ஹரிஷ் தன் நண்பரான டேவ் என்பவரிடம் அவர் தேவனை விட்டு பிரிந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என்பதைக் குறித்து விவரித்தான். அதன் பின்பு ஒருநாள் மீண்டும் டேவை சந்தித்து, தேவனுடைய அன்பு நம்மை இரட்சிக்கும் வழியைக் குறித்து விளக்கினான். டேவ் இயேசுவின் விசுவாசி ஆனார். அவர் கண்ணீருடன் தன் பாவத்திற்கு மனவருத்தப்பட்டு தன் வாழ்வை கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தார். பிறகு ஹரிஷ் டேவிடம் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டதற்கு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு “கழுவப்பட்டேன்” என்று சுருக்கமாகக் கூறினாராம். 

ஆச்சரியமான பதில்! நமக்காகச் சிலுவையில் இயேசு பலியானதை விசுவாசிப்பது நம் இரட்சிப்பின் சாரமாகும். 1 கொரிந்தியர் 6ல் பவுல் தேவனுக்கு எதிரான கீழ்ப்படியாமை தான் நம்மைத் தேவனிடமிருந்து பிரித்தது என்கிறார். “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” (வச. 11). “கழுவப்பட்டீர்கள்,” “பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்,” “நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” ஆகிய வார்த்தைகள் விசுவாசிகள் மன்னிக்கப்பட்டு தேவனிடத்தில் ஒப்புரவாக்கப்பட்டதை வலியுறுத்துகிறது. 

இரட்சிப்பு என்னும் அற்புதமான காரியத்தைக் குறித்து தீத்து 3:4-5 நமக்கு அறிவிக்கிறது. “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.” நம் பாவம் தேவனிடமிருந்து நம்மை பிரித்தது; ஆனால் இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசத்தால் நம் பாவத்தின் தண்டனை கழுவப்பட்டது. நாம் புது சிருஷ்டியாக்கப்பட்டு (2 கொரிந்தியர் 5:17), பிதாவிடத்தில் சேரும் பாக்கியத்தை பெற்றிருக்கிறோம் (எபேசியர் 2:18). மேலும் நாம் சுத்திகரிக்கப்பட்டிருக்கிறோம் (1 யோவான் 1:7). நாம் கழுவப்படுவதற்கு தேவையானதை அவரால் மட்டுமே கொடுக்கமுடியும்.