Archives: ஜூலை 2021

தேவனுடைய மீட்பின் வழி

ஆங்கில இசையின் புகழ்பெற்ற “சிறந்த நாடகக் கலைஞன்” என்ற பாடலானது, அதின் முக்கிய கதாபாத்திரத்தினால், தன் குடும்பத்தையும் சிநேகிதர்களையும் காயப்படுத்தியதைக் குறித்து சுயஉணர்வு அடைந்து பாடப்படுகிறது. அந்த பாடல் தன் சொந்த வீட்டிற்கு திரும்புவதின் மகிழ்ச்சியையும், தன்னிடத்தில் உள்ளதே போதுமானது என்ற நிறைவையும் கண்டறிவதாக அமைந்துள்ளது. 

ஓசியா புத்தகமும் அதேபோன்று தான் முடிகிறது. அதில் தன்னிடமாய் திரும்புபவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் தருவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். புத்தகத்தின் பெரும்பான்மை, தேவனுக்கும் அவருடைய ஜனத்திற்குமான உறவை துரோகம் செய்யும் ஒரு மனைவியோடு ஒப்பிட்டு, தேவனை நேசிக்கவும் அவருக்காய் வாழவும் தவறின இஸ்ரவேலின் தோல்வியை முன்வைக்கிறது. 

14ஆம் அதிகாரத்தில் தேவனை ஏமாற்றியதை எண்ணி இருதயம் உடைக்கப்பட்டவர்களாய் அவரிடத்தில் திரும்புபவர்களுக்கு, தேவனுடைய அளவில்லாத அன்பு, கிருபை மற்றும் மீட்பு ஆகியவைகள் இலவசம் என்னும் நம்பிக்கையின் செய்தி முன்வைக்கப்படுகிறது (வச. 1-3). “நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்” என்றும் “அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்” என்றும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 4). தேவனுடைய கிருபை பனியைப்போல் பொழிந்து, லீலிப் புஷ்பத்தைப்போலவும் தானிய விளைச்சலைப்போலவும் செழிக்கப்பண்ணி, சீர்படுத்தமுடியாத உறவை மீண்டும் புதுப்பித்து திருப்பதியாக்குகிறது (வச. 5-7). 

நாம் யாரையாவது காயப்படுத்தினதுண்டானால், அல்லது நம்முடைய வாழ்வில் தேவனுடைய இரக்கத்தை நமக்குச் சாதகமாய் பயன்படுத்திக்கொண்டாலோ, நமக்கு அளிக்கப்பட்ட நல்ல வரங்களை காலாகாலத்திற்கும் பாழாக்குகிறோம். ஆனால் தாழ்மையோடு அவரிடத்திற்குத் திரும்பினால், அவருடைய அன்பு எப்போதும் நம்மை அரவணைத்து, நம்முடைய வாழ்க்கையை சீரமைப்பதை நாம் பார்க்கமுடியும்.

பாரபட்சமும் மன்னிப்பும்

அநீதியை எதிர்க்கும்படியான பிரசங்கத்தைக் கேட்டவுடன் ஒரு சபை விசுவாசி போதகரிடம் வந்து, கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டார். ஏனென்றால், தங்கள் திருச்சபைக்கு கீழ் ஜாதியைச் சேர்ந்தவர் போதகராக வருவதை விரும்பாததினால், தான் பாரபட்சத்துடன் செயல்பட்டதாகவும், அதினால் அந்த போதகருக்கு தான் ஓட்டுப்போடாததையும் எண்ணி மனம் வருந்தினார். “அதற்காக என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும். இந்த பாரபட்சம் மற்றும் ஜாதி வெறி போன்ற குப்பைகள் என் பிள்ளைகளின் வாழ்க்கையை பாதிக்கக்கூடாது. நான் உங்களுக்கு ஓட்டுப் போடாமல் தவறு செய்துவிட்டேன்” என்று வருந்தினார். கண்ணீருடனான அவருடைய பாவ அறிக்கை, போதகரின் கண்ணீரோடு கூடிய மன்னிப்பை வாங்கித் தந்தது. தொடர்ந்த வாரத்தில், மனந்திரும்பிய இந்த விசுவாசியின் சாட்சியைக் கேட்டு திருச்சபை மகிழ்ச்சியடைந்தது. 

இயேசுவின் சீஷரும் ஆதித்திருச்சபையின் மூத்த தலைவருமான பேதுருவும் புறஜாதி மக்களைக் குறித்த தன்னுடைய பாரபட்ச சிந்தையை மாற்றவேண்டியிருந்தது. தீட்டாய் கருதப்பட்ட புறஜாதி மக்களுடன் உட்கார்ந்து புசிப்பதும் குடிப்பதும், சமுதாய மற்றும் மார்க்க ரீதியாய் அனுமதிக்கப்படவில்லை. பேதுருவும், “அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” (அப்போஸ்தலர் 10:28) என்று சொல்லுகிறார். அந்த நம்பிக்கையை மாற்றி, “எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும்” (வச. 28) சொல்லாதபடிக்கு மனமாற்றப்பட்ட பேதுருவுக்கு தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அதை வெளிப்படுத்தியிருக்கவேண்டும் (வச. 9-23). 

வேதாகமத்தின் போதனைகள், ஆவியானவரின் உணர்த்துதல் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றைக் கொண்டு தேவன் தொடர்ச்சியாக நம் உள்ளத்தில் கிரியை செய்து, மற்றவர்களைக் குறித்த நம் பாரபட்ச சிந்தையை மாற்றுகிறார். “தேவன் பாரபட்சமில்லாதவர்” என்பதை நமக்கு உணர்த்துகிறார் (வச. 34). 

வாழ்க்கையின் புயல்களை திசைதிருப்புதல்

ஜான் கென்னடி ஜூனியர் (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் மகன்), 1999 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி, சிறிய விமானத்தில் பறக்கும்போது, விபத்து நேரிட்டு, விமானம் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. விபத்திற்கு காரணம், பாதை சரியாய் தெரியவில்லை என்ற வழக்கமான குறைபாடுதான் என்று கண்டறிப்பட்டது. அதாவது, விமானத்தைத் தரையிறக்கும்போது, பாதை தெளிவாய் தெரியாத பட்சத்தில் கருவிகளை நம்புவதை விட்டுவிட்டு, விமானத்தை திசைதிருப்பி தரையிறக்க முயற்சிப்பார்கள். 

வாழ்க்கையின் காரியங்கள் நம்மை அடிக்கடி மேற்கொள்ளும்போது, நாம் திசைதிருப்பப்பட்டதாக உணருகிறோம். புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுதல், நேசிக்கிறவர்களின் மரணம், வேலை இழப்பு, நண்பனின் துரோகம் போன்ற வாழ்க்கையின் எதிர்பாராத நிகழ்வுகள் நம்மை தோற்கடிக்கவும் குழப்பவும் செய்கிறது. 

இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் கடந்துசெல்லும்போது சங்கீதம் 43ஐ ஜெபமாக ஏறெடுக்கலாம். இந்த சங்கீதத்தில், சங்கீதக்காரன் தீமையினாலும் அநீதியினாலும் சூழப்பட்டவராய் தோல்வியின் பாதையில் தொலைந்துபோனவராய் உணருகிறார். விரக்தியில் சங்கீதக்காரன் தேவனுடைய வழிநடத்துதலைச் சார்ந்து, தான் அதிகம் விரும்பும் தேவனுடைய சமுகத்திற்கு பத்திரமாய் தன்னை திசைதிருப்பும்படி விண்ணப்பிக்கிறான் (வச. 3-4). தேவ சமுகத்தில் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் புதுப்பிக்கப்படுவதை சங்கீதக்காரன் அறிந்திருக்கிறான். 

வழிநடத்துதலுக்கு சங்கீதக்காரனுக்கு தேவைப்பட்ட கருவிகள் யாவை? சத்தியத்தின் வெளிச்சமும், பரிசுத்த ஆவியின் மூலம் உறுதியளிக்கப்பட்ட தேவனுடைய சமுகமுமே. 

நீங்கள் திசைமாறி தொலைந்துபோனவர்களாய் உணரும்போது, தேவன் தன்னுடைய ஆவியின் மூலமாகவும் சமுகத்தின் மூலமாகவும் உங்களை வழிநடத்தி, உங்களை தேற்றவும் உங்கள் பாதைக்கு வெளிச்சத்தைக் காட்டவும் முடியும். 

நம்பிக்கையுள்ள ஜெபம்

குழந்தையில்லாமையோடு ஆண்டுகளாய் போராடிய விஷ்வாஸ் மற்றும் ரீடா தம்பதியினர், ரீடா கருவுற்றபோது ஆச்சரியப்பட்டனர். ரீடாவின் சரீர பெலவீனம் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருந்ததால் ஒவ்வொரு நாள் இரவும் விஷ்வாஸ் தன் மனைவிக்காகவும் பிள்ளைக்காகவும் தொடர்ந்து ஜெபித்து வந்தார். ஒரு நாள் இரவில், தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாக வாக்குப்பண்ணியிருந்ததால் இனி மன்றாடி ஜெபிக்க வேண்டியதில்லை என்று தீர்மானித்தார். ஆனால் ஒருவாரம் கழித்து, ரீடாவிற்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. விஷ்வாஸ் மனமுடைந்துபோனார். தான் மன்றாடி ஜெபிக்காததினால் தான் குழந்தையை இழக்க நேரிட்டதோ என யோசித்தார். 

முதல்முறை வாசிக்கும்போது இந்த உவமையும் அப்படித்தான் எண்ணத் தூண்டும். அதில் தன் சிநேகிதனின் தொந்தரவு பொறுக்காமல் அவனுக்கு உதவிசெய்ய தன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறான் (தேவனை பிரதிபலிக்கும் கதாபாத்திரமாய் நம்பப்படுகிறது) (லூக்கா 11:5-8). அதாவது, தேவனை தொந்தரவு செய்தால் தான், நமக்குத் தேவையானதை அவர் கொடுப்பார் என்பதை உவமை ஆலோசிக்கிறது. நாம் கடினமாய் மன்றாடி ஜெபிக்கவில்லையென்றால் தேவன் ஒருவேளை நமக்கு உதவி செய்யாமலிருக்கலாம். 

ஆனால் பிரபல விளக்கவுரை ஆசிரியர்கள் இந்த உவமை தவறாய் புரிந்துகொள்ளப்படுகிறது என்று கருதுகின்றனர். அதின் உண்மையான அர்த்தம் என்னவெனில், நம் சிநேகிதர்கள் தங்கள் சுயநல காரணங்களை வைத்துக்கொண்டே நமக்கு உதவ முன்வந்தால், எந்த சுயநலமுமில்லாத தேவன் நமக்கு எவ்வளவு உதவுவார் என்பதே அதின் அர்த்தம். ஆகையினால் மனிதர்களைக் காட்டிலும் தேவன் பெரியவர் என்பதை அறிந்து (வச. 11-13), நாம் நம்பிக்கையோடே அவரிடத்தில் கேட்போம் (வச. 9-10). இந்த உவமையில் இடம்பெற்றுள்ள சிநேகிதன் கதாபாத்திரம் தேவனைக் குறிக்கவில்லை; மாறாக, தேவன் அவருக்கு நேர் எதிரான சுபாவம் கொண்டவர் என்பதைக் காண்பிக்கிறது. 

நான் விஷ்வாவைப் பார்த்து, “உன் குழந்தையை நீ ஏன் இழந்தாய் என்று எனக்குத் தெரியாது; ஆனால் நீ கடினமாய் மன்றாடி ஜெபிக்கவில்லை என்பது மட்டும் காரணமாய் இருக்கமுடியாது. தேவன் அப்படிப்பட்டவரல்ல” என்று சொன்னேன்.

கேள்! கற்றுக்கொள்!

வீதியின் ஒருபுறத்திலிருந்த வீட்டு உரிமையாளர் தன்னுடைய வீட்டில் அரசியல் கட்சி ஒன்றின் கொடியைப் பறக்கவிட்டிருந்தார். அந்த பாதையில் கனரக வாகனம் ஒன்றின் ஜன்னல் கதவிலும் வரையப்பட்ட கொடி ஒன்றும் அதின் முன்பகுதியில் தேசபக்தியை வெளிப்படுத்தும் ஒட்டுக்காதிதங்களும் ஒட்டப்பட்டிருந்தது. அதே வீதியின் இன்னொரு வீட்டின் முற்றத்தில் சமூக அநீதியை எதிர்க்கும் புரட்சி வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. 

இந்த வீடுகளில் இருக்கும் மக்கள் விரோதிகளா? அல்லது நண்பர்களா? என்று நாம் ஆச்சரியப்படலாம். அந்த இரு வீடுகளிலும் இருப்பவர்கள் இயேசுவின் விசுவாசிகளாய் இருக்க முடியுமா? யாக்கோபு 1:19ன் படி வாழுவதற்கு தேவன் நம்மை அழைத்திருக்கிறார்: “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.” பெரும்பாலான நேரத்தில் மற்றவர்களின் கருத்துக்கு செவிகொடுக்காமல், நம்முடைய கருத்தையே பிடிவாதமாய் நாம் முன்வைப்பதுண்டு. மேத்யூ ஹென்றி விளக்கவுரையில் இந்த வாக்கியம் சற்று வித்தியாசமாய் இடம்பெற்றுள்ளது: “காரணத்தையும், எல்லா தரப்பு நியாயத்தையும் கேட்கிறதற்கு யாவரும் தீவிரமாயும், பேசுகிறதற்கு பொறுமையாயும்... அப்படி பேசும்போது கோபப்படாத வகையிலும் பேசவேண்டும்.”    

“கற்றுக்கொள்வதற்கு கேட்பது மிகவும் அவசியம்” என்று ஒருவர் சொல்லுகிறார். தேவனுடைய அன்பின் ஆவியினால் நிரப்பப்படுவதினாலும், மற்றவர்களைக் கனப்படுத்த பழகும்போதுமே யாக்கோபு நிருபத்தில் சொல்லப்பட்டுள்ள யதார்த்தமான வார்த்தைகள் சாத்தியமாகும். நம்முடைய இருதயத்திலும் சிந்தையிலும் மாற்றத்தைக் கொண்டுவரும் உதவியைச் செய்ய அவர் வாஞ்சையாயிருக்கிறார். நாம் கேட்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் ஆயத்தமா?