செப்டம்பர், 2022 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread - Part 4

Archives: செப்டம்பர் 2022

ஆழத்திலிருந்து மீட்பு

2015 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், சென்னையில், 24 மணிநேரத்தில் 494 மி.மி என்ற அளவில் மழை கொட்டியது. மழை மாத்திரமின்றி சில நீர்த்தேக்கங்களும் திறக்கப்பட்டதால் சென்னை வெள்ளக்காடாகியது. 250க்கும் மேற்பட்ட ஜனங்கள் மரிக்கவே, சென்னை "பேரிடர் மண்டலமாக" அறிவிக்கப்பட்டது. இயற்கை சென்னையை வெள்ளத்தால் மூழ்கடிக்க, மீனவர்களோ நகரத்தை தங்கள் கருணைச் செயல்களால் நிறைத்தனர்.

மீனவர்கள், சுமார் 400 பேருக்கும் அதிகமானவர்களை துணிச்சலுடன் மீட்டனர். அநேக வீடுகள் தண்ணீரில் மூழ்கி, வாகனங்கள் மிதந்து கொண்டிருந்தன. தங்களை அர்ப்பணித்த இந்த மீனவர்களின் கருணையும், திறமையும்மட்டுமில்லையெனில் மரித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாயிருக்கும். பொதுவாக வாழ்வில் இதுபோன்ற புயல்களை நாம் அனுபவித்திருக்க மாட்டோம், ஆனால் நம்பிக்கையிழக்கும் நாட்களை நாம் நிச்சயமாக சந்தித்திருப்போம். அப்போது பாதுகாப்பற்றவர்களாய் உணர்விலும், மனதிலும், ஆவியிலும் பாதிக்கப்பட்டிருப்போம். வெள்ளம் நம் தலைமேல் புரண்டோடும். ஆனால் நாம் விரக்தியடையத் தேவையில்லை.

சங்கீதம் 18 ல், தாவீதின் எதிரிகள் அநேகராயும், பலவான்களாயும் இருந்ததை வாசிக்கிறோம். ஆனால், தேவன் அவர்கள் அனைவரிலும் பெரியவராய் இருந்தார். எவ்வளவு பெரியவர்? மிகப்பெரியவரும், மிக வல்லவருமாய் இருந்தார் (வ.1). எனவே அவரை வர்ணிக்க தாவீது பல உருவகங்களைப் பயன்படுத்துகிறார் (வ.2). ஆழமான ஜலப்பிரவாகத்தினின்றும், பலமான சத்துருக்களிடமிருந்தும் இரட்சிக்கத் தேவன் வல்லவராய் இருக்கிறார் (வ.16–17). அவர் எவ்வளவு பெரியவர்? நம் வாழ்வை மூழ்கடிக்கும் ஜலப்பிரவாகம் பெரிதாயும் ஆழமானதாயுமிருந்தாலும், இயேசுவென்ற அவர் நாமத்தை நாம் கூப்பிடுகையில், நமக்குப் போதுமானவராய் இருக்கிற பெரியவர் அவர் (வ.3).

அல்லேலூயா

உலகப் புகழ்பெற்ற “மேசியா கீதம்” என்ற இசையை இயற்ற, இசையமைப்பாளர் ஹாண்டலுக்கு, வெறும் இருபத்து நான்கு நாட்களே தேவைப்பட்டதென்பது வியக்கத்தகு  விஷயமாகும். இந்த இசைக் கச்சேரி பிரபலமான "அல்லேலூயா கோரஸ்" என்ற பல்லவியோடு ஆரம்பித்து சுமார் இரண்டு மணி நேரம் கழித்தே, உச்சத்தை எட்டும். வெளிப்படுத்தின விசேஷம் 11:15 ல் கூறப்பட்டுள்ள, இந்த சேர்ந்திசைப் பாடலை, பாடல் குழுவினர் உற்சாகத்தோடு, எக்காளங்களும், முரசுகளும் ஒலிக்க "அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்" என்று பாடுவர். இப்பாடல், பரலோகில் இயேசுவுடனான நித்திய நம்பிக்கையை ஜெயதொனியாக அறிவிக்கும் பாடலேயாகும்.

தன்னுடைய இறுதி நாட்களை நெருங்கிக்கொண்டிருந்த அப்போஸ்தலனாகிய யோவான், வெளிப்படுத்தின விசேஷத்தில், தான் தரிசனமாகக் கண்ட, கிறிஸ்துவின் வருகையோடு உச்சம்பெறும் நிகழ்வுகளை எழுதுகிறார். அக்கருத்தே மேசியா கீதத்திலும் இருந்தது. யோவான், உயிர்த்தெழுந்த இயேசுவானவர் திரும்பி வரும்போது, பாடகர் சத்தத்துடன் ஆரவாரம் உண்டாயிருக்குமென்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார் (19:1–8).

இயேசு கிறிஸ்து இருளின் அதிகாரத்தையும், மரணத்தையும் வென்று, சமாதானத்தின் ராஜ்யத்தை நிலை நாட்டியமைக்காய், உலகம் மகிழ்ந்து கொண்டாடும். ஒரு நாள் தேவப் பிள்ளைகளாகிய நாமனைவரும் சேர்ந்து, இயேசு கிறிஸ்துவின் மாட்சிமையையும், அவருடைய முடிவில்லா ராஜ்யத்தையும் குறித்து கம்பீரமாய்ப் பாடுவோம் (7:9). அதுவரை விசுவாசத்தோடு வாழ்ந்து, உழைத்து, ஜெபித்துக் காத்திருப்போம்.

எனக்கேற்ற இடம்

அந்தச் சபையின் ஸ்தோத்திரக் கூடுகையின் முடிவில், விசுவாசிகள் தங்கள் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும்வண்ணமாக சுற்றிநின்று நடனமாடினர். ரவி சற்றுத் தள்ளி நின்று, ஒரு பெரிய புன்னகையுடன் அதை ரசித்தார். இதுபோன்ற தருணங்கள் தனக்கு எவ்வளவாய் பிடிக்கிறது என்று வியந்தவாறே, "இப்போது இது என் குடும்பம், சமுதாயம், நான் நேசிக்கவும், நேசிக்கப்படவும் உரித்தான ஓரிடத்தைக் கண்டுகொண்டேன்" என்றார்.

சிறுவனாக, ரவி மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்தப்பட்டு மகிழ்ச்சியை இழந்திருந்தார். ஆனால், அருகேயிருந்த திருச்சபையினர் அவரை வரவேற்று இயேசுவை அறிமுகப்படுத்தினர். அவர்களுடைய ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இவரைத் தொற்றிக்கொள்ளவே, இயேசுவைப் பின்பற்றத் துவங்கி, நேசிக்கப்படுகிறவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும் உணர்ந்தார்.

சங்கீதம் 133 ல், தாவீது "நன்மையும் இன்பமுமான" தேவபிள்ளைகளின் ஐக்கியத்தை விவரிக்க வல்லமையான உருவகங்களைப் பயன்படுத்துகிறார். “அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்” (வ. 2) எனக் கூறுகிறார். இவ்வகையான அபிஷேக முறை பண்டைக்கால வழக்கமாகும், சிலசமயம் வீட்டிற்கு வரும் விருந்தாளியைக் கூட இப்படியே வரவேற்பர். மேலும் தாவீது, “எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (வ.3) என்று இந்த ஐக்கியமானது ஜீவனையும் ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறதாகக் கூறுகிறார் (வ.3). தைலமானது அறைமுழுதும் வாசனையைப் பரப்பும், பனியானது வறண்ட நிலத்தை ஈரமாக்கும். நாம் கிறிஸ்துவோடு ஐக்கியப்படுகையில், தனிமையானவர்களை ஏற்றுக்கொள்வது போன்ற பல நன்மையும், இன்பமுமான நன்மைகளை தேவன் நம் மூலமாக அளிப்பார்.

இணைந்திருக்கும் வீடு

ஜூன் 16, 1858 அன்று, அமெரிக்காவின் மேல் சட்டசபைக்கு, குடியரசு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான, ஆபிரகாம் லிங்கன், "பிரிக்கப்பட்ட வீடு" என்ற தலைப்பில் பிரசித்திபெற்ற ஒரு உரையை நிகழ்த்தினார். அதில், அமெரிக்காவிலுள்ள, அடிமைத்தனத்தின் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டினார். அப்பொழுது லிங்கனின் நண்பர்கள், எதிரிகள் என எல்லாரிடமிருந்தும் இப்பேச்சு ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது. மத்தேயு 12:25 ல் சொல்லப்பட்டுள்ள "பிரிக்கப்பட்ட வீடு" என்ற தலைப்பில் அவர் பேசியதற்கான காரணம், இவ்வுவமை எல்லாருக்கும் அறிமுகமானதொன்றாக இருந்தாலும், அதிகமாக வலியுறுத்தப்படவில்லை என்பதேயாகும்.

