“தகப்பனில்லாத தலைமுறை” என்னும் ஜான் சோவர்ஸின் புத்தகத்தில், “இதுவரையில்லாத எந்த தலைமுறையைக் காட்டிலும், தற்போதுள்ள தலைமுறையில் 25 மில்லியன் பிள்ளைகள் தகப்பனில்லாமல் தாயால் வளர்க்கப்படுகின்றனர்” என்று எழுதுகிறார். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில், வீதியில் நடக்கும்போது ஒருவேளை என்னுடைய அப்பா எனக்கு எதிரே வந்து என்னை மோதினாலும், அவர்தான் என்னுடைய அப்பா என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால், நான் சிறுபிள்ளையாயிருக்கும்போதே என்னுடைய பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. என் அப்பாவின் அனைத்து புகைப்படங்களும் எரிக்கப்பட்டுவிட்டது. ஆகையினால், பல ஆண்டுகளாக நான் தகப்பனில்லாமல் வாழ்ந்திருக்கிறேன். என் பதிமூன்றாம் வயதில் பரமண்டல ஜெபத்தைக் கேட்க நேர்ந்தது (மத்தேயு 6:9-13). “பூமியில் நீ தகப்பனில்லாதவனாய் இருக்கலாம், ஆனால் தேவன் உன் பரலோகத் தகப்பனாயிருக்கிறார்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். 

மத்தேயு 6:9இல் “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளோம்.” 7ஆம் வசனத்தில் ஜெபத்தில் “வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வசனங்கள் எப்படி தொடர்புடையதாகிறது என்று நாம் ஆச்சரியப்படலாம். நான் அதை உணர்ந்திருக்கிறேன். நாம் மீண்டும் மீண்டும் சொல்லத் தேவையில்லை, அவருக்கு ஞாபகம் இருக்கும். நாம் விளக்கத் தேவையில்லை, அவருக்குப் புரியும். அவர் இரக்கமுள்ளவர், அவரின் நன்மைகளைக் குறித்து நாம் சந்தேகிக்கத் தேவையில்லை. அவருக்கு முடிவு ஆரம்பத்திலேயே தெரியும் என்பதினால் அவர் கிரியை செய்யும் காலமே சரியானது. 

தேவன் நம் தகப்பனாய் இருப்பதால் அவரை செயல்பட வைப்பதற்கு “வீண்வார்த்தைகளை” (வச. 7) நாம் பயன்படுத்தத் தேவையில்லை. ஜெபத்தில், நம்மை நேசிக்கிற, நம்மேல் அக்கறையுள்ள நம்மை கிறிஸ்துவின் மூலம் பிள்ளையாக்கிக் கொண்ட, நம் அப்பாவிடம் பேசுகிறோம்.