தேவனில் நடப்படுதல்
“காற்று இளஞ்சிவப்பு மலர்கள் மீது வீசுகிறது.” கவிஞர் சாரா டீஸ்டேலின் வசந்தகால கவிதையான “மே" என்று தலைப்பிடப்பட்ட கவிதையின் துவக்கவரிகள் இது. அதில் காற்றில் அசையும் இளஞ்சிவப்பு மலர்களை படம்பிடித்திருப்பார். ஆனால் டீஸ்டேல் காதல் தோல்வியை எண்ணி புலம்பி அப்பாடலை பாடுகிறார். ஆகையால் அவருடைய கவிதை விரைவில் சோகமாக மாறுகிறது.
எங்கள் கொல்லைப்புறத்தில் இருந்த இளஞ்சிவப்பு மலர்களும் ஒரு சவாலை எதிர்கொண்டது. அவைகள் பூத்துக் குலுங்கிய காலம் முடிந்தவுடன், எங்களின் தோட்டக்காரர் தன்னுடைய கூரான கோடாரியினால் அவைகளை குட்டையாக கத்தரித்தார். நான் அழுதேன். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தரிசாகக் கிடந்த கிளைகள், மீண்டும் வளர்ந்து பூத்துக் குலுங்கத் துவங்கியது. அவைகளுக்கு அவகாசம் தேவை. ஆகையால் நான் பார்க்காத ஒன்றிற்காய் நான் காத்திருக்க வேண்டியது அவசியமாயிருந்தது.
உபத்திரவத்தின் மத்தியிலும் விசுவாசத்தோடு காத்திருந்த பலரைக் குறித்து வேதம் சொல்லுகிறது. தாமதமான மழைக்காக நோவா காத்திருந்தார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் வாழ காலேப் நாற்பது ஆண்டுகள் காத்திருந்தார். ஒரு குழந்தையைப் பெற ரெபேக்காள் இருபது வருடங்கள் காத்திருந்தாள். யாக்கோபு ராகேலை திருமணம் செய்ய ஏழு ஆண்டுகள் காத்திருந்தார். சிமியோன் குழந்தை இயேசுவைப் பார்க்க காத்திருந்தார். அவர்களின் பொறுமைக்கு தக்க பலன் கிடைத்தது.
இதற்கு நேர்மாறாக, மனிதர்களைப் பார்ப்பவர்கள் “பாழான நிலங்களில் உள்ள புதர்களைப் போல இருப்பார்கள்" (எரேமியா 17:6). கவிஞர் டீஸ்டேல் தனது கவிதையை அத்தகைய இருளில் தான் முடித்தார். “நான் ஒரு குளிரின் நடுக்கத்தோடு போகிறேன்," என்று அவர் தனது கவிதையை நிறைவுசெய்தார். ஆனால், “கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று எரேமியா மகிழ்ச்சியடைகிறார். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்ட... மரத்தைப் போலிருப்பான்" (வச. 7-8). என் நம்பிக்கையானது, வாழ்க்கையின் இன்ப துன்பங்களில் நம்மோடு நடந்து வரும் தேவனில் நாட்டப்பட்டுள்ளது.
இயேசுவில் புதிய டி.என்.ஏ
கிறிஸ், தனது உயிர்காக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இரத்தத்தை பரிசோதனை செய்தார். அவருடைய சிகிச்சைக்கு தேவைப்பட்ட மஜ்ஜை நன்கொடையளித்தவரிடமிருந்து அவருக்கு கிடைத்தது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில், கிறிஸின் இரத்தத்தில் உள்ள டி.என்.ஏ அவரது நன்கொடையாளருடையது, அவருடையது அல்ல. பலவீனமான இரத்தத்தை நன்கொடையாளரின் ஆரோக்கியமான இரத்தத்துடன் மாற்றுவதே செயல்முறையின் குறிக்கோளாக இருந்ததால், இது அர்த்தமுள்ளதாகவே தென்பட்டது. ஆனாலும், கிறிஸின் கன்னங்கள், உதடுகள் மற்றும் நாக்கு அகியவை கூட நன்கொடையாளரின் டி.என்.ஏவையே காண்பித்தது. அவருடைய வெளிப்புறத்தோற்றம், எண்ணங்கள் ஆகியவைகளில் அவர் அவராகவே இருந்தாலும், ஏதோ சில வழிகளில் அவர் வேறொருவராக மாறிவிட்டார்.
கிறிஸின் அனுபவம் இரட்சிக்கப்பட்ட ஒரு நபரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதற்கு ஏறத்தாழ ஒத்துள்ளது. நாம் கிறிஸ்துவை நம்பும்போது, நம்முடைய ஆவி மறுரூபமடைந்து, நாம் புது சிருஷ்டியாய் மாற்றப்படுகிறோம் (2 கொரிந்தியர் 5:17). எபேசு சபைக்கு பவுல் எழுதிய நிருபத்தில், அந்த உள்ளான மறுரூபத்தை பிரதிபலிக்கவும், “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு... மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று அவர்களை ஊக்குவிக்கிறார் (எபேசியர் 4:22,24). கிறிஸ்துவுக்காக பிரித்தெடுக்கப்பட வேண்டும்.
இயேசுவின் மறுரூபமாக்கும் வல்லமை நமக்குள் கிரியை செய்வதை பார்ப்பதற்கு, டி.என்.ஏ பரிசோதனையோ அல்லது இரத்தப் பரிசோதனையோ செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த மறுரூபமாக்கப்பட்ட உள்ளான மனிதன், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தோடு நாம் எவ்விதத்தில் தொடர்புகொள்ளுகிறோம் என்பதை அடிப்படையாய் வைத்து தீர்மானிக்கப்படுகிறது. நாம் “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன்” நமக்கு மன்னித்ததுபோல, நாமும் மற்றவர்களை மன்னிக்கிறோமா என்பதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது (வச. 32).
மற்றவர்கள் மீது முதலீடு செய்தல்
ஒரு கார்பரேஷன் நிறுவனம் தங்களுடைய உணவுப்பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும் பத்து நபர்களில் ஒருவருக்கு 1000 மைல்கள் தூரம் விமான பயணத்தை இலவசமாய் அறிவித்தது. ஒரு நபர், அவர்களின் மிகவும் மலிவான உணவுப்பொருளான சாக்லேட் கப் கேக்கை பன்னிரண்டாயிரம் ஆர்டர் செய்தார். அதற்கு சுமார் 2.25 இலட்ச ரூபாய் செலவானது. அதினால் அவர் முக்கிய அந்தஸ்தை அடைந்து, அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் வாழ்நாள் முழுமைக்குமான விமானப் போக்குவரத்தை இலவசமாகப் பெற்றார். மேலும் அவர் வாங்கிய அந்த சாக்லேட் கேக்குகளை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். அதினால் அவர் வரிவிலக்கும் பெற்றார். என்ன ஒரு புத்திசாலித்தனம்!
ஒரு அநீதியான உக்கராணக்காரனைக் குறித்து இயேசு சற்று முரண்பாடான ஒரு உவமையைச் சொல்லுகிறார். அவன் பணி நீக்கம் செய்யப்படவிருப்பதால், தன் எஜமானுக்கு போகவேண்டிய கடனை கடளானிகளுக்கு குறைக்கிறான். அவன் அவ்வாறு செய்தால், தன்னுடைய பணி நீக்கத்திற்கு பின்பு மக்கள் அவனை ஆதரிப்பார்கள் என்று எண்ணி அவன் அவ்வாறு செய்கிறான். அவனுடைய இந்த நெறியற்ற இரக்கத்தை இயேசு பாராட்டவில்லை. ஆனால் அவனுடைய புத்திசாலித்தனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக்கா 16:9) என்று இயேசு கூறுகிறார். “அந்த சாக்லேட் கப் கேக் மனிதர்” தன்னுடைய குறைவான தொகையில் உணவுப்பொருளை வாங்கி, அதை இலாபகரமான விமான பயணமாய் மாற்றியதுபோல, உலகத்தின் ஆஸ்திகளைப் பயன்படுத்தி, நாமும் மெய்யான ஐசுவரியத்தை சுதந்தரிக்கலாம் (வச. 11).
இந்த ஆஸ்திகள் யாவை? “உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை" (12:33) என்று இயேசு கூறுகிறார். நம் முதலீடு நமக்கு இரட்சிப்பை வாங்கித் தராது. ஆனால் “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (வச. 34) என்பதங்கிணங்க, அது நம்முடைய இரட்சிப்பை உறுதிப்படுத்துகிறது (வச. 34).
பெருமையும் வஞ்சித்தலும்
“அன்பான தேவனே, உம்முடைய மென்மையான திருத்தத்திற்கு நன்றி,” என் தோள்கள் சரிந்த நிலையில், அந்தக் கடினமான வார்த்தைகளை முனுமுனுத்தேன். நான் மிகவும் திமிர்பிடித்தவனாக இருந்தேன். எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும் என்று எண்ணினேன். மாதக்கணக்கில், என்னுடைய தொழிலில் வெற்றியடைந்து வந்தேன். இதினால் குவிந்த பாராட்டுகள் எனது திறமைகளை நம்புவதற்கும் தேவனின் வழிநடத்துதலை நிராகரிப்பதற்கும் என்னைத் தூண்டின. நான் நினைத்தது போல் நான் புத்திசாலி இல்லை என்பதை உணர எனக்கு ஒரு சவாலான சூழ்நிலை அவசியப்பட்டது. தேவனுடைய உதவி எனக்கு தேவையில்லை என்று என்னை நம்பவைத்து, என்னுடைய பெருமை மிக்க இருதயம் என்னை ஏமாற்றிவிட்டது.
ஏதோம் என்ற பலம்வாய்ந்த ராஜ்யம் அதன் பெருமைக்காக தேவனுடைய சிட்சையை அனுபவித்தது. மலைப்பாங்கான தேசத்தில் அமைந்திருக்கும் இந்த ஏதோம் தேசத்தின் நிலப்பரப்பு, இயல்பாகவே ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்திருந்தது (ஒபதியா 1:3). அதே நேரத்தில் ஏதோம் செல்வ செழிப்பு மிகுந்த தேசமாகவும், முக்கிய வர்த்தக சாலையிலும் அமைந்திருந்தது. அத்துடன் பண்டைய உலகத்தின் அரிய பொக்கிஷமாய் கருதப்பட்ட தாமிரம் அதிகம் கிடைக்கும் இடமாகவும் இருந்தது. நன்மைகள் அதிகம் நிறைந்த தேசமாய் இருந்ததினால், பெருமையும் அதிகமாகவே இருந்தது. ஏதோம் இஸ்ரவேலை ஒடுக்கினாலும், தங்களுடைய இராஜ்யம் வெல்ல முடியாதது என்று அதின் குடிமக்கள் நம்பினர் (வச. 10-14). ஆனால் தேவன் ஒபதியா தீர்க்கதரிசியின் மூலம் ஏதோம் மீதான தன் நியாயத்தீர்ப்பை அறிவிக்கிறார். ஏதோமுக்கு விரோதமாக புறஜாதி தேசங்கள் எழும்பும். ஒரு காலத்தில் பலம்வாய்ந்த இராஜ்யமாய் இருந்த ஏதோம், பாதுகாப்பற்றதாகவும் தாழ்த்தப்படவும் போகிறது (வச. 1-2).
தேவனில்லாமல் நம்முடைய கண்போன போக்கில் நம் வாழ்க்கையை வாழலாம் என்று நம் பெருமை நம்மைத் தூண்டுகிறது. அது நம்மை அதிகாரம், திருத்தம், மற்றும் பெலவீனம் ஆகியவற்றிற்கு செவிகொடுக்காமல் இருக்கச் செய்கிறது. ஆனால் தேவன் அவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தும்படி அழைக்கிறார் (1 பேதுரு 5:6). நாம் பெருமையிலிருந்து விலகி மனந்திரும்புதலைத் தேர்ந்தெடுக்கும்போது, தேவன் அவரை முழுமையாக நம்புவதற்கு நமக்கு வழிகாட்டுவார்.
தெய்வீக மென்மை
ஒரு தொழிலதிபர் தன்னுடைய கல்லூரி நாட்களில் தான் வாழ்க்கையில் நம்பக்கையிழந்தவராகவும், உதவியற்றவராகவும் அடிக்கடி உணர்ந்ததாக பேச நான் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரின் இந்த மனச்சோர்வினை அவர் மருந்துவரிடம் பகிர்ந்துகொள்ளாமல், தற்கொலை செய்வதைக் குறித்த புத்தகத்தை தன் நூலக முகவரிக்கு அவர் ஆர்டர் செய்து, தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான தேதியைக் குறித்தார்.
வாழ்க்கையில் நம்பிக்கையிழந்தவர்களையும் திக்கற்றவர்களையும் தேவன் நேசிக்கிறார். வேதாகம கதாப்பாத்திரங்களை கடினமான சூழ்நிலைகளில் தேவன் நடத்திவந்த விதங்களை அடிப்படையாய் வைத்து இதை உறுதிசெய்யமுடியும். யோனா சாவை விரும்பியபோது தேவன் அவரிடம் மென்மையாக இடைபட்டார் (யோனா 4:3-10). எலியா தன் ஜீவனை எடுத்துக்கொள்ளும்படிக்கு தேவனிடத்தில் விண்ணப்பித்தபோது (1 இராஜாக்கள் 19:4), தேவன் அவருக்குப் புத்துணர்ச்சி அளிக்க அப்பத்தையும் தண்ணீரையும் கொடுத்து (வச. 5-9), அவரிடம் மெல்லிய சத்தத்தில் பேசுகிறார் (வச. 11-13). அவர் தனிமையில் இல்லை என்பதை அவருக்கு உணர்த்துகிறார் (வச. 18). மனம் தளர்ந்தவர்களின் நடைமுறை தேவைகளை சந்திப்பதின் மூலம் தேவன் கனிவாய் அவர்களை அணுகுகிறார்.
தற்கொலையைக் குறித்த புத்தகம் நூலகத்தை வந்துசேர்ந்தது என்ற தகவல் அவருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தவறுதலாய் அந்த செய்தி அவருடைய பெற்றோர்களை சென்றடைந்தது. அவருடைய தாயார் மனமுறிவோடு அன்று அவருக்கு போன் செய்து பேசியபோது தான், இந்த தற்கொலை எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்திருக்கக்கூடும் என்பது அவருக்கு தெரிந்தது. அந்த செய்தி தவறுதலாய் அவருடைய பெற்றோருக்கு போகவில்லையெனில், இன்று அவர் உயிரோடு இருந்திருக்கமாட்டார்.
இவர் காப்பாற்றப்பட்டது ஏதேச்சையாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ நிகழ்ந்த சம்பவம் அல்ல. மாறாக, நம்முடைய ஆகாரமோ, தண்ணீரோ, அல்லது முகவரி தவறுதலோ, இதுபோன்ற விசித்திரமான தலையீடுகள் நம்மை காப்பாற்றும்போது, நாம் தேவனுடைய மென்மையான தழுவுதலை எதிர்கொள்கிறோம்.