சேவை செய்ய வாழுங்கள்
பத்து வயது நிரம்பிய செல்சியா ஓர் அழகான ஓவிய பெட்டகத்தை பரிசாகப் பெற்றாள். அவள் சோகமாயிருக்கும்போது ஓவியம் தீட்டுவதின் மூலம் அவள் மகிழ்ச்சியடைந்தாள். ஆகையினால் இந்த ஓவியப் பொருட்களை வாங்க முடியாத மற்ற பிள்ளைகளுக்கு அதை பரிசளிக்க எண்ணினாள். அவளுடைய பிறந்தநாள் வந்தபோது, அவளுடைய நண்பர்களிடம் தனக்கு பரிசுப்பொருட்களை கொடுக்கவேண்டாம், அதற்கு பதிலாக தேவையுள்ள பிள்ளைகளுக்கான ஓவியப் பொருட்களைக் கொண்டு பெட்டகத்தை நிரப்பும்படிக்கு கேட்டுக்கொண்டாள்.
சில நாட்களில், தன் குடும்பத்தினரின் உதவியோடு செல்சியா தொண்டு நிறுவனத்தைத் துவங்கினாள். தேவையிலுள்ள பிள்ளைகளுக்கு உதவும்பொருட்டு அநேகரிடத்தில் அந்த பெட்டகத்தை நிரப்பும்படிக்கு கேட்டுக்கொண்டாள். அவளிடத்திலிருந்து ஓவியப் பொருட்களை பெறும் பிள்ளைகளுக்கு ஓவியம் தீட்டும் அறிவுரைகளையும் அவ்வப்போது கொடுத்தாள். ஓரு செய்தித்தொடர்பாளர் செல்சியாவை பேட்டியெடுத்து ஒளிபரப்பிய பின், உலக நாடுகளிலிருந்தும் அவளுக்கு உதவி வரத் துவங்கியது. செல்சியாவின் தரும காரியங்கள் மற்ற நாடுகளை சென்றடைந்தது. சேவை செய்ய விரும்பினால் தேவன் நம்மைப் பயன்படுத்துவார் என்பதற்கு இந்த சிறு பிள்ளை ஓர் அழகான உதாரணம்.
செல்சியாவின் கரிசனையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் மனப்பான்மையும் ஓர் உண்மையான உக்கிராணக்காரனின் இருதயத்தைப் பிரதிபலிக்கிறது. தேவன் தங்களுக்குக் கொடுத்த பொருட்களையும் வரங்களையும் கொண்டு இயேசுவுக்கு உண்மையான உக்கிராணக்காரனாய் “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” (1பேதுரு 4:8-11) என்று அப்போஸ்தலர் பேதுரு அறிவுறுத்துகிறார்.
அன்பைப் பிரதிபலிக்கும் நம்முடைய சிறிய செயல்கள் மற்றவர்களை ஊக்கப்படுத்தும். அதற்கான ஆதரவாளர்களை தேவன் நம் பின்னே அணிவகுக்கும்படி செய்வார். நாம் தேவனை சார்ந்துகொள்ளும்போது சேவை செய்யும் வாழ்க்கை வாழ்ந்து தேவனுக்கு மகிமையை செலுத்தமுடியும்.
வேதத்தைப் படித்தல்
“தேவனை அறிதல்” என்ற தன்னுடைய உன்னதமான படைப்பில், ஜே. ஐ. பேக்கர், நன்கு அறியப்பட்ட நான்கு கிறிஸ்தவ விசுவாசிகளைக் குறித்து பேசுகிறார். அவர்களை “வேதாகம நீர்நாய்கள்” என்று அழைக்கிறார். இந்த நால்வரும் பெரிய நிபுணர்கள் அல்ல என்றபோதிலும், ஒரு நீர்நாயானது ஒரு மரத்தை எப்படி தன் பற்களினால் கடித்து ஊடுருவுமோ அதேபோன்று தேவனை அறிவதற்காய் இவர்கள் வேதத்தை ஊடுருவியுள்ளனர் என்று கூறுகிறார். வேத ஆய்வின் மூலம் தேவனை அறிவது என்பது நிபுணர்களுக்கு உரியது மட்டுமன்று என்பதை பேக்கர் குறிப்பிடுகிறார். “இறையியல் கருத்துக்களை கற்றுத்தேர்ந்த இறையியல் வல்லுநரைக் காட்டிலும், பரிசுத்த ஆவியில் நிறைந்து சாதாரணமாய் வேதத்தை வாசிக்கும் ஒரு நபரோ அல்லது பிரசங்கத்தை கேட்கிற ஒரு விசுவாசியோ, இரட்சகரோடும் தேவனோடும் நெருங்கிய உறவை ஏற்படுத்த முடியும்.”
வேதத்தை வாசிக்கிற அனைவரும் தாழ்மையான இருதயத்தோடு இரட்சகரை இன்னும் அறிந்து அவரைப்போலவே மாறவேண்டும் என்னும் இலக்குடன் வாசிப்பதில்லை என்பது அவலம். இயேசுவின் நாட்களில் பழைய ஏற்பாட்டை வாசித்தவர்கள், அதில் குறிப்பிடப்பட்ட முக்கியமான நபரை புரிந்துகொள்ளாமல் வாசித்தனர். “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:39-40).
நீங்கள் வேதத்தைப் படிப்பதற்கு தடுமாறிக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது வேதத்தைப் படிப்பதையே விட்டுவிட்டீர்களா? வேதத்தை வாசிப்பவர்களைக் காட்டிலும் வேதத்தை ஆராய்ந்து ஊடுருவுகிறவர்கள் மேலானவர்கள். அவர்களின் கண்களையும் மனதையும் திறந்து வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இயேசுவை பார்க்கவும், நேசிக்கவும், அவர்கள் ஜெபத்தோடும் கவனத்தோடும் வேதத்தை ஊடுருவி பாய்கின்றனர்.
உள்ளான உடைதல்
என்னுடைய இளம்பிராயத்தில் என்னுடைய தாயார் ஓர் சுவரோவியத்தை எங்களுடைய அறையின் சுவரில் வரைந்தார்கள், அது நெடுநாட்களாய் அங்கேயேயிருந்தது. அது தகர்க்கப்பட்ட ஒரு பழமையான கிரேக்க ஆலயம், அதின் ஓரத்தில் வெள்ளை நிற தூண்கள் நிற்க, நொறுக்கப்பட்ட நீருற்று குழாய்கள், தகர்க்கப்பட்ட சிலைகள் அந்த ஓவியத்தில் இடம்பெற்றிருந்தது. கிரேக்க கட்டடக்கலையின் பிரம்மாண்டத்தை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, எது அந்த கோயிலை தகர்த்திருக்கவேண்டும் என்று யோசித்தேன். அந்த சிதைவுகளுக்குள் ஒரு காலத்தில் ஓங்கியிருந்த அந்த நாகரீகத்தின் செழிப்பையும் பிரம்மாண்டத்தையும் ஆர்வமாய் படிக்க ஆரம்பித்தேன்.
இன்று நம்மைச் சுற்றி நாம் காணும் பாவமான விரும்பத்தகாத சீரழிவுகள் நம்மை தொந்தரவு செய்யலாம். இந்த தேசங்களெல்லாம் தேவனை நிராகரித்ததுதான் அதற்கான காரணம் என்று நாம் சுலபமாய் சொல்லிவிடலாம். ஆனால் நம் பார்வையை உள்நோக்கி செலுத்தவேண்டாமா? நம்முடைய இருதயத்தில் உள்ளதை பொருட்படுத்தாமல் மற்றவர்களுடைய பாவ வழிகளை குற்றப்படுத்தும் நம்மை வேதம் மாயக்காரர்கள் என்று எச்சரிக்கிறது (மத்தேயு 7:1-5).
சங்கீதம் 32, நம்முடைய பாவத்தைப் பார்த்து, அறிக்கையிட சவால்விடுகிறது. நம்முடைய பாவத்தை உணர்ந்து, அறிக்கையிட்டு, அந்த குற்றமனசாட்சியிலிருந்து விடுபட்டால், மெய்யான மனந்திரும்புதலின் மகிழ்ச்சியை நாம் அனுபவிக்கமுடியும் (வச. 1-5). தேவன் நமக்கு அளிக்கும் முழுமையான மன்னிப்பில் மகிழ்ந்திருப்பதோடு, பாவத்தின் பிடியில் சிக்கியிருக்கும் நபர்களுக்கும் அந்த நம்பிக்கையை கொடுக்க முயற்சிக்கலாம்.
எப்போது தியாகம் செய்வது?
பிப்ரவரி 2020ல் கோவிட் தொற்று பரவத்துவங்கிய தருணத்தில், ஒரு செய்தித்தாள் கட்டுரையாளரின் வார்த்தைகள் என்னை ஆச்சரியப்படுத்தியது. மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, நம்முடைய வேலை, பயணம் மற்றும் ஷாப்பிங் பழக்கத்தை விட்டுவிட்டு, நாம் நம்மை தனிமைப்படுத்திக்கொள்வதை விரும்புவோமா? மேலும் அவள், “இது மருத்துவ பரிசோதனை மட்டுமல்ல, நாம் வெளியே போகாமல் மற்றவர்களை பாதுகாக்கும் உணர்வு” என்று எழுதுகிறாள். திடீரென்று நல்லொழுக்கத்தின் தேவை முதல் பக்க செய்தியாய் மாறுகிறது.
நம்மைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்போமாகில் மற்றவர்களின் தேவையை உணர முடியாது. நம்முடைய வேறுபாடுகளை மாற்றும் அன்பையும், சோகத்தை மாற்றும் சந்தோஷத்தையும், கவலையை மாற்றும் சமாதானத்தையும், மனக்கிளர்ச்சியை மாற்றும் நீடிய பொறுமையையும், மற்றவர்களிடத்தில் காண்பிக்கும் தயவையும், மற்றவர்களின் தேவைகளை சந்திக்கும் நற்குணத்தையும், நம் வாக்கை நிறைவேற்றுவதில் விசுவாசமும், கோபத்திற்கு பதிலாக சாந்தத்தையும், சுய நலத்திற்கு அப்பாற்பட்ட இச்சையடக்கத்தையும் பரிசுத்த ஆவயானவரிடத்தில் கேட்கலாம் (கலாத்தியர் 5:22-23). இவைகள் எல்லாவற்றிலும் நாம் நேர்த்தியாய் செயல்படமுடியாத பட்சத்தில், ஆவியானவரின் நற்பண்புகளை தொடர்ந்து நாடுவதற்கு நாம் அழைக்கப்படுகிறோம் (எபேசியர் 5:18).
செய்யப்படவேண்டிய நேரத்தில் ஒன்றை செய்யும் திறனையே பரிசுத்தம் என்று ஒரு ஆசிரியர் குறிப்பிடுகிறார். நோய் தொற்று காலத்தில் மட்டுமல்லாது, இந்த பரிசுத்தம் எல்லா காலகட்டத்திலும் அவசியப்படுகிறது. மற்றவர்களுக்காய் தியாகமாய் வாழும் குணம் நம்மிடத்தில் உள்ளதா? பரிசுத்த ஆவியானவர் செய்யப்படவேண்டியதை செய்யும் வல்லமையினால் நம்மை நிரப்பட்டும்.