அமெரிக்காவில் இருக்கும் கொலராடோ மாகாணத்தில் தட்பவெப்பநிலை நிமிடத்திற்கு நிமிடம் தீடீரென்று மாற்றமடையக் கூடியது. எங்கள் வீட்டைச் சுற்றிலும் அடிக்கடி மாறும் இந்த தட்பவெப்ப நிலையைக் குறித்து என் கணவர் டேன் மிகுந்த ஆர்வம் காண்பித்தார். சிறிய இயந்திர உபகரணங்களை சேகரிப்பதில் விருப்பமுடைய என் கணவர், அவர் சமீபத்தில் வாங்கிய வெப்பநிலைமானியைக் கொண்டு எங்கள் வீட்டின் நான்கு திசையிலும் தட்பவெப்பநிலையைக் கணக்கிட்டார். அவருடைய செயலை நான் கிண்டல் செய்தாலும், பின்னர் நானும் வெப்பநிலையை கணக்கிட ஆரம்பித்தேன். வீட்டினுள்ளும் வெளியேயும் அடிக்கடி மாறும் வெப்பநிலை மாற்றத்தைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். 

வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்டுள்ள ஐசுவரியமான ஏழு பட்டணங்களில் ஒன்றான லவோதிக்கேயாவின் சபையை ‘வெதுவெதுப்பான சபை’ என்று இயேசு தட்பவெப்பநிலையை வைத்து குறிக்கிறார். பரபரப்பான வங்கி, ஆடைகள் மற்றும் மருத்துவத்திற்கு பெயர்போன இந்நகரம் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டது. எனவே சூடான நீருற்றிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்ல ஒரு நீர்வழிப் பாதை அவசியப்பட்டது. அந்நீருற்றிலிருந்து லவோதிக்கேயாவுக்கு தண்ணீர் வந்து சேரும்போது அது சூடாகவும் இல்லை குளிர்ந்ததாகவும் இல்லை. 

அங்கிருந்த திருச்சபையும் வெதுவெதுப்பாகவே இருந்தது. இயேசு, “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்” (வெளி. 3:15-16) என்கிறார். மேலும், “நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு” (வச.19) என்றும் அறிவிக்கிறார். 

நம்முடைய இரட்சகரின் இந்த எச்சரிக்கை நமக்கும் அவசியமானது. நீங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருக்கிறீர்களா? அவருடைய சிட்சையை ஏற்றுக்கொண்டு, ஜாக்கிரதையுடனும், விசுவாசத்தில் அனல்கொண்டும் வாழ அவரிடமே உதவி கேளுங்கள்.