குத்தத்தங்களும், மற்றும் ஆசீர்வாதங்களும் தனது பலவீனத்தினால் பாடுகளைச் சகிக்கவும், மேற்கொள்ளவும் போதுமானதாக இருந்ததை அனுபவித்தார் (2 கொரிந்தியர் 12:9). தனிப்பட்ட பலவீனமும் உதவியற்ற தன்மையும் தோல்வி அல்ல என்பதை அவர் கற்றுக்கொண்டார். தேவனை நம்பி அவரிடம் நம்மை அர்ப்பணிக்கையில், இந்த சூழ்நிலைகளில் அவர் கிரியை செய்யும் கருவிகளாக அவைகளை மாற்றுகின்றார் (வ. 9-10).

நாம் வளர்ந்துவிட்டதால், நாம் எல்லாம் அறிந்தவர்கள் என்று அர்த்தமல்ல. நிச்சயமாக, வயதுக்கேற்ற ஞானத்தில் வளர்கிறோம், ஆனால், நமது பலவீனங்கள் நிஜத்தில் நாம் எவ்வளவு பெலனற்றவர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. நம்முடைய உண்மையான பெலன் கிறிஸ்துவில் இருக்கிறது: "அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்;" (வ.10). உண்மையிலேயே "வளர்வது" என்பது நமக்குத் தேவனின் உதவி தேவை என்பதை உணரும்போது வரும் வல்லமையை அறிவது, நம்புவது மற்றும் கீழ்ப்படிவது.

இயேசுவைப் போல நேசித்தல்

இத்தாலியின் காஸ்னிகோவைச் சேர்ந்த டான் குசெப் பெரடெல்லி  அனைவராலும் நேசிக்கப்பட்டவர் என்று கூறப்பட்டது. "சமாதானமும் நன்மையும்" என்று வாழ்த்திக்கொண்டே, டான் ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் நகரத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்த ஒரு அன்பான மனிதர். அனைவருக்கும் அயராது நன்மைகளைச் செய்து வந்தார். ஆனால், அவரது வாழ்க்கையின் இறுதியில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உடல்நலம் கவலைக்கிடமானது. அவர் வாழ்ந்த அந்தப் பகுதி மக்கள் அவருக்கு உதவ ஒரு சுவாசக் கருவியை வாங்கி கொடுத்தனர். ஆனால், அவரது நிலை மேலும் மோசமடைந்தபோது, அவர் சுவாசக் கருவியைப் பயன்படுத்த மறுத்து, அதை தேவையள்ள ஒரு இளம் நோயாளிக்குப் பயன்படுத்த கேட்டுக்கொண்டார். அவர் மறுத்ததைக் கேட்டது யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை, ஏனென்றால் பிறரை நேசிப்பதற்காகவே நேசிக்கப்பட்ட மற்றும் போற்றப்பட்ட ஒரு மனிதனுக்கான அவரது குணாதிசயத்தில் அது இருந்தது.

'நேசிக்கப்பட்டதற்காக நேசித்தல்', இதுவே அப்போஸ்தலன் யோவான் தனது சுவிசேஷம் முழுவதிலும் பறைசாற்றும் செய்தி. அன்புகூறப்படுவதும் பிறரிடம் அன்பு கூறுவதும், வானிலையைப் பொருட்படுத்தாமல் இரவும் பகலும் ஒலிக்கும் ஒரு ஆலய மணியைப் போன்றதாகும். யோவான் 15-ல், இப்படி அன்பு கூறுபவர்களின் உச்சகட்டம், அது அனைவராலும் விரும்பப்படுவதில்லை, ஆனால் அளவில்லாமல் எல்லோரையும் நேசிப்பதே மிகப்பெரிய அன்பு என்று யோவான் கூறுகிறார்: "ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அன்பு ஒருவரிடத்திலுமில்லை."(வ. 13).

மனிதர்களின் தியாக அன்பிற்கான எடுத்துக்காட்டுகள் எப்போதும் ஊக்குவிக்கின்றன. எனினும் தேவனின் மகாபெரிய அன்போடு ஒப்பிடுகையில் அவைகள் மங்கிப்போகின்றது. ஆனால் இயேசுவின் கட்டளையான, "நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது." (வ. 12) என்பது நாம் தவறவிடக்கூடாத அழைப்பு. ஆம், எல்லோரிடமும் அன்பாயிருப்போம்..