மாமா! என்னை நீங்கள் முடித் திருத்தகத்திற்கும் பல்பொருள் அங்காடிக்கும் கூட்டிச்சென்றது நினைவிருக்கிறதா? அன்று நான் காக்கி நிற பேண்ட்டும், நீலநிற சட்டையும், கருநீல நிற ஸ்வெட்டரும், காபி நிற காலணியும் அணிந்திருந்தேன். அது ஒரு வியாழக்கிழமை, அக்டோபர் 20, 2016. இதை நினைவுகூர்ந்தது எனது அக்கா மகன்; அவன் ஒரு மனநலம் குன்றியவன். பல ஆண்டுகள் கழிந்தாலும் சில காரியங்களை அவன் மறக்காமல் நினைவில் வைத்திருந்தான்.   

இந்த சூழ்நிலையிலும் அவனுடைய இந்த நினைவுகள், எல்லாம் அறிந்த, காலத்தையும் நித்தியத்தையும் கையில் வைத்திருக்கிற அன்பான தேவனை எனக்கு நினைவுபடுத்தியது. நடப்பது எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் தன்னுடைய ஜனத்தையும் அவர்களுக்கு வாக்கு பண்ணினதையும் மறக்கமாட்டார். நீங்கள் தேவனால் மறக்கப்பட்டீர்களா? என்று தேவனிடத்தில் கேள்வியெழுப்பிய தருணங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதுவும் மற்றவர்கள் மகிழ்ச்சியாக சுகித்து, வெற்றியுள்ள வாழ்க்கை வாழும்போது அப்படி எண்ணத்தோன்றியதா? 

இஸ்ரவேலர்களின் கடினமான சூழ்நிலைகள் அவர்களை “கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார்” என்று சொல்லத் தூண்டியது. ஆனால் அது உண்மையில்லை. ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு இரங்குவதைக் காட்டிலும் தேவனுடைய இரக்கமும் கரிசனையும் அதிகமாய் இருக்கிறது (வச. 15). தேவன் “கைவிட்டார்,” “மறந்துவிட்டார்” என்று சொல்லுவதற்கு முன்பு, அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாய் என்ன செய்திருக்கிறார் என்பதை யோசித்துப்பாருங்கள். மன்னிப்பைக் கொண்டுவரும் சுவிசேஷத்தில் தேவன், “நான் உன்னை மறப்பதில்லை” என்று மிகத் தெளிவாய் சொல்லுகிறார் (வச. 15).