Archives: ஜூன் 2021

தேவன் இருக்கிறார்

ஆப்ரே தன் வயதான அப்பாவிற்காக தோலினால் தைக்கப்பட்ட ஒரு மேலுறையை வாங்கினாள். ஆனால் அதை அணிவதற்குள் அவர் இறந்துவிட்டார். எனவே அந்த தோல் மேலுறையின் பாக்கெட்டில் ஒரு உற்சாகப்படுத்தும் வாக்கியம் எழுதப்பட்ட துண்டுகாகிதத்தையும், அத்துடன் 20 டாலர்கள் பணத்தையும் வைத்து, ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக கொடுத்துவிட்டாள்.

சமாதானமில்லாத தன் குடும்பச் சூழ்நிலையை தாங்கிக்கொள்ள முடியாத கெல்லி, தன் வீட்டை விட்டு வெளியேறினான். போகும்போது அவன் மேலுறையை எடுக்க மறந்துவிட்டான். அவனுக்கு தெரிந்த ஒரே இடம், அவனுக்காய் ஜெபிக்கும் அவனுடைய பாட்டி வீடு. 90 மைல்கள் தூரத்திலிருக்கும் தன் பாட்டி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். குளிரின் தாக்கம் அதிகமாய் இருந்ததால், அவனுக்கு ஒரு மேலுறையை வாங்க வேண்டும் என்று பாட்டி சொன்னார்கள். அருகிலிருந்த மிஷன் கடையை நாடி, கெல்லி தனக்கு பிடித்த ஒரு மேலுறையைத் தேர்ந்தெடுத்தான். அதின் பாக்கெட்டில் கைவிட்டுப்பார்த்த கெல்லியின் கைக்கு, 20 டாலர்கள் பணமும் ஆப்ரேயின் உற்சாக வார்த்தை எழுதப்பட்டிருந்த துண்டு காகிதமும் சிக்கியது.

தன்னுடைய குடும்பச் சூழ்நிலை காரணமாகவே யாக்கோபும் தன்னுடைய வீட்டை விட்டு வெறியேறினான் (ஆதியாகமம் 27:41-45). இரவில் ஓரிடத்தில் தங்கி, தூங்கும்போது, தேவன் சொப்பனத்தில் அவனுக்கு வெளிப்பட்டு, “நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து” நடத்துவேன் என்று வாக்குப்பண்ணுகிறார். உடனே யாக்கோபு, “தேவன் என்னோடே இருந்து... உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்(தால்)... கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்” என்று பொருத்தனை செய்கிறான் (வச. 20-21).

யாக்கோபு அந்த இடத்தில் ஒரு கல்லை நாட்டி, அந்த இடத்திற்கு “தேவனுடைய வீடு” என்று பேரிட்டான் (வச. 22). கெல்லி, ஆப்ரேயின் துண்டுகாகிதத்தையும் 20 டாலர்கள் பணத்தையும் நினைவுகூரும்பொருட்டு, போன இடத்திற்கெல்லாம் கொண்டு சென்றான். இந்த இரண்டுமே, நாம் போகுமிடத்திலெல்லாம் தேவன் நம்மோடிருக்கிறார் என்பதை நினைவுகூறவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

அவர் உனக்காய் யுத்தம் செய்வார்

சரித்திரத்தில் புகழ்பெற்ற லைட் பிரிகேட் யுத்தத்தின் போது, “டிரம்மர் பாய்” என்று பெயர்கொண்ட காயப்பட்ட அந்த குதிரை 112 மலை ஏற்றங்களைக் கடந்து பிரிட்டிஷ் இராணுவ வீரனை யுத்தத்திற்கு சுமந்து வந்த பெருமைக்குரியது. அது இராணுவ படைத்தளபதி, லெப்டினன்ட் கலோனல் டி சலீஸின் குதிரை. திறமையுள்ள வீரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் பதக்கம் அந்த குதிரைக்கும் கொடுக்கப்பட்டது. யுத்தத்தில் அவர்களின் படை ஜெயிக்கவில்லை என்றபோதிலும், குதிரைக்கு இந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் இராணுவ வரலாற்றில் ஒரு குதிரைக்கு கிடைத்த இந்த அந்தஸ்து சர்ச்சையை கிளப்பினாலும், இன்றும் கொண்டாடப்படுகிறது.

இந்த சர்ச்சை பழம்பெரும் நீதிமொழியை நமக்கு நினைவுபடுத்துகிறது. “குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்” (நீதிமொழிகள் 21:31). வேதாகமம் இந்தக் கொள்கையை மிகத் தெளிவாய் உறுதிபடுத்துகிறது. “உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர்” (உபாகமம் 20:4). மரணத்தின் பிடியிலிருந்தும், “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று பவுல் குறிப்பிடுகிறார்.

