கொரோனா வைரஸ் வந்த பிறகு வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து ஒன்றை எடுக்க முன்பைவிட அநேக விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வங்கி பெட்டகத்திற்குள் நுழைவதற்கு முன்னால், ஏற்கனவே முன் அனுமதி வாங்கி, என்னுடைய அடையாள அட்டை மற்றும் கையெழுத்தை பரிசோதித்து, வங்கி ஊழியர் ஒருவர் காவலுக்கு வந்து பெட்டகத்திற்கு அழைத்துச் செல்லும் வரை நான் காத்திருக்க வேண்டியுள்ளது. உள்ளே நுழைந்ததும், எனக்குத் தேவையானவற்றை என் பெட்டகத்திலிருந்து நான் எடுக்கும் வரைக்கும் அந்த உறுதியான கதவுகள் பூட்டியிருக்கும். இந்த ஒழுங்கை நான் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே என்னால் வங்கியில் நுழைய முடியும். 

பழைய ஏற்பாட்டில் தேவன், உடன்படிக்கைப் பெட்டி வைத்திருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே நுழைய சில ஒழுங்குமுறைகளை வைத்திருந்தார் (யாத்திராகமம் 26:33). பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும் அந்த சிறப்பான திரைக்குப் பின்னே பிரதான ஆசாரியன் மாத்திரம் வருஷத்துக்கு ஒரு தரம் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார் (எபிரெயர் 9:7). ஆரோனும் பிரதான ஆசாரியர்களும் ஜலத்திலே ஸ்நானம் பண்ணி, பரிசுத்த வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டு பலிகளுடன் உட்பிரவேசிக்க வேண்டும் (லேவியராகமம் 16:3-4). தேவனுடைய கட்டளைகள் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்குமான வழிமுறைகள் அல்ல; மாறாக, நம்முடைய பாவ மன்னிப்பின் தேவையுடன் பரிசுத்த தேவனை எவ்வாறு நெருங்குவது என்பதை வலியுறுத்துவதற்காக கொடுக்கப்பட்டது.  

இயேசுவின் மரணம் அந்த திரைச்சீலையை இரண்டாகக் கிழியச் செய்தது (மத்தேயு 27-51), இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும் என விசுவாசிக்கிறவர்கள் எவரும் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழையலாம் என்பதை அது வெளிப்படுத்தியது. உடன்படிக்கைப் பெட்டியின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்த அந்த நிகழ்வு நம்முடைய நித்திய மகிழ்ச்சிக்கு காரணமாகியது. நான் எப்போது வேண்டுமானாலும் தேவனிடத்தில் நெருங்கலாம் என்பதை இயேசு சாத்தியமாக்கினார்.