Archives: ஏப்ரல் 2022

வயது வெறும் எண்ணிக்கையே

சாதிப்பதற்கு, இளம் வயது தடையில்லை. அது பதினோரு வயதேயான மிகாய்லாவையும் தடைசெய்யவில்லை. எலுமிச்சை பாணம் அருந்துவதற்கு பதிலாக மிகாய்லா எலுமிச்சை பாணத்தை வியாபாரமாக்கினாள். “மீ அண்ட் தி பீஸ் லெமெனேட்” என்ற அவள் வியாபாரம், தன் பாட்டியின் சமையல் குறிப்போடு ஆரம்பமாகி, ஷார்க் டேங்க் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் முதலீட்டாளர்களால் 60,000 டாலர்கள் முதலீட்டை ஈட்டினாள். மேலும் அவள் பிரபலமான மளிகை வியாபாரியின், ஐம்பத்தைந்து கடைகளில் தன்னுடைய எலுமிச்சை பாணத்தை விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டாள்.

மிகாய்லாவின் வேகமும், அவளது லட்சியங்களும், “உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு” (1 தீமோத்தேயு 4:12) என்று தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுத்த ஆலோசனையை நமக்கு நினைப்பூட்டுகின்றன.
தீமோத்தேயு, மிகாய்லாவை போல சிறுபிள்ளையல்ல; எனினும், தன் சபையாரோடு ஒப்பிடுகையில் அவர் இளையவராகவே இருந்தார். ஜனங்கள் தன்னை அலட்சியம் செய்வதைக்குறித்து வேதனைப்பட்டார். மேலும் அப்போஸ்தலன் பவுலிடம் அவர் பயின்றிருந்தாலும், தங்களை வழிநடத்தும் அளவிற்கு அவர் முதிர்ச்சியடையவில்லை என சிலர் கருதினர். அவருடைய தகுதிகளை பிறருக்கு நிரூபித்துக்காட்டும்படிக்கு பவுல் அவரை அறிவுறுத்தவில்லை; மாறாக, அவருடைய வார்த்தைகள், வாழும் முறை, சபையினரை நேசித்தல், விசுவாசத்தை வாழ்ந்து காட்டுதல் மற்றும் கற்போடு இருத்தல் (வச. 12) ஆகியவற்றால் அவருடைய ஆவிக்குரிய முதிர்ச்சியை நிரூபிக்க தீமோத்தேயுவை ஊக்கப்படுத்துகிறார். இத்தகைய முன்மாதிரியாக அவர் இருந்தால், அவரைப் போதகராக, மேய்ப்பராக எவரும் அசட்டை செய்யமுடியாது.

நாம் எந்த பருவத்தினராயினும், இவ்வுலகில் நாம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். கிறிஸ்துவை மையப்படுத்தி முன்மாதிரியாக நாம் இருக்க, தேவனே நமக்கு தேவையானவற்றை அருளுகிறார். சுவிசேஷத்தால் நம் வாழ்வை வடிவமைக்கிறார். ஆகவே நாம் பதினேழு வயது வாலிபனோ, அல்லது எழுபது வயது வயோதிகரோ, பிறரோடு சுவிசேஷம் பகிர நாம் தகுதியானவர்களே.

பாதுகாப்பிற்கு இழுக்கப்படுதல்

அந்த சிறுபெண் ஆழமில்லா அந்நீரோடையில் தடுமாறி நடப்பதை அவள் தந்தை பார்த்துக்கொண்டிருந்தார். அவள் தன் முட்டி வரைக்கும் காலணி அணிந்திருந்தாள். கீழ்நோக்கி பாய்ந்த நீரோடையில் அவள் சறுக்குகையில், தண்ணீர் ஆழமாகி, அவளால் மேற்கொண்டு நடக்ககூடாதபடி பாய்ந்தது. தன்னால் அடுத்த அடி வைக்கமுடியாதபோது, “அப்பா, நான் சிக்கிக்கொண்டேன்” என்று அலறினாள். மூன்றே அடிகள் தான், அவள் தந்தை அவளருகே நின்றார், அவளை கரையில் இழுத்துவிட்டார். அவள் சிரித்துக்கொண்டே தன் காலணியை உதறி கழட்ட, அதிலிருந்த தண்ணீர் கீழே கொட்டியது.

தேவன், சங்கீதக்காரன் தாவீதை தன்னுடைய சத்துருக்களிடமிருந்து மீட்ட பிறகு, அவரும் இப்படி சற்று நேரமெடுத்து அமர்ந்து, “தன் காலணிகளை கழற்றி,” தன் ஆத்துமா விடுதலையில் நனைய அனுமதித்தார். தன் உணர்வுகளை வெளிப்படுத்த பாடலொன்றையும் எழுதினார். “ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்” (2 சாமுவேல் 22:4) என்றார். தேவன் தன்னுடைய கன்மலை, கோட்டை, கேடகம் மற்றும் உயர்ந்த அடைக்கலம் என்று துதிக்கிறார் (வச. 2–3). பின்பு தேவன் பதிலளித்த விதத்தை பாடல்நடையில் வர்ணிக்கிறார், “பூமி அசைந்து அதிர்ந்தது; வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது. தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார். ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” (வச. 8, 10, 13–15, 17).

