உலகப் புகழ்பெற்ற “மேசியா கீதம்” என்ற இசையை இயற்ற, இசையமைப்பாளர் ஹாண்டலுக்கு, வெறும் இருபத்து நான்கு நாட்களே தேவைப்பட்டதென்பது வியக்கத்தகு  விஷயமாகும். இந்த இசைக் கச்சேரி பிரபலமான “அல்லேலூயா கோரஸ்” என்ற பல்லவியோடு ஆரம்பித்து சுமார் இரண்டு மணி நேரம் கழித்தே, உச்சத்தை எட்டும். வெளிப்படுத்தின விசேஷம் 11:15 ல் கூறப்பட்டுள்ள, இந்த சேர்ந்திசைப் பாடலை, பாடல் குழுவினர் உற்சாகத்தோடு, எக்காளங்களும், முரசுகளும் ஒலிக்க “அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்” என்று பாடுவர். இப்பாடல், பரலோகில் இயேசுவுடனான நித்திய நம்பிக்கையை ஜெயதொனியாக அறிவிக்கும் பாடலேயாகும்.

தன்னுடைய இறுதி நாட்களை நெருங்கிக்கொண்டிருந்த அப்போஸ்தலனாகிய யோவான், வெளிப்படுத்தின விசேஷத்தில், தான் தரிசனமாகக் கண்ட, கிறிஸ்துவின் வருகையோடு உச்சம்பெறும் நிகழ்வுகளை எழுதுகிறார். அக்கருத்தே மேசியா கீதத்திலும் இருந்தது. யோவான், உயிர்த்தெழுந்த இயேசுவானவர் திரும்பி வரும்போது, பாடகர் சத்தத்துடன் ஆரவாரம் உண்டாயிருக்குமென்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார் (19:1–8).

இயேசு கிறிஸ்து இருளின் அதிகாரத்தையும், மரணத்தையும் வென்று, சமாதானத்தின் ராஜ்யத்தை நிலை நிலைநாட்டியதற்காக, உலகம் மகிழ்ந்து கொண்டாடும். ஒரு நாள் தேவப் பிள்ளைகளாகிய நாமனைவரும் சேர்ந்து, இயேசு கிறிஸ்துவின் மாட்சிமையையும், அவருடைய முடிவில்லா ராஜ்யத்தையும் குறித்து கம்பீரமாய்ப் பாடுவோம் (7:9). அதுவரை விசுவாசத்தோடு வாழ்ந்து, உழைத்து, ஜெபித்துக் காத்திருப்போம்.