சாப்பாட்டுப் பொட்டலங்கள், நீர்புகா காலணிகள், வரைபடம் போன்றவைகள் மலை ஏற்றம் மேற்கொள்ளுகிறவர்கள் எடுத்துச் செல்லும் சில முக்கியப் பொருட்கள். இந்த மலைப்பாதையானது ஓடைகள், ஏரிகள், மரங்கள், குன்றுகள் என்று ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் கொண்ட பாதையாயிருக்கும். ஏறும் சிகரங்களின் உயரங்களைப் பொறுத்து, நிர்ணயித்த உயரத்தை சென்றடைய சில வாரங்கள் பிடிக்கும் என்பதினால், அதிகமான உணவுப்பொருட்களை எடுத்துச் செல்வது சாத்தியமல்ல. அநேக காரியங்களை தூக்கி சுமக்கமுடியாது; ஆனால் கொஞ்சம் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெகுதூரம் செல்லவும் முடியாது. 

கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நாமும் நம்முடைய ஓட்டத்தை நேர்த்தியாய் முடிப்பதற்கு நம்மோடு எதைக் கொண்டு செல்லுகிறோம் என்பது மிகவும் முக்கியம். எபிரெயர் 12இல் பவுல் அப்போஸ்தலர் “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு” ஓடுவதற்கு நம்மை உற்சாகப்படுத்துகிறார். அவர் நம்முடைய வாழ்க்கையை நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டமாகவும், அதில் “இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு” ஓடவும் ஊக்குவிக்கிறார் (வச. 1,3). பாவத்தை சுமந்துசெல்வதும் தேவ திட்டத்திற்கு ஒவ்வாத காரியங்களை சுமந்துகொண்டு செல்வதும் தேவையற்ற பளுவாகிவிடும். 

மலையேற்றத்திற்கு தேவைப்படும் பொருட்களின் பட்டியல் போலவே இயேசுவை பின்பற்றுவதற்கு தேவையான பட்டியலையும் தேவன் வேதாகமத்தில் கொடுத்துள்ளார். நம்முடைய சுபாவங்கள், கனவுகள், ஆசைகள் ஆகியவற்றில் எது தேவையானது என்பதை வேதத்தின் அடிப்படையில் அறிவது நல்லது. சுமையில்லாமல் வெறுமையாய் நடந்தால் நம் ஓட்டத்தை நேர்த்தியாய் நிறைவு செய்யமுடியும்.