மற்றுமொரு வியாதிக்குப்பின், எனக்கு புரியாத என் கட்டுப்பாட்டிலில்லாத ஒரு காரியத்தைக் குறித்து நான் அதிகம் பயந்தேன். ஒருநாள் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கட்டுரையில்,  “பூமியின் சுழற்சி வேகம்” அதிகரித்துள்ளதால் , பூமி “தடுமாறுகிறது” மற்றும் “வேகமாக சுழல்கிறது” என்பதாக விஞ்ஞானிகள் எழுதியிருந்ததை வாசித்தேன். “உலக கடிகார நேரத்திலிருந்து ஒரு விநாடியை அதிகாரப்பூர்வமாக நீக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினார்கள். ஒரு விநாடி இழப்பு பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும், பூமியின் சுழற்சி மாறக்கூடும் என்பது எனக்கு ஒரு பெரிய தாக்கத்தைக் கொடுத்தது. சிறிய உறுதியற்ற தன்மை கூட என் விசுவாசத்தைத் தடுமாறச் செய்யும். இருப்பினும், தேவன் அனைத்தையும் ஆளுகிறார் என்பதை அறிவது, நாம் அறியாதவை எவ்வளவு பயமுறுத்துகிறதாயினும் அல்லது நம் சூழ்நிலைகள் எவ்வளவு நிலையற்றதாயினும், தேவனை நம்ப எனக்கு உதவுகிறது.

சங்கீதம் 90-ல் மோசே சொன்னார், “பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.” (வ. 2). எல்லா படைப்பின் மீதும் தேவனின் எல்லையற்ற வல்லமை, கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டவராக, காலம் தேவனைக் கட்டுப்படுத்த முடியாது என்று மோசே அறிவித்தார் (வ.3-6).

தேவனையும் அவர் உருவாக்கிய அற்புதமான உலகத்தையும் அறிய நாம் முயலும்போது; அவர், காலத்தையும் அனைத்து படைப்பையும் தொடர்ந்து  நேர்த்தியாக ஆளுவதைக்  கண்டுகொள்ளலாம். நமது வாழ்விலும்கூட புரியாத மற்றும் புதிதாக அறிந்த ஒவ்வொரு காரியத்தின் மத்தியிலும், தேவனை நம்பலாம். அவருடைய அனைத்துப் படைப்புகளும் அவரின் அன்பான கரங்களில் பாதுகாப்பாக உள்ளன.