இன்றைக்கு உங்களைச் சுற்றிலும் எதிர்ப்பை நீங்கள் உணரலாம். ஆவிக்குரிய ரீதியில் முன்னேறக்கூடாதபடி பாவத்தில் நீங்கள் சிக்கியிருக்கலாம். தேவன் கடந்த காலத்தில் உங்களுக்கு உதவிய விதத்தை நினைத்துப்பாருங்கள். அவரைத் துதித்து, மீண்டும் அதை செய்யுமாறு அவரைக் கேளுங்கள். விசேஷமாக உங்களை தமது ராஜ்யத்திற்குட்படுத்தி விடுவித்ததற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள் (கொலோசெயர் 1:13).

மண்ணென்று உணர்தல்

எங்கள் வாராந்திர ஊழிய கூடுகையின்போது, ரவி தான் “மண்ணென்று உணர்வதாக” குறிப்பிடுகையில், அவர் தன் முதுமை மற்றும் ஆரோக்கிய குறைபாடினிமித்தம் உண்டாகும் சரீர பெலவீனங்களைக் குறிப்பிடுவதை புரிந்துகொண்டேன். ஏனெனில் ரவியும், அவர் மனைவியும், அறுபது வயதை கடந்திருந்தனர். அவர்களின் 2020ஆம் வருடம், மருத்துவர்கள் ஆலோசனை, அறுவைசிகிச்சை முறைகள், வீட்டிலிருந்தே மருத்துவம் பார்க்க வீட்டை மாற்றி அமைத்தல் போன்றவைகளால் நிறைந்திருந்தது. அவர்கள் தங்கள் வாழ்வின் முடிவிலிருந்தார்கள். அதை நன்கு உணரவும் செய்தார்கள்.

சரீரப்பிரகாரமான, மனோரீதியான, உணர்வுரீதியான மற்றும் ஆவிக்குரிய ரீதியான பெலவீனங்கள், இயலாமைகள், குறைபாடுகள் ஆகியற்றை உணர ஒருவர் வயது சென்றவராய் இருக்க வேண்டுமென்றில்லை. தேவன், தம் குமாரன் இயேசுவின் மனுஉருவில், வீழிச்சியடைந்த இவ்வுலகத்திற்கு வந்து, மனித பிறவியின் சுமைகளை அனுபவிப்பவர்கள் மேல் கரிசனைகொள்கிறார் (சங்கீதம் 103:13). மேலும் தாவீது, “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” (வச. 14) என்றெழுதினார். “மண்” என்ற பதம் நம்மை ஆதியாகமத்திற்கு பின்னோக்கி கொண்டுசெல்கிறது. “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்; மனுஷன் ஜீவாத்துமாவானான்” (2:7).

நீங்கள் மண்ணென்று இந்நாட்களில் உணர்கிறீர்களா? பூமிக்குரிய வாழ்க்கையின் எதார்த்தங்களுக்கு உங்களை வரவேற்கிறோம். நாம் பெலவீனமானவர்கள் என்று உணரும்போது நாம் தனித்திருப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனதுருக்கம் நிறைந்த நம் தேவன் அறிந்திருக்கிறார், நினைவுகூருகிறார். பூமிக்குரிய மனிதர்களான நம்மைப் போன்றவர்களுக்கு மன்னிப்பை அருள தன் குமாரனையே நமக்காக அனுப்பி தம் அன்பை நிரூபித்துள்ளார். வாழ்க்கை நமக்கு எதையளித்தாலும், நாம் அவரை நம்புவோமாக.

எது முக்கியம்?

என் தோழியின் சக விசுவாசியும் உடன் பணியாளருமாகிய ஒருவர் அவளிடம், நீங்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்று குறிப்பாகக் கேட்டதை நினைவுகூர்ந்தார். அவர்களின் சமூகத்தை பிரிக்கும் எவ்வளவு காரியங்களில் இருவரும் ஒத்துப்போகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவே அவர் அவ்வாறு கேட்டார். அக்கேள்விக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, இருவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமையை முக்கியத்துவப்படுத்தும் முயற்சியில் “நாம் இருவருமே விசுவாசிகளாதலால், கிறிஸ்துவுக்குள் இருக்கும் நம் ஒற்றுமையையே நான் அதிக முக்கியத்துவப்படுத்துகிறேன்” என பதிலளித்தாளாம்.