 

பிரிக்கப்பட்ட வீடு நிலைநிற்காது, இணைந்திருக்கும் வீடு நிலை நிற்கும். அடிப்படையில் தேவனின் வீடும் அப்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது (எபேசியர் 2:19). பலவகையான பின்னணிகளையுடைய மக்களாய் நாம் இருந்தாலும், இயேசுவின் சிலுவை மரணத்தால் நாம் தேவனோடும் மற்றவர்களோடும் ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறோம் (வ.14–16). இந்த சத்தியத்தைக் கருத்தில்கொண்டு (எபேசியர் 3 ஐ பார்க்கவும்) விசுவாசிகளுக்கு, "சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். (4:3) என பவுல் அறிவுறுத்துகிறார்.

இன்றைக்கும் விசுவாசக் குடும்பத்தினரை, இறுக்குமான காரியங்கள் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஆவியானவரின் துணையோடு நாம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையைக் காத்துக்கொள்ள, தேவன் நமக்குத் தேவையான பெலத்தையும் ஞானத்தையும் அருள்வாராக. இப்படிச் செய்வதால், பிரிந்து இருண்டுபோன இவ்வுலகிற்கு நாம் வெளிச்சமாவோம்.

ஒரு கதையாகிய திமிங்கலம்

மைக்கல் ஒரு கடல் நண்டைப் பிடிக்கப் போனபோது, ஒரு கூம்பு திமிங்கலம் அவரைக் கவ்வியது. அதின் வாயினுள், அகண்ட இருளில் சிக்கிய அவரை, திமிங்கலத்தின் தசைகள் நொறுக்கவே, தன் கதை முடிந்ததென்று நினைத்தார். திமிங்கலங்களுக்கு கடல் நண்டு பிடிப்பவர்கள் பிடிக்காது, எனவே முப்பது வினாடிகள் கழித்து, அது மைக்கலை வெளியே துப்பியது. ஆச்சரியப்படும்விதமாக, அவருக்கு எந்த எலும்பு முறிவும் இல்லை, வெளிப்புற சிராய்ப்புகள் தான் இருந்தது. அவருடைய அனுபவம் இப்பொழுது நம்முடன் பேசுகிறது. 

இதை அனுபவிக்கும் முதல் நபர் இவரில்லை. யோனாவை ஒரு பெரிய மீன் விழுங்கியது (யோனா 1:17), அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான், பிறகு அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது (1:17; 2:10). மைக்கலுக்கு நேர்ந்ததுபோல இதுவொரு விபத்தல்ல. யோனா, இஸ்ரவேலின் எதிரிகளை வெறுத்ததாலும், அவர்களுடைய மனந்திரும்புதலை விரும்பாததாலும், அந்தப் பெரிய மீனால் விழுங்கப்பட்டார். தேவன் யோனாவை நினிவேயில் பிரசங்கிக்கச் சொல்ல, இவரோ கப்பலேறி எதிர்த்திசையாய் போனார். ஆகவே தேவன் திமிங்கலம் போன்ற பெரிய மீனை அனுப்பி, தனக்கு செவி கொடுக்கும்படி செய்தார்.

யோனா அசீரியர்களை வெறுத்தது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. பண்டைய நாட்களில் அவர்கள் இஸ்ரவேலரை துன்புறுத்தினர், இஸ்ரவேலின் வடக்கு கோத்திரங்களைச் சிறையாக்கிக் கொண்டுபோகவே, தங்கள் அடையாளத்தையே இஸ்ரவேலர் இழந்தனர். அசீரியா மன்னிக்கப்படும் என்பதை யோனா ஏற்றுக்கொள்ளாததற்கான காரணம் இப்பொழுது நமக்குப் புரிகிறது.

யோனா தேவனை விட தேவ பிள்ளைகளுக்கு மிகவும் விசுவாசமுள்ளவனாய் இருந்தான். தேவனோ இஸ்ரவேலரின் எதிரிகளையும் நேசித்தார், அவர்கள் இரட்சிக்கப்படும்படி விரும்பினார். அவர் நம்முடைய எதிரிகளையும் நேசித்து, அவர்கள் இரட்சிக்கப்படும்படி விரும்புகிறார். தேவ ஆவியானவரின் வழிகாட்டுதலோடு, இயேசுவின் நற்செய்தியைச் சுமந்து அவர்களுக்கு நேரே விரைவோம்.