மேகா தன் சிநேகிதியிடமிருந்து வந்த கொரியரைப் பிரித்துப் பார்த்தாள். சில நாட்களுக்கு முன்பாக அந்த சிநேகிதியுடன் உறவு ரீதியாக பிரச்சனை அவளுக்கு ஏற்படடிருந்தது. மிகுந்த ஆவலுடன் அந்த பரிசை திறந்துப் பார்த்தாள். அதில் பலவர்ண மணிகள் கோர்க்கப்பட்ட அழகான கழுத்து அணிகலன் இருந்தது. அத்துடன், “தேவனுடைய வழியை நாடு” என்ற வாசகம் எழுதப்பட்ட துண்டு காகிதமும் அதில் இருந்தது. மகிழ்ச்சியோடு மேகா அந்த சரப்பணியை தன் கழுத்தில் அணிந்துகொண்டாள்.
நீதிமொழிகள் புத்தகம் ஞானிகளின் வார்த்தைகளினால் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் தன் காலத்தில் ஞானியாய் வாழ்ந்த சாலமோனின் கைகளால் எழுதப்பட்டவைகள் அதிகம் (1 இராஜ. 10:23). நீதிமொழிகள் 1:7இல் “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்ற அஸ்திபார வாக்கியத்தில் துவங்கும் நீதிமொழிகளின் 31 அதிகாரங்களும், மதியீனத்தைத் தவிர்த்து ஞானத்தைத் தேடும்படிக்கு அழைப்புக் கொடுக்கிறது. எப்போது எதைச் செய்யவேண்டும் என்னும் ஞானமானது, கர்த்தருடைய வழியை நாடுவதின் மூலமாகவும், அவரை கனப்படுத்துவதினாலும் நமக்குக் கிடைக்கிறது. அறிமுக வார்த்தைகளில், “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்” (வச. 8-9) என்று வாசிக்கிறோம்.
மேகாவின் சிநேகிதி “தேவனுடைய வழிகளை நாடு” என்று ஞானத்தின் அஸ்திபாரத்திற்கு நேராய் அவளை வழிநடத்தினாள். மேகாவிற்கு தேவையான உதவி எங்கு கிடைக்கும் என்பதை அவளுடைய பரிசு அவளுக்கு காட்டியது.
தேவனைக் கனப்படுத்தி, அவருடைய வழிகளை நாடும்போது, நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து ஞானத்தையும் நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும்.
ஞானம் தேவைப்படும்போது எங்கு போவீர்கள்? தேவன் உங்களுக்கு வழியைக் காட்டும்போது, அவருடைய வார்த்தைகளை நீங்கள் எவ்வாறு சரப்பணியைப் போல் கழுத்தில் அணிந்துகொள்வீர்கள்?
தேவனே, நீரே எல்லா ஞானத்திற்கும் அஸ்திபாரம் என்பதை எனக்கு நினைவுபடுத்தும். அதை எப்போதும் நான் நாட விரும்புகிறேன்.
