நான் சிறுவனாயிருக்கும் போது, பெரியவர்களை ஞானிகளென்றும் தோற்கடிக்கப்படாதவர்களென்றும் நினைத்தேன். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும், எனக்கும் நான் வளர்ந்த பிறகு, அன்றன்று நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வரும் என்று நினைத்தேன். இப்படி, “ஒரு நாள்” என் வாழ்வில் பல ஆண்டுகளுக்குப் பின் வந்தது, அது எனக்குக் கற்றுக்கொடுத்தது என்னவென்றால், பல முறை, எனக்கு இன்னும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதே. குடும்பத்தில் நோய், வேலையில் பிரச்சினைகள் அல்லது ஒரு உறவில் மோதல் வந்தபோது, அந்த நேரத்தில் அவைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாததால், நான் போராட வேண்டியதாயிருந்தது, இவை எனக்கு விட்டு சென்ற ஒரே ஒரு வழி, நான் என் கண்களை மூடி, “ஆண்டவரே, என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கு உதவி செய்யும்” என்று மனதில் ஜெபிப்பது மட்டமேயாகும்.

அப்போஸ்தலன் பவுல் இந்த உதவியற்ற உணர்வை அனுபவித்தார். அவர் வாழ்விலிருந்த “முள்” அது சரீர நோயாக இருந்திருக்கலாம், அது அவருக்கு மிகுந்த வலியையும் தவிப்பையும் கொடுத்தது. ஆனால் இந்த முள்ளின் மூலம் தான் பவுல்  தேவனின் அன்பும், வாக்குத்தத்தங்களும், மற்றும் ஆசீர்வாதங்களும் தனது பலவீனத்தினால் பாடுகளைச் சகிக்கவும், மேற்கொள்ளவும் போதுமானதாக இருந்ததை அனுபவித்தார் (2 கொரிந்தியர் 12:9). தனிப்பட்ட பலவீனமும் உதவியற்ற தன்மையும் தோல்வி அல்ல என்பதை அவர் கற்றுக்கொண்டார். தேவனை நம்பி அவரிடம் நம்மை அர்ப்பணிக்கையில், இந்த சூழ்நிலைகளில் அவர் கிரியை செய்யும் கருவிகளாக அவைகளை மாற்றுகின்றார் (வ. 9-10).

நாம் வளர்ந்துவிட்டதால், நாம் எல்லாம் அறிந்தவர்கள் என்று அர்த்தமல்ல. நிச்சயமாக, வயதுக்கேற்ற ஞானத்தில் வளர்கிறோம், ஆனால், நமது பலவீனங்கள் நிஜத்தில் நாம் எவ்வளவு பெலனற்றவர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. நம்முடைய உண்மையான பெலன் கிறிஸ்துவில் இருக்கிறது: “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்;” (வ.10). உண்மையிலேயே “வளர்வது” என்பது நமக்குத் தேவனின் உதவி தேவை என்பதை உணரும்போது வரும் வல்லமையை அறிவது, நம்புவது மற்றும் கீழ்ப்படிவது.