இந்த உண்மையை அறிந்தவர்களாய், வாழ்க்கையின் கடினமான சவால்களை சந்திக்க நம்முடைய ஆயத்தங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம். ஒரு ஊழியத்தைத் துவங்குவதற்கு, படிப்போம், உழைப்போம், அதிகமாய் ஜெபிப்போம். ஒரு அழகான ஓவியத்தை உருவாக்குவதற்கு தேவையான திறமையை வளர்த்துக்கொள்வோம். மலையின் உச்சியை அடைவதற்கு தேவையான கருவிகளை ஆயத்தப்படுத்துவோம் ; நம்மையும் பலப்படுத்திக்கொள்வோம். நம்முடைய தரப்பில் ஆயத்தமாகிய பின், கிறிஸ்துவின் உறுதியான அன்பைச் சார்ந்து யுத்தத்தில் வெற்றிபெறுவோம்.

தேவனோடு நேரம் செலவழித்தல்

“அதின் வழியாய் ஓர் ஆறு கடந்து செல்கிறது” - இது நார்மன் மெக்லீனின் தலைசிறந்த ஒரு கதை. அமெரிக்காவின் மேற்கத்திய மாகாணத்தில் உள்ள பிரஸ்பிடேரியன் திருச்சபையின் போதகரையும் அவருடைய இரண்டு மகன்களையும் குறித்த கதை. ஞாயிற்றுக் கிழமை காலையில் பொதுவாக நார்மன் மற்றும் அவனுடைய சகோதரன் பால் ஆகிய இருவரும் தங்கள் அப்பாவுடைய பிரசங்கத்தைக் கேட்பதற்கு திருச்சபை செல்வது வழக்கம். ஞாயிற்றுக் கிழமை மாலையிலும் ஆராதனை இருக்கும். இடைப்பட்ட நேரத்தில் அப்பா தன் இரண்டு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு நீரோட்டம் பாயும் மலைப்பாதைகளில் உலாவச் செல்வார். தன் ஆத்துமாவை உயிர்பிக்கவும், மாலை பிரசங்கத்திற்கு தன்னை மனரீதியாய் ஆயத்தப்படுத்தவும், அதை அவர் சுயநினைவோடே தொடர்ந்து செய்துவந்தார்.

இயேசு மலைகளிலும் பட்டணங்களிலும் அநேகருக்கு போதனை செய்வதையும், அவரிடத்தில் கொண்டுவரப்பட்ட வியாதியஸ்தர்களை சுகமாக்கியதையும் சுவிசேஷஷமெங்கிலும் பார்க்கமுடியும். இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்னும் தனது வேலையை இயேசு உண்மையாய் செய்தார் (லூக். 19:10). ஆனாலும் அடிக்கடி கூட்டத்தை விட்டு தன்னை தனிமைப்படுத்துவதை பார்க்கமுடியும் (5:16). அந்த தனிமையில் தன் பிதாவோடு நேரம் செலவழித்து, பூமியில் தனக்கு பிதாவினால் ஒப்புவிக்கப்பட்ட வேலையைத் தொடர்ந்து செய்ய தன்னை பலப்படுத்திக்கொள்வது இயேசுவின் வழக்கம்.

நம்முடைய ஊழியப்பாதையில் இயேசுவின் இந்த தனிமைப்படுத்தலை நினைவுகூறுவது நல்லது. இயேசுவுக்கே இந்த தனிமை அவசியப்பட்டதென்றால், நாம் எம்மாத்திரம்? நம்மை பொங்கி வழிந்தோடச் செய்யும் தேவனோடு தனிமையில் நேரம் செலவழிக்கப் பழகுவோம்.

நமது பிரச்சனையைக் காட்டிலும் பெரியவர்

டைனோசர்கள் வாழ்ந்த நாட்களில் அது எப்படி இருந்திருக்கும்? பெரிய பற்கள்? செதில் தோல்கள்? நீண்ட வால்? ஒரு ஓவியர் இந்த பெரிய உயிரினத்தை பெரிய ஓவியமாகத் தீட்டினார். 20அடி உயரமும் 60அடி அகலமும் கொண்ட அந்த சுவரோவியம், கைதேர்ந்த நபர்களால் சாம் நோபுள் ஒக்லஹோமா உயிரியல் பூங்காவில் கவனத்துடன் பொருத்தப்பட்டது.

அந்த பெரிய உருவத்திற்கு முன் நிற்கும் எவருக்கும் தாங்கள் வெகு சிறியவர்கள் என்ற உணர்வு ஏற்படும். