“சீக்கிரம் வாருங்கள், நாங்கள் பனிப்பாறையை மோதிவிட்டோம்.”RMSகார்பாத்தியா கப்பலின் செய்தித் தொடர்பாளர் ஹெரால்ட் காட்டம், 1912 ஏப்ரல் 15ஆம் தேதி, காலை 12:25க்கு, மூழ்கிக்கொண்டிருந்த டைட்டானிக் கப்பலிலிருந்து பெற்றுக்கொண்ட முதல் செய்தி இதுவே. அந்த பேரிடரிலிருந்து டைட்டானிக் கப்பலை விரைந்து சென்று அதில் பயணம்செய்த 706 உயிர்களை காப்பாற்றிய முதல் கப்பல் இந்த கார்பாத்தியா தான். 

சில நாட்கள் கழித்து, அமெரிக்காவின் சட்டசபை உறுப்பினர்கள் கேட்க, கார்பாத்தியாவின் கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரான், “இவை அனைத்துமே ஆச்சரியமாய் நடந்தேறிய தெய்வீகச் செயல்” என்றாராம். “வயர்லஸ் கருவியை இயக்கும் கருவி அந்த நேரத்தில் அவருடைய கேபினில் இருந்தது… அவர் சாதாரணமாய் உடை மாற்றும்போதே அந்த தகவலை கேட்க நேர்ந்தது… இன்னும் பத்து நிமிடத்தில் அவர் தன் படுக்கைக்கு போயிருந்திருப்பார்.. அந்த செய்தியை கேட்க முடியாமல் போயிருந்திருக்கும்.” 

கேட்பது அவசியம்; குறிப்பாய் தேவனுடைய சத்தத்தை கேட்பது மிக அவசியம். சங்கீதம் 85ன் ஆசிரியர் கோராகின் புத்திரர்கள், “கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன் ; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக. நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது” (வச. 8-9) என்று கீழ்ப்படிதலுக்கு வலியுறுத்துகின்றனர். அவர்களுடைய எச்சரிக்கை கடுமையானது. ஏனென்றால் அவர்களின் முற்பிதாவாகிய கோராகு தேவனுக்கு விரோதமாய் முரட்டாட்டம் பண்ணி வனாந்திரத்தில் அழிந்துபோனவர் (எண். 16:1-35). 

டைட்டானிக் மூழ்கிய அன்றிரவு அருகிலிருந்த வேறொரு கப்பலின் வயர்லெஸ் செய்தி தொடர்பாளர் தூங்கச் சென்றுவிட்டார். அவர் அந்த செய்தியை கேட்டிருந்தால் இன்னும் அதிகமான உயிர்களை காப்பாற்றியிருந்திருக்கக்கூடும். கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு கீழ்ப்படிவோமாகில் இன்றும் கடினமான வாழ்க்கைப் பாதையினூடாய் கடந்துபோகும் நம்மை அவர் திசைதிருப்புவார்.