கிளிஃபோர்டு வில்லியம்ஸ்_க்கு தான் செய்யாத ஒரு கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு விரோதமான குற்றத்தை மறுபரிசீலனை செய்யும்படி தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டேயிருந்தார். அவருடைய ஒவ்வொரு மனுவும் தொடர்ந்து 42 ஆண்டுகளாய் நிராகரிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. பின்பு ஒரு நாள், அட்டார்னி ஷெல்லி திபோதியு அவருடைய வழக்கைக் குறித்துக் கேள்விப்பட்டார். வில்லியம்ஸை குற்றவாளி என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பது மட்டுமல்லாது, இன்னொரு மனிதன் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டான். தன் 76ஆம் வயதில் வில்லியம்ஸ் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். 

தீர்க்கதரிசிகளான எரேமியாவும் உரியாவும் இக்கட்டான சூழலில் இருந்தார்கள். மனந்திரும்பவில்லை என்றால் தேவன் நியாயந்தீர்க்கப்போவதாக யூதேயர்களுக்கு இவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தனர் (எரே. 26:12-13, 20). இந்தச் செய்தியைக் கேட்ட யூதேய மக்களும் தலைவர்களும் கோபங்கொண்டு இவர்களை கொலைச் செய்ய துணிந்தனர். எகிப்திற்கு ஓடிப்போன உரியாவைக் கொண்டுவந்து, வெட்டிப்போட்டனர் (வச.23). ஏன் எரேயமியாவைக் கொல்லவில்லை? ஏனென்றால், அகீக்காம் “அவனுக்குச் சகாயமாயிருந்தான்;.” ஆகையால் அவன் கொலை செய்யப்படும்பொருட்டு மக்களிடம் ஒப்படைக்கப்படவில்லை (வச. 24). 

இதுபோன்று மரணத்தைச் சந்திக்கும் நபரை ஒருவேளை நாம் அறியாமலிருக்கலாம். ஆனால் நம் உதவி தேவைப்படும் யாரோ ஒருவரை நமக்குத் தெரியும். யாருடைய உரிமை மிதிக்கப்படுகிறது? யாருடைய திறமை ஒதுக்கப்படுகிறது? யாருடைய சத்தம் கேட்கப்படுவதில்லை? திபோதியு அல்லது அகீக்காம் போன்று துணிச்சலான அடியெடுத்து வைப்பது எளிதல்ல. ஆனால் அதுவே சரியானது. கர்த்தருடைய வழிநடத்துதலோடு யாருடைய சார்பில் நாம் நிற்கவேண்டியுள்ளது?