அவருக்காய் ஏங்குங்கள்!
“இது தான் நான் சாப்பிடும் கடைசி உருளைக்கிழங்கு சிப்ஸ்” என்று நாம் சொல்லி ஐந்தே நிமிடம் ஆன பின்பு, மீண்டும் ஏன் அதை சாப்பிடுவதற்கு ஏங்குகிறோம்? இக்கேள்விக்கு மைக்கேல் மோஸ், தன் “சால்ட் ஷுகர் ஃபேட்” என்ற புத்தகத்தில் பதிலளிக்கிறார். அமெரிக்காவின் பெரிய நொறுக்குத்தீனி உற்பத்தியாளர்கள், தங்கள் தயாரிப்புகளுக்காய் மக்களை எவ்விதம் ஏங்கச் செய்கின்றனர் என்று அவர் விவரிக்கிறார். ஒரு பிரபல நிறுவனம் இது போன்ற மக்களின் ஏக்கத்தை தூண்டும் அம்சத்தை கண்டறியவே நிபுணர்களின் ஆய்விற்கு ஆண்டுக்கு ரூபாய் 222 கோடி செலவழிக்கிறதாம்.
அந்நிறுவனத்தைப் போலல்லாமல், நம் ஆத்துமாவிற்கு திருப்தியை தரும் ஆவிக்குரிய ஆகாரத்திற்காய் ஏங்கும்படி இயேசு நமக்கு உதவுகிறார். இயேசு, “ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோவான் 6:35) என்று கூறுகிறார். இக்கூற்றின் மூலம், அவர் இரண்டு காரியங்களை வலியுறுத்துகிறார்: முதலாவது, அவர் சொல்லுகிற அப்பம் என்பது பொருளல்ல, அது ஒரு நபர் (வச. 32). இரண்டாவது, பாவமன்னிப்பிற்காய் மக்கள் இயேசுவை நம்பும்போது, அவருடன் சரியான முறையில் நெருங்கி, ஆத்துமாவின் சகல ஏக்கங்களுக்கான திருப்தியை அடைவார்கள். நம்மை திருப்தியாய் வழிநடத்தக்கூடிய நித்திய ஜீவ அப்பம் அவரே.
நம் விசுவாசத்தை இயேசுவின் மீது வைக்கும்போது, பரலோகத்திலிருந்து வந்த மெய்யான அப்பமாகிய அவருக்காய் நாம் ஏங்குவோம். அவர் நம்மை பெலப்படுத்தி, நம் வாழ்க்கையை மறுரூபமாக்குவார்.
அசாத்தியமான துணிச்சல்
1478ஆம் ஆண்டு இத்தாலி தேசத்தின் ப்ளோரன்ஸ் மாகாணத்தை ஆட்சிசெய்த லோரென்ஸோ டி மெடிசி, எதிரிகளின் தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்தார். அவர் மீது நடத்தப்பட்ட அந்த தாக்குதலினிமித்தம் கோபம் கொண்ட அவருடைய தேசத்து மக்கள் எதிர் தாக்குதல் நிகழ்த்தினர். நிலைமை மோசமாக, கொடூர மன்னனான முதலாம் ஃபெரான்டே, லோரென்ஸோவின் எதிரியானான். ஆனால் லோரென்ஸோவின் துணிச்சலான செயல் சூழ்நிலையை தலைகீழாக மாற்றியது. அவன் அந்த கொடூர மன்னனை எந்த யுத்த ஆயுதமுமில்லாமல் நேரில் போய் சந்தித்தார். இவரின் இந்த வீரமும், துணிச்சலுமான செயல் அந்த கொடூர மன்னனின் மனதை மாற்றி, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.
தானியேலும் ராஜாவின் மனதை மாற்றக்கூடிய காரியத்தை செய்தான். ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்திற்கு விளக்கமளிக்கக்கூடிய நபர் பாபிலோனில் யாருமில்லை. அது ராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், பாபிலோனில் இருந்த ஞானிகளையும், தானியேல் மற்றும் அவன் நண்பர்களையும் கொல்லக் கட்டளையிட்டான். தானியேலைக் கொல்ல கட்டளையிட்ட ராஜாவின் சமுகத்திற்கு, தானியேல் துணிச்சலாய் வருகிறான் (தானியேல் 2:24).
நேபுகாத்நேச்சாருக்கு முன், அந்த சொப்பனத்தை வெளிப்படுத்திய தேவனுக்கு மகிமை செலுத்துகிறான் (வச. 28). தானியேல் அந்த சொப்பனத்திற்கு விளக்கமளித்தபோது, நேபுகாத்நேச்சார், தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவருமாகிய தேவனுக்கு மகிமையை செலுத்துகிறான் (வச. 47). தேவன் மீதான விசுவாசத்தில் ஊன்றப்பட்ட தானியேலின் இந்த அசாத்தியமான துணிச்சல், அவனையும் அவனுடைய சிநேகிதர்களையும், மற்ற பாபிலோனிய ஞானிகளையும் அன்றைய தினம் உயிரோடே காத்தது.
நம் வாழ்விலும் சில முக்கியமான செய்திகளை சொல்ல துணிச்சலும், தைரியமும் நமக்கு அவசியம். தேவன் நமக்கு ஞானத்தை அருளி, என்ன சொல்ல வேண்டும் என்பதையும், அதை நேர்த்தியாய் சொல்லக்கூடிய தைரியத்தையும் அருளி நம்மை வழிநடத்துவாராக.
கடும் போராட்டம்
1896ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் ஒரு தொலைக்கோடியான இடத்தில், 36 கிலோ எடையுள்ள சிறுத்தை ஒன்று கார்ல் அகேலி என்ற ஆய்வாளரை துரத்தியது. அவரை எட்டிப்பிடித்த அந்த சிறுத்தை, தன்னுடைய தொண்டையை கவ்வ துடித்ததை அவர் நினைவுகூருகிறார். அது முடியாதபோது, அவருடைய வலது கையை தன்னுடைய கொடூரமான பற்களால் கவ்வியது. இருவரும் மணலில் கட்டிப் புரண்டனர். ஒரு நீளமான, கடும் போராட்டம் நிகழ்ந்தது. அகேலி வலுவிழந்தார். யார் முதலில் பலியாவது என்ற நிலை. பின்னர், தன் முழு பலத்தையும் ஒன்றாய் சேர்த்து, அந்த பெரிய மிருகத்தை வெறுங்கையால் மூச்சுத் திணரச் செய்தார்.
இயேசுவை விசுவாசிக்கும் நம் ஒவ்வொருவரும் கடும் போராட்டத்தை தவறாமல் எதிர்கொள்வோமென்றும், நாம் தோற்றதாக எண்ணி நம் முயற்சிகளை கைவிடும் தருணங்களையும் பவுல் அப்போஸ்தலன் விளக்குகிறார். அதற்கு பதிலாக, “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி” (எபேசியர் 6:11,14) நம்மை அறிவுறுத்துகிறார். நம் இயலாமையை எண்ணி பயந்து நடுங்காமல், நாம் நமது பெலத்தை நம்புகிறவர்கள் அல்லவென்றும், தேவனை நம்பி விசுவாசத்தில் அடியெடுத்து வைக்கவும் ஊக்குவிக்கிறார். “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (வச. 10) என்று எழுதுகிறார். நம் போராட்டங்களின் மத்தியில், ஜெபத்தில் நாம் கூப்பிடும் தூரத்தில்தான் தேவன் உள்ளார் (வச. 18).
ஆம்! நமக்கு அநேக போராட்டங்கள் உண்டு. நம்முடைய சுய பெலத்தையும், சாமர்த்தியத்தையும் வைத்து அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. நாம் எதிர்கொள்ளும் சகல தீமைகளையும், எதிரிகளையும் காட்டிலும் தேவன் பெரியவர்.
பிரபஞ்சத்துடன் விளையாட்டு
1980களின் ஆரம்பத்தில், தேவனை நம்பாத ஒரு பிரபலமான வானியலாளர், “ஒரு அதி உன்னத அறிவு இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றோடு விளையாடுகிறது என்று பொது அறிவு விளக்கமளிக்கிறது.” என்றெழுதுகிறார். இவ்வுலகில், நாம் காணும் எல்லாவற்றையும் ஏதோவொன்று வடிவமைத்துள்ளது என்பதவருக்கு தெரிகிறது. “இயற்கையில் இயல்பாகவே எந்த சக்தியுமில்லை இல்லை” என்றும் அவர் கூறுகிறார். அதாவது, நம் கண்களுக்குத் தென்படுகிற அனைத்தும் யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்கிறார். இருப்பினும், அந்த விஞ்ஞானிக்கு இறைநம்பிக்கை இல்லை.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இன்னொரு ஞானி ஆகாயத்தைப் பார்த்து, வேறொரு முடிவுக்கு வருகிறார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்” என்று தாவீது ஆச்சரியப்படுகிறார் (சங்கீதம் 8:3-4).
ஆயினும், தேவன் நம்மை விசாரிக்கிறவராயிருக்கிறார். அதி உன்னதமான அறிவாளியாகிய தேவன் நம் சிந்தையை வடிவமைத்து, அவரைப் பார்த்து பிரமிக்கும்படி இவ்வுலகில் நம்மை வைத்திருக்கிறார் என்று அந்த அதி உன்னதமான சிருஷ்டிகரைக் குறித்து பிரபஞ்சமே அறிவிக்கிறது. இயேசுவின் மூலமும், அவர் படைப்பின் மூலமும் தேவனை நாம் அறியலாம். பவுல், “அவர் (கிறிஸ்து) அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய... சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது” (கொலோசெயர் 1:15-16).
பிரபஞ்சமுழுதும் அவர் கைவண்ணமே. அவரைத் தேடுபவர்களுக்கு, அந்த அதி உன்னத அறிவாளியாகிய தேவன் தன்னை வெளிப்படுத்துகிறார்.
மனந்திரும்புதலின் பரிசு
“இல்லை, நான் செய்யவில்லை.” ஜேன் தன் பதின்பருவ மகனின் வார்த்தைகளைக் கேட்டாள். அவன் உண்மை சொல்லவில்லை என்றறிவாள். மீண்டும் என்ன நடந்ததென்று சைமனிடம் கேட்குமுன், அவள் ஒரு நிமிடம் ஜெபித்தாள். அவன் தொடர்ந்து தன் தவறை மறுத்தான். கோபத்தில், தன் கைகளை வெடுக்கென உதறி, "எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை" என்றெழுந்து வெளியே நடந்தாள். அவள் தோள் மீது ஒரு கரம் வைக்கப்படுவதையும், சைமன் மன்னிப்பு கேட்பதையும் உணர்ந்தாள். சைமன், பரிசுத்த ஆவியானவரின் உணர்த்துதலுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, தன் தவறையுணர்ந்து மனந்திரும்பினான்.
பழைய ஏற்பாட்டு புத்தகமான யோவேலில், ஜனங்கள் தங்கள் பாவங்களிலிருந்து உண்மையாக மனந்திரும்பி, “முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்” (2:12) என்று தேவன் அவர்களை அழைத்தார். தேவன் வெளித்தோற்றமான குற்றவுணர்ச்சியை விரும்புகிறவரல்ல; மாறாக, அவர்களின் கடினமான மனப்போக்கை விட்டுவிட்டு, “நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து” தன்னிடம் திரும்பும்படிக்கு அறிவுறுத்துகிறார். மேலும் தேவன் “இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்” (வச. 13) என்று யோவேல் இஸ்ரவேலர்களுக்கு நினைப்பூட்டுகிறார்.
நம் தவறுகளை அறிக்கையிடுவது கடினமான காரியம். பெருமையினால் நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வதில்லை. உண்மையை மறைத்து, 'இது சகஜம்' என்று நம் செயலை நியாயப்படுத்த முயற்சிப்போம். தேவனின் மிருதுவான ஆனால் அழுத்தமான உணர்த்துதலுக்கு செவிகொடுத்து உடனே நாம் மனந்திரும்பினால், அவர் நம்மை மன்னித்து, நமது பாவங்களற நம்மைக் கழுவி தூய்மையாக்குவார் (1 யோவான் 1:9). நம் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை அறிந்து குற்றமனசாட்சிக்கும், நிந்தைக்கும் நீங்கலாகி வாழலாம்.