பத்து வயது நிரம்பிய செல்சியா ஓர் அழகான ஓவிய பெட்டகத்தை பரிசாகப் பெற்றாள். அவள் சோகமாயிருக்கும்போது ஓவியம் தீட்டுவதின் மூலம் அவள் மகிழ்ச்சியடைந்தாள். ஆகையினால் இந்த ஓவியப் பொருட்களை வாங்க முடியாத மற்ற பிள்ளைகளுக்கு அதை பரிசளிக்க எண்ணினாள். அவளுடைய பிறந்தநாள் வந்தபோது, அவளுடைய நண்பர்களிடம் தனக்கு பரிசுப்பொருட்களை கொடுக்கவேண்டாம், அதற்கு பதிலாக தேவையுள்ள பிள்ளைகளுக்கான ஓவியப் பொருட்களைக் கொண்டு பெட்டகத்தை நிரப்பும்படிக்கு கேட்டுக்கொண்டாள். 

சில நாட்களில், தன் குடும்பத்தினரின் உதவியோடு செல்சியா தொண்டு நிறுவனத்தைத் துவங்கினாள். தேவையிலுள்ள பிள்ளைகளுக்கு உதவும்பொருட்டு அநேகரிடத்தில் அந்த பெட்டகத்தை நிரப்பும்படிக்கு கேட்டுக்கொண்டாள். அவளிடத்திலிருந்து ஓவியப் பொருட்களை பெறும் பிள்ளைகளுக்கு ஓவியம் தீட்டும் அறிவுரைகளையும் அவ்வப்போது கொடுத்தாள். ஓரு செய்தித்தொடர்பாளர் செல்சியாவை பேட்டியெடுத்து ஒளிபரப்பிய பின், உலக நாடுகளிலிருந்தும் அவளுக்கு உதவி வரத் துவங்கியது. செல்சியாவின் தரும காரியங்கள் மற்ற நாடுகளை சென்றடைந்தது. சேவை செய்ய விரும்பினால் தேவன் நம்மைப் பயன்படுத்துவார் என்பதற்கு இந்த சிறு பிள்ளை ஓர் அழகான உதாரணம்.

செல்சியாவின் கரிசனையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் மனப்பான்மையும் ஓர் உண்மையான உக்கிராணக்காரனின் இருதயத்தைப் பிரதிபலிக்கிறது. தேவன் தங்களுக்குக் கொடுத்த பொருட்களையும் வரங்களையும் கொண்டு இயேசுவுக்கு உண்மையான உக்கிராணக்காரனாய் “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” (1பேதுரு 4:8-11) என்று அப்போஸ்தலர் பேதுரு அறிவுறுத்துகிறார். 

அன்பைப் பிரதிபலிக்கும் நம்முடைய சிறிய செயல்கள் மற்றவர்களை ஊக்கப்படுத்தும். அதற்கான ஆதரவாளர்களை தேவன் நம் பின்னே அணிவகுக்கும்படி செய்வார். நாம் தேவனை சார்ந்துகொள்ளும்போது சேவை செய்யும் வாழ்க்கை வாழ்ந்து தேவனுக்கு மகிமையை செலுத்தமுடியும்.