“த பிளைன்ட் சைட்” என்று 2009 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில திரைப்படமானது, மைக்கேல் ஓஹெர் என்பவரின் நிஜக்கதை. ஒரு குடும்பம் அவனுக்கு ஆதரவு தந்து, கற்றுக்கொள்ளுதலில் அவனுக்கு இருந்த குறைபாட்டை மேற்கொள்ளச் செய்து, அமெரிக்க கால்பந்து விளையாட்டில் சிறந்தவனாய் மாற்றுகிறது. அதில் ஒரு காட்சியில், அவர்களோடு பல மாதங்கள் தங்கியிருந்த மைக்கேலைப் பார்த்து, அவனை தத்தெடுத்துக்கொள்வதைக் குறித்து அவனிடத்தில் கேட்கிறார்கள். மைக்கேல் அவர்களைப் பார்த்து, நான் ஏற்கனவே குடும்பத்தின் அங்கத்தினராகவே இருப்பதாக மிக இனிமையாகவும் மென்மையாகவும் பதிலளிக்கிறான். 

இது ஒரு அழகான தருணம். தத்தெடுப்பது ஓர் அழகான விஷயம். அன்பு விரிவடைந்து, குடும்பம் ஒரு புது நபருக்கு தன் இரண்டு கரங்களையும் விரிக்கிறது. மைக்கேலின் வாழ்க்கை மாறியதுபோல, தத்தெடுத்தல் வாழ்க்கையை மாற்றுகிறது. 

விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் “தேவனுடைய பிள்ளைகளாய்” மாற்றப்படுகின்றனர் (கலா. 3:26). நாம் தேவனால் தத்தெடுக்கப்பட்டு அவருடைய குமாரனாகவும் குமாரத்தியாகவும் மாற்றப்படுகிறோம் (4:5). தேவனுடைய தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாய் அவருடைய குமாரனுடைய ஆவியைப் பெற்று தேவனை “அப்பா” என்று அழைக்கவும் (வச. 6), அவருடைய சுதந்திரனாயும் (வச. 7), கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரமாயும் (ரோமர் 8:17) மாற்றப்பட்டுள்ளோம். நாம் அவருடைய குடும்பத்தின் முழுமையான அங்கத்தினராய் மாற்றப்படுகிறோம்.  

மைக்கேல் ஓஹெரின் தத்தெடுப்பு அவனுடைய வாழ்க்கையையும், அங்கீகாரத்தையும், அவனுடைய எதிர்காலத்தையும் மாற்றியது. தேவனால் தத்தெடுக்கப்பட்ட நாம் எவ்வளவு மேன்மையானவர்கள்! அவரை தகப்பனாய் அறிந்ததினால் நம் வாழ்க்கை மாறுகிறது. அவருக்கு சொந்தமானதினால் நம் அங்கீகாரம் மாறுகிறது. மகிமையான நித்திய மாட்சிமை வாக்களிக்கப்பட்டதினால் நம் எதிர்காலமும் மாற்றப்படுகிறது.