Archives: ஜனவரி 2022

கழுவப்பட்டது

ஹரிஷ் தன் நண்பரான டேவ் என்பவரிடம் அவர் தேவனை விட்டு பிரிந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என்பதைக் குறித்து விவரித்தான். அதன் பின்பு ஒருநாள் மீண்டும் டேவை சந்தித்து, தேவனுடைய அன்பு நம்மை இரட்சிக்கும் வழியைக் குறித்து விளக்கினான். டேவ் இயேசுவின் விசுவாசி ஆனார். அவர் கண்ணீருடன் தன் பாவத்திற்கு மனவருத்தப்பட்டு தன் வாழ்வை கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தார். பிறகு ஹரிஷ் டேவிடம் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டதற்கு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு “கழுவப்பட்டேன்” என்று சுருக்கமாகக் கூறினாராம். 

ஆச்சரியமான பதில்! நமக்காகச் சிலுவையில் இயேசு பலியானதை விசுவாசிப்பது நம் இரட்சிப்பின் சாரமாகும். 1 கொரிந்தியர் 6ல் பவுல் தேவனுக்கு எதிரான கீழ்ப்படியாமை தான் நம்மைத் தேவனிடமிருந்து பிரித்தது என்கிறார். “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” (வச. 11). “கழுவப்பட்டீர்கள்,” “பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்,” “நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” ஆகிய வார்த்தைகள் விசுவாசிகள் மன்னிக்கப்பட்டு தேவனிடத்தில் ஒப்புரவாக்கப்பட்டதை வலியுறுத்துகிறது. 

இரட்சிப்பு என்னும் அற்புதமான காரியத்தைக் குறித்து தீத்து 3:4-5 நமக்கு அறிவிக்கிறது. “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.” நம் பாவம் தேவனிடமிருந்து நம்மை பிரித்தது; ஆனால் இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசத்தால் நம் பாவத்தின் தண்டனை கழுவப்பட்டது. நாம் புது சிருஷ்டியாக்கப்பட்டு (2 கொரிந்தியர் 5:17), பிதாவிடத்தில் சேரும் பாக்கியத்தை பெற்றிருக்கிறோம் (எபேசியர் 2:18). மேலும் நாம் சுத்திகரிக்கப்பட்டிருக்கிறோம் (1 யோவான் 1:7). நாம் கழுவப்படுவதற்கு தேவையானதை அவரால் மட்டுமே கொடுக்கமுடியும்.

நெருக்கமாகிறோம்

கொரோனா வைரஸ் வந்த பிறகு வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து ஒன்றை எடுக்க முன்பைவிட அநேக விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வங்கி பெட்டகத்திற்குள் நுழைவதற்கு முன்னால், ஏற்கனவே முன் அனுமதி வாங்கி, என்னுடைய அடையாள அட்டை மற்றும் கையெழுத்தை பரிசோதித்து, வங்கி ஊழியர் ஒருவர் காவலுக்கு வந்து பெட்டகத்திற்கு அழைத்துச் செல்லும் வரை நான் காத்திருக்க வேண்டியுள்ளது. உள்ளே நுழைந்ததும், எனக்குத் தேவையானவற்றை என் பெட்டகத்திலிருந்து நான் எடுக்கும் வரைக்கும் அந்த உறுதியான கதவுகள் பூட்டியிருக்கும். இந்த ஒழுங்கை நான் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே என்னால் வங்கியில் நுழைய முடியும். 

பழைய ஏற்பாட்டில் தேவன், உடன்படிக்கைப் பெட்டி வைத்திருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே நுழைய சில ஒழுங்குமுறைகளை வைத்திருந்தார் (யாத்திராகமம் 26:33). பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும் அந்த சிறப்பான திரைக்குப் பின்னே பிரதான ஆசாரியன் மாத்திரம் வருஷத்துக்கு ஒரு தரம் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார் (எபிரெயர் 9:7). ஆரோனும் பிரதான ஆசாரியர்களும் ஜலத்திலே ஸ்நானம் பண்ணி, பரிசுத்த வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டு பலிகளுடன் உட்பிரவேசிக்க வேண்டும் (லேவியராகமம் 16:3-4). தேவனுடைய கட்டளைகள் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்குமான வழிமுறைகள் அல்ல; மாறாக, நம்முடைய பாவ மன்னிப்பின் தேவையுடன் பரிசுத்த தேவனை எவ்வாறு நெருங்குவது என்பதை வலியுறுத்துவதற்காக கொடுக்கப்பட்டது.  

