Archives: மே 2022

பார்வையில் மாற்றம்

1854ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஒரு இளைய பீரங்கி அலுவலர், தன் பீரங்கியிருந்த மலை உச்சியிலிருந்து கீழே நடைபெறும் போர் படுகொலைகளைப் பார்த்தார். “ஜனங்கள், ஜனங்களைக் கொல்லுவதைப் பார்ப்பது ஒரு வேடிக்கையான இன்பம், எனவே ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் மணிக்கணக்காய் நான் அதைப் பார்த்துக்கொண்டேயிருப்பேன்” என்று லியோ டால்ஸ்டாய் எழுதுகிறார். 

டால்ஸ்டாயின் பார்வை சீக்கிரத்தில் மாறியது. செவாஸ்டோபோல் நகரத்தில் ஏற்பட்ட அழிவையும் பாடுகளையும் நேரில் பார்த்த பின்பு, “நீங்கள் முன்பு பார்த்த பார்வையை விட, அந்த பட்டணத்தில் ஒலித்த துப்பாக்கி குண்டுகளின் சத்தங்கள் உங்கள் பார்வையை முற்றிலும் மாற்றிவிடும்” என்று எழுதுகிறார். 

யோனா தீர்க்கதரிசி, நினிவேயின் அழிவை பார்க்க மலையுச்சி ஏறினார் (யோனா 4:5). தேவனின் வரப்போகும் நியாயத்தீர்ப்பை குறித்து அக்கொடிய நகரத்தை எச்சரித்திருந்தார். ஆனால் நினிவே மனந்திரும்பியது. யோனா ஏமாற்றமடைந்தார். சில நூற்றாண்டுகள் கழித்து நினிவே மீண்டும் பாவத்திற்கு திரும்பியது. இப்போது நாகூம் தீர்க்கதரிசி அதின் அழிவை முன்னறிவிக்கிறார். “அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்... அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜுவாலிக்கிற கட்கங்களை உடையதாயிருக்கும்; ஈட்டிகள் குலுங்கும்” (நாகூம் 2:3) என்று எழுதினார். 

நினிவேயின் தொடர்ச்சியான பாவத்தினால் தேவன் அதை தண்டித்தார். ஆனால் யோனாவிடமோ, நினிவேயில் ஆவிக்குரிய இருளில் 120000 பேருக்கு அதிகமான மனுஷர் இருக்கிற “மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ?” (யோனா 4:11) என்கிறார்.

தேவனுடைய நீதியும், அன்பும் ஒன்றாகவே பயணிக்கிறது. தீமையின் விளைவை நாகூம் காண்பிக்கிறார். நம்மைக் காட்டிலும் மோசமான சந்ததியினருக்கான தேவனுடைய இரக்கத்தை யோனா காண்பிக்கிறார். நாம் மனந்திரும்பி, அவ்விரக்கத்தை மற்றவர்களுக்கும்காண்பிக்கவேண்டும் என்பதே தேவனுடைய மனவிருப்பம். 

அனலைக் கூட்டுங்கள்

அமெரிக்காவில் இருக்கும் கொலராடோ மாகாணத்தில் தட்பவெப்பநிலை நிமிடத்திற்கு நிமிடம் தீடீரென்று மாற்றமடையக் கூடியது. எங்கள் வீட்டைச் சுற்றிலும் அடிக்கடி மாறும் இந்த தட்பவெப்ப நிலையைக் குறித்து என் கணவர் டேன் மிகுந்த ஆர்வம் காண்பித்தார். சிறிய இயந்திர உபகரணங்களை சேகரிப்பதில் விருப்பமுடைய என் கணவர், அவர் சமீபத்தில் வாங்கிய வெப்பநிலைமானியைக் கொண்டு எங்கள் வீட்டின் நான்கு திசையிலும் தட்பவெப்பநிலையைக் கணக்கிட்டார். அவருடைய செயலை நான் கிண்டல் செய்தாலும், பின்னர் நானும் வெப்பநிலையை கணக்கிட ஆரம்பித்தேன். வீட்டினுள்ளும் வெளியேயும் அடிக்கடி மாறும் வெப்பநிலை மாற்றத்தைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். 

வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்டுள்ள ஐசுவரியமான ஏழு பட்டணங்களில் ஒன்றான லவோதிக்கேயாவின் சபையை 'வெதுவெதுப்பான சபை' என்று இயேசு தட்பவெப்பநிலையை வைத்து குறிக்கிறார். பரபரப்பான வங்கி, ஆடைகள் மற்றும் மருத்துவத்திற்கு பெயர்போன இந்நகரம் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டது. எனவே சூடான நீருற்றிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்ல ஒரு நீர்வழிப் பாதை அவசியப்பட்டது. அந்நீருற்றிலிருந்து லவோதிக்கேயாவுக்கு தண்ணீர் வந்து சேரும்போது அது சூடாகவும் இல்லை குளிர்ந்ததாகவும் இல்லை. 

அங்கிருந்த திருச்சபையும் வெதுவெதுப்பாகவே இருந்தது. இயேசு, “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்” (வெளி. 3:15-16) என்கிறார். மேலும், “நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு” (வச.19) என்றும் அறிவிக்கிறார். 

நம்முடைய இரட்சகரின் இந்த எச்சரிக்கை நமக்கும் அவசியமானது. நீங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருக்கிறீர்களா? அவருடைய சிட்சையை ஏற்றுக்கொண்டு, ஜாக்கிரதையுடனும், விசுவாசத்தில் அனல்கொண்டும் வாழ அவரிடமே உதவி கேளுங்கள். 

ஓடுங்கள்

ஜப்பானின் பாரம்பரிய தற்காப்புக் கலையான அகிடோவின் முதல் படி நமக்கு வியப்பூட்டும். நம்மை யாராவது தாக்க வந்தால், முதலாவது நாம் ஓட வேண்டும் என்று அதின் ஆசிரியர் (சென்ஸெய்) எங்களுக்கு சொன்னார். “உங்களால் ஓட முடியவில்லை என்றால் மட்டும் சண்டை போடுங்கள்” என்று கண்டிப்பாய் சொன்னார். 

ஓட வேண்டுமா? நான் சற்றுத் தடுமாறினேன். இந்த அளவிற்கு திறமையான தற்காப்பு பயிற்சியாளர் நம்மை ஏன் ஓடச்சொல்லுகிறார்? இது சற்று முரணாக தென்பட்டது. ஆனால், சண்டையை தவிர்ப்பதே நம்மை தற்காக்கும் முதற்படி என்று அவர் விளக்கமளித்தார். ஆம் அது உண்மைதான்!

இயேசுவை கைது செய்ய பலர் வந்தபோது, பேதுரு நம்மை போலவே தன் பட்டயத்தை உருவி அதில் ஒருவனை தாக்குகிறான் (மத்தேயு 26:51; யோவான் 18:10). அதை கீழே போடச் சொன்ன இயேசு, “அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்” (மத்தேயு 26:54) என்று கேட்கிறார்.

நியாயம் என்பது முக்கியம் என்றாலும், அதேபோல தேவனுடைய இராஜ்யத்தையும், நோக்கதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது நம்முடைய சத்துருக்களை நேசிக்கும்படியாகவும், தீமைக்கு நன்மை செய்யும்படியாகவும்(5:44) நம்மை அழைக்கும் தலைகீழான இராஜ்யம். இது உலகத்தின் சுபாவத்திற்கு நேர்மறையானது. ஆனால் அதைத்தான் தேவன் நமக்குள் உருவாக்க விரும்புகிறார். 

பேதுரு காயப்படுத்திய மனிதனின் காதை இயேசு மீண்டும் குணமாக்கினார் என்று லூக்கா 22:51 கூறுகிறது. இதுபோன்ற கடினமான தருணங்களை இயேசு கையாண்டதைப்போல, நாமும் எப்போதும் சமாதானத்தையும், புதிதாக்குதலையும் நாடுகையில், நமக்கு தேவையானதை தேவன் அருளுவார். 

தாராளமாய் கொடுத்தல்

விக்டோரியா மகாராணிக்காக சீனாவிலும் மற்ற இடங்களிலும் பணியாற்றினார் ஜெனரல் சார்லஸ் கோர்டன் (1833-1885) . பின்னர் இங்கிலாந்தில் வசிக்கையில், தன் மாத வருமானத்தின் 90 சதவிகிதத்தை தானம் செய்துவிடுவாராம். தன் சொந்த தேசத்தில் பஞ்சம் என்பதை கேள்விப்பட்ட அவர், உலகத் தலைவர் ஒருவரிடம் பெற்ற தங்கப் புத்தகத்தின் எழுத்துகளையெல்லாம் அழித்துவிட்டு, அதை பஞ்சம் நிறைந்த வடக்கு பகுதிக்கு, "பதக்கத்தை உருக்கி, அதின் பணத்தை ஏழைகளுக்கு ஆகாரம் வாங்கப் பயன்படுத்திக்கொள்ளவும்" என்று எழுதி அனுப்பினாராம். அந்நாளில் அவர் தன் டைரி குறிப்பில், “நான் இவ்வுலகில் மதித்திருந்த என் கடைசி பொருளையும் ஆண்டவராகிய இயேசுவுக்கு கொடுத்துவிட்டேன்” என்று எழுதினாராம். 

ஜெனரல் கோர்டனுடைய இந்த தாராள குணம் நமக்கு எட்டாத ஒன்றாக தென்படலாம். ஆனால் தேவையில் உள்ளவர்களை கவனிக்க தேவன் தன் ஜனத்திற்கு எப்போதும் அழைப்பு விடுக்கிறார். மோசேயின் மூலம் தேவன் கொடுத்த நியாயப்பிரமாணங்களில் சிலவற்றில், அறுப்பை அறுக்கும்போது அதை தீர அறுக்காமலும், அதின் பின் அறுப்பை அறுக்காமலும் இருக்கும்படிக்கு கட்டளையிடுகிறார். அதற்கு பதிலாக, திராட்சைப்பழங்களை அறுக்கும்போது அதில் கீழே சிந்துகிறதை எளியவனுக்கும் வழிப்போக்கர்களுக்கும் விட்டுவிடும்படிக்கு கூறுகிறார் (லேவியராகமம் 19:10). தங்கள் மத்தியில் வசிக்கும் ஏழை, எளியவர்களை தம் ஜனம் பராமரிக்கும்படி தேவன் விரும்புகிறார். 

நாம் எவ்வளவு தாராளமாய் நம்மை எண்ணிக்கொண்டாலும், மற்றவர்களுக்கு கொடுக்கும் குணாதிசயத்தை இன்னும் வளர்த்துக்கொள்வதற்கும், அதை நேர்த்தியாய் செயல்படுத்தும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்வதற்கும் தேவனிடத்தில் கேட்கலாம். தம்முடைய அன்பை நாம் பிறரிடம் காண்பிக்க, நமக்கு உதவவே அவர் விரும்புகிறார்.

முடிவில்...

அநேக ஆவிக்குரிய கூட்டங்களுக்கு தலைமையேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. தனிமையான இடத்தில் ஜெபித்தும், என் ஜீவியத்தை சுயபரிசோதனை செய்வதும் ஆழமாய் எனக்குதவியது. நிகழ்ச்சியின்போது, பங்கேற்பாளர்களிடம் சிலசமயம் ஒரு சுயபரிசோதனை ஆய்வு நடத்துவதுண்டு. அதாவது, “நீங்கள் மரித்துவிட்டீர்கள், உங்கள் கண்ணீர் அஞ்சலி விளம்பரம் பத்திரிக்கையில் பிரசுரமாகிவிட்டது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அவ்விளம்பரம் எவ்வாறிருக்க விரும்புவீர்கள்?” என்று கேட்பதுண்டு. அதின் பலனாக சிலர் தங்கள் வாழ்வை சிறப்பாய் முடிக்கும்பொருட்டு, வாழ்வின் முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டதுமுண்டு.

2 தீமோத்தேயு 4ஆம் அதிகாரம் அப்போஸ்தலன் பவுல் இறுதியாக எழுதிய வார்த்தைகளை பதிவுசெய்துள்ளது. பவுல் அறுபதைத்தான் கடந்திருந்தார், இதற்கு முன்னமே மரணத்தை சந்தித்திருந்தார். இருப்பினும், இப்போது தாம் மரணத்தை நெருங்குவதை அவர் உணருகிறார் (2 தீமோத்தேயு 4:6). இனி மிஷனரி பயணம் கிடையாது, திருச்சபைகளுக்கு நிருபம் எழுதப்போவதும் கிடையாது. அவர் தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (வச.7) என்கிறார். அவர் குறைவுள்ளவராயிருப்பினும் (1 தீமோத்தேயு 1:15-16), எந்தளவிற்கு தேவனுக்கும், சுவிசேஷத்திற்கும் தான் உண்மையாய் வாழ்ந்துள்ளார் என்பதை நினைவுகூருகிறார். பின்னர், சீக்கிரமே அவர் இரத்தசாட்சியாய் மரித்ததாக பாரம்பரியம் கூறுகிறது. 

நம் இறுதி நாட்களைக் குறித்து சிந்திப்பது, நம்முடைய தற்போதைய வாழ்விற்கு தெளிவை உண்டாக்கும் ஒரு வழி. பவுலின் வார்த்தைகள் பின்பற்றுவதற்கு ஏற்ற நல்ல ஒரு மாதிரி. நல்ல போராட்டத்தைப் போராடுங்கள். ஓட்டத்தை முடியுங்கள். விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், நம் ஜீவியத் தேவைக்காகவும், ஆவிக்குரிய போராட்டங்களை மேற்கொள்ளவும், ஓட்டத்தை நேர்த்தியாய் முடிக்கவும், கர்த்தரை சார்ந்துகொண்டு அவருடைய வழிகளில் உறுதியாய் நின்றிருக்கிறோமா என்பதே கடைசியில் பொருட்படுத்தப்படும்.