2015 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், சென்னையில், 24 மணிநேரத்தில் 494 மி.மி என்ற அளவில் மழை கொட்டியது. மழை மட்டுமின்றி சில நீர்த்தேக்கங்களும் திறக்கப்பட்டதால் சென்னை வெள்ளக்காடாகியது. 250க்கும் மேற்பட்ட ஜனங்கள் மரிக்கவே, சென்னை “பேரிடர் மண்டலமாக” அறிவிக்கப்பட்டது. இயற்கை சென்னையை வெள்ளத்தால் மூழ்கடிக்க, மீனவர்களோ நகரத்தை தங்கள் கருணைச் செயல்களால் நிறைத்தனர்.

மீனவர்கள், சுமார் 400 பேருக்கும் அதிகமானவர்களை துணிச்சலுடன் மீட்டனர். அநேக வீடுகள் தண்ணீரில் மூழ்கி, வாகனங்கள் மிதந்து கொண்டிருந்தன. தங்களை அர்ப்பணித்த இந்த மீனவர்களின் கருணையும், திறமையும்மட்டுமில்லையெனில் மரித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாயிருக்கும். பொதுவாக வாழ்வில் இதுபோன்ற புயல்களை நாம் அனுபவித்திருக்க மாட்டோம், ஆனால் நம்பிக்கையிழக்கும் நாட்களை நாம் நிச்சயமாக சந்தித்திருப்போம். அப்போது பாதுகாப்பற்றவர்களாய் உணர்விலும், மனதிலும், ஆவியிலும் பாதிக்கப்பட்டிருப்போம். வெள்ளம் நம் தலைமேல் புரண்டோடும். ஆனால் நாம் விரக்தியடையத் தேவையில்லை.

சங்கீதம் 18 ல், தாவீதின் எதிரிகள் அநேகராயும், பலவான்களாயும் இருந்ததை வாசிக்கிறோம். ஆனால், தேவன் அவர்கள் அனைவரிலும் பெரியவராய் இருந்தார். எவ்வளவு பெரியவர்? மிகப்பெரியவரும், மிக வல்லவருமாய் இருந்தார் (வ.1). எனவே அவரை வர்ணிக்க தாவீது பல உருவகங்களைப் பயன்படுத்துகிறார் (வ.2). ஆழமான ஜலப்பிரவாகத்தினின்றும், பலமான சத்துருக்களிடமிருந்தும் இரட்சிக்கத் தேவன் வல்லவராய் இருக்கிறார் (வ.16–17). அவர் எவ்வளவு பெரியவர்? நம் வாழ்வை மூழ்கடிக்கும் ஜலப்பிரவாகம் பெரிதாயும் ஆழமானதாயுமிருந்தாலும், இயேசுவென்ற அவர் நாமத்தை நாம் கூப்பிடும்போது, நமக்குப் போதுமானவராய் இருக்கிற பெரியவர் அவர் (வ.3).