இயேசுவின் மரணம் அந்த திரைச்சீலையை இரண்டாகக் கிழியச் செய்தது (மத்தேயு 27-51), இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும் என விசுவாசிக்கிறவர்கள் எவரும் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழையலாம் என்பதை அது வெளிப்படுத்தியது. உடன்படிக்கைப் பெட்டியின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்த அந்த நிகழ்வு நம்முடைய நித்திய மகிழ்ச்சிக்கு காரணமாகியது. நான் எப்போது வேண்டுமானாலும் தேவனிடத்தில் நெருங்கலாம் என்பதை இயேசு சாத்தியமாக்கினார். 

மெய்யான நம்பிக்கை

இந்திராகாந்தியின் படுகொலைக்கு பின்பு, அவருடைய மகன் ராஜீவ் காந்தி பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் பிரதம மந்திரி ஆனார். இளமையான, படித்த பிரதம மந்திரி மீது மக்கள் நம்பிக்கை வைத்து நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என நம்பினர். ஆனால் இலங்கையில் அமைதி நிலவும் பொருட்டு இந்தியாவின் அமைதியின்மை தொடர்ந்தது. அதின் விளைவாய் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். எல்லாம் இனி சரியாகிவிடும் என்னும் நேர்மறையான பார்வைகொண்ட மக்கள் நம்பிக்கை இழந்தனர். ஒன்றை நேர்மறையாய் பார்க்கும் பார்வை மட்டும் போதுமானது அல்ல, கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும்.

1967இல் இறையியலாளர் ஜர்கென் மோல்ட்மான் அவர்கள் “நம்பிக்கை இறையியல்” என்னும் நூலில் தெளிவான தரிசனத்தைக் காட்டுகிறார். இந்த பாதை வெறும் நேர்மறையான பாதை மட்டுமில்லை, நம்பிக்கையின் பாதை என்கிறார். இரண்டும் ஒன்றல்ல. நேர்மறையான சிந்தை என்பது சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும், ஆனால் மெய்யான நம்பிக்கை என்பது எல்லா சூழ்நிலைகளிலும் தேவனின் உண்மைத்துவத்தில் வேரூன்றியுள்ளது என்கிறார்.

இந்த மெய்யான நம்பிக்கையின் ஆதாரம் எது? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே... ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார் (1 பேதுரு 1:3-4). நம் தேவன் தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் மரணத்தை ஜெயித்தார். இந்த பெரிய வெற்றி, நேர்மறையான சிந்தையையும் கடந்து உறுதியான நம்பிக்கையை எல்லா சூழ்நிலைகளிலும் ஏற்படுத்துகிறது.

கருத்து வேறுபாடுகளைக் கையாளுவது

சமூக ஊடகமான ட்விட்டர் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட ஒரு தளத்தை உருவாக்கியது. சமீபத்தில் இது சிக்கலாகிவிட்டது. அது ஒத்துவராத அணுகுமுறைகள், வாழ்க்கை முறைகளைப் பற்றிய கண்டனங்களை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகிவிட்டது. நாம் அதில் லாக்ஆன் செய்தால், ஒரு நபராவது “டிரெண்டிங்”ல் உலவுவார். அவர் பெயரை சொடுக்கினால்; அதனால் ஏற்பட்ட சர்ச்சையைப் பற்றி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

நாம் மக்கள் உடுத்தும் ஆடைகளைக் குறித்த நம்முடைய கருத்துக்களை வெளிப்படையாய் விமர்சிக்க கற்றுக்கொண்டோம். ஆனால் கிறிஸ்தவ விசுவாசிகளாய் அழைக்கப்பட்டவர்களுக்கு விமர்சன சிந்தனையும், அக்கறையற்ற அணுகுமுறையும் ஏற்புடையதல்ல. கருத்து வேறுபாடுகளைக் கையாள நாம் விசுவாசிகளாய் “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” வாழவேண்டும் (கொலோசெயர் 3:12). “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" (வ.13) என்றும் வலியுறுத்துகிறார். 

நம்மோடு ஒத்துப்போகும் சுபாவம் கொண்டவர்களிடம் மட்டும் இணங்கிப்போவது போதுமானது அல்ல. நாமும் கிறிஸ்துவின் அன்பினால் மீட்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, கிறிஸ்து வழிகாட்டியது போல, நாமும் கிருபையையும் அன்பையும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும்.