பேரிடரின்போது, ஜெர்ரி தன்னுடைய உடற்பயிற்சி மையத்தையும் மூட வேண்டியிருந்தது. அதனால் மாதக்கணக்காய் வருமானமின்றி தவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு நாள் அவனுடைய நண்பனிடத்திலிருந்து ஒரு செய்தி வந்தது. அதில் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு சரியாய் மாலை 6:00 மணிக்கு வரும்படிக்கு சொல்லியிருந்தது. ஜெர்ரிக்கு அது ஏன் என்று தெரியவில்லை. ஆனாலும் குறித்த நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான். திடீரென்று பல கார்கள் அணிவகுக்கத் துவங்கியது. அதில் முதல் காரில் வந்தவர் ஒரு கூடையை அந்த கட்டடத்தின் அருகாமையில் வைத்துவிட்டுபோக, தொடர்ந்து வந்த ஏறத்தாழ 50 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வந்து ஜெர்ரியைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தி, அந்தக் கூடையின் அருகில் நிறுத்தி, அதில் வாழ்த்து அட்டைகளையும் பணத்தையும் வைத்துவிட்டு சென்றனர். அதின் மூலமாக ஜெர்ரியை உற்சாகப்படுத்தினர். 

பவுல் அப்போஸ்தலரைப் பொருத்தவரையில், தியாகமே அன்பின் நிஜமான தன்மை. கொரிந்திய சபையை சேர்ந்தவர்களுக்கு, மக்கதோனியா சபையை சேர்ந்தவர்கள் “தங்கள் திராணிக்கு மிஞ்சி” கொடுத்து அப்போஸ்தலர்களின் தேவையை சந்தித்தார்கள் என்று பவுல் கூறுகிறார் (2 கொரி. 8:3). பவுலுக்கும் தேவ ஜனத்திற்கும் கொடுக்கும் வாய்ப்புக்காய் “அவர்கள் மிகவும் வேண்டிக்கொண்டார்கள்” என்றும் கூறுகிறார். இயேசுவின் தியாகமான இருதயமே அவர்களைக் கொடுக்கத் தூண்டியது. அவர் பரலோகத்தின் மேன்மையை துறந்து, தன் ஜீவனைக் கொடுக்கும்பொருட்டு பூமிக்கு வந்து அடிமையின் ரூபமெடுத்தார். “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும்… உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (வச. 9).

மற்றவர்களுடைய தேவையை அன்போடு சந்திக்க, இந்த தருமக் காரியத்தில் பெருக நாமும் தேவனிடத்தில் வேண்டிக்கொள்ளலாமே (வச. 7).