பவுலின் காலத்திலும், ஜனங்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காய் பிரிந்திருந்தனர். எத்தகைய உணவுகளை சாப்பிடலாம்? எந்த நாட்கள் விசேஷித்தவைகள்? போன்ற காரியங்களில் ரோமாபுரியில் இருந்த கிறிஸ்தவர்களுக்குள் பல கருத்துவேறுபாடுகள் இருந்தன. தங்களுடைய கருத்துக்களில் அவரவர் மனதிலே முழு நிச்சயத்தை உடையவர்களாய் இருந்தாலும், பவுல் அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றை நினைவூட்டுகிறார். இயேசுவுக்கென வாழ்வதே அந்த தீர்மானம் (ரோமர் 14:5–9). ஒருவரையொருவர் குறை சொல்லுவதை விட்டுவிட்டு, “சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும்” (வச. 19) நாடுமாறு அவர்களை ஊக்குவிக்கிறார்.

சிறிய மற்றும் பெரிய காரியங்களைக் குறித்து தேசங்களும், சபைகளும், சமூகங்களும் பிரிந்துகிடக்கும் இந்த காலகட்டத்தில், நம்மை ஒன்றாக்கும் கிறிஸ்துவின் சிலுவை முயற்சிக்கு நேரே நாம் ஒருவரையொருவர் திருப்பி, அவருடனான நித்திய வாழ்க்கையை பத்திரப்படுத்தலாம். நம்முடைய தனிப்பட்ட கருத்துக்களையே பிடித்துக்கொண்டு, “தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே” (வச. 20) என்று 2௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னான பவுலின் எச்சரிக்கை, அக்காலத்தை போலவே இக்காலத்திற்கும் பொருந்தும். ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பதை விட்டுவிட்டு, அன்பில் அனைத்தையும் செய்து, நம் சகோதர சகோதரிகளை கௌரவிக்கும் வகையில் வாழ்வோம்.

பூமி தினத்தில் நன்றியுணர்வு

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தினத்தன்று “பூமி தினம்” அனுசரிக்கப்படுகிறது. சமீப காலமாய், ஏறத்தாழ இருநூறு நாடுகளில், கோடிக்கணக்கான மக்கள் அன்றைய தினத்தில் பயிற்சி மற்றும் சேவை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றனர். ஒவ்வொரு வருடமும், பூமி தினம் இத்தகைய வியத்தகு கிரகத்தை பராமரிக்கும் அவசியத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது. ஆனால் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியம் இந்த ஆண்டு நிகழ்வை காட்டிலும் மிகப் பழமையானது. அது சிருஷ்டிப்பின் நாட்களுக்கு பின்னோக்கிச் செல்கிறது.

ஆதியாகமத்தில், தேவன் அண்டசராசரத்தையும் சிருஷ்டித்து, மனிதன் வாழ்வதற்கு பூமியை சிருஷ்டித்தார் என்று அறிகிறோம். அவர் மலைச்சிகரங்களையும், பசுமையான சமவெளிகளையும் படைத்ததுமன்றி, தேவன் ஏதேன் தோட்டத்தையும் சிருஷ்டித்தார். அது உணவு, உறைவிடம், மற்றும் மகிழ்ச்சியை அதின் குடிகளுக்குக் கொடுக்கும் அற்புதமான ஒரு இடம் (ஆதியாகமம் 2:8–9).

தன் பிரதான படைப்பான மனிதனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்து, தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்தில் வைத்தார் (வச. 8,22). பின், “அதைப் பண்படுத்தவும் காக்கவும்” (வச. 15) வேண்டுமென்ற பொறுப்பை அவர்களுக்குக் கொடுத்தார். ஆதாமும், ஏவாளும் தோட்டத்திலிருந்து துரத்திவிடப்பட்ட பின்னர், தேவனுடைய சிருஷ்டிப்பைப் பராமரிப்பது இன்னும் கடினமானதாய் மாறியது (3:17–19). ஆனால் இந்நாள்வரைக்கும் தேவனே நம் பூமியையும், அதின் ஜீவராசிகளையும் பராமரிக்கிறார் (சங்கீதம் 65:9–13). நம்மையும் அதையே செய்யுமாறு எதிர்பார்க்கிறார் (நீதிமொழிகள் 12:10).

நாம் நெருக்கடியான நகரத்தில் வசிக்கிறோமோ அல்லது கிராமத்தில் இருக்கிறோமோ, தேவன் நம்மை நம்பிக் கொடுத்த பகுதிகளை பராமரிக்கும் கடமை நமக்குண்டு. தேவன் நமக்குக் கொடுத்த இந்த பூமி பரிசு என்னும் நன்றிக்கடனுக்காக அதை பராமரிக்கும் பொறுப்பை மனப்பூர்வமாய் ஏற்போம்.