ஒரு கார்பரேஷன் நிறுவனம் தங்களுடைய உணவுப்பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும் பத்து நபர்களில் ஒருவருக்கு 1000 மைல்கள் தூரம் விமான பயணத்தை இலவசமாய் அறிவித்தது. ஒரு நபர், அவர்களின் மிகவும் மலிவான உணவுப்பொருளான சாக்லேட் கப் கேக்கை பன்னிரண்டாயிரம் ஆர்டர் செய்தார். அதற்கு சுமார் 2.25 இலட்ச ரூபாய் செலவானது. அதினால் அவர் முக்கிய அந்தஸ்தை அடைந்து, அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் வாழ்நாள் முழுமைக்குமான விமானப் போக்குவரத்தை இலவசமாகப் பெற்றார். மேலும் அவர் வாங்கிய அந்த சாக்லேட் கேக்குகளை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். அதினால் அவர் வரிவிலக்கும் பெற்றார். என்ன ஒரு புத்திசாலித்தனம்!

ஒரு அநீதியான உக்கராணக்காரனைக் குறித்து இயேசு சற்று முரண்பாடான ஒரு உவமையைச் சொல்லுகிறார். அவன் பணி நீக்கம் செய்யப்படவிருப்பதால், தன் எஜமானுக்கு போகவேண்டிய கடனை கடளானிகளுக்கு குறைக்கிறான். அவன் அவ்வாறு செய்தால், தன்னுடைய பணி நீக்கத்திற்கு பின்பு மக்கள் அவனை ஆதரிப்பார்கள் என்று எண்ணி அவன் அவ்வாறு செய்கிறான். அவனுடைய இந்த நெறியற்ற இரக்கத்தை இயேசு பாராட்டவில்லை. ஆனால் அவனுடைய புத்திசாலித்தனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” (லூக்கா 16:9) என்று இயேசு கூறுகிறார். “அந்த சாக்லேட் கப் கேக் மனிதர்” தன்னுடைய குறைவான தொகையில் உணவுப்பொருளை வாங்கி, அதை இலாபகரமான விமான பயணமாய் மாற்றியதுபோல, உலகத்தின் ஆஸ்திகளைப் பயன்படுத்தி, நாமும் மெய்யான ஐசுவரியத்தை சுதந்தரிக்கலாம் (வச. 11).

இந்த ஆஸ்திகள் யாவை? “உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை” (12:33) என்று இயேசு கூறுகிறார். நம் முதலீடு நமக்கு இரட்சிப்பை வாங்கித் தராது. ஆனால் “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (வச. 34) என்பதங்கிணங்க, அது நம்முடைய இரட்சிப்பை உறுதிப்படுத்துகிறது (வச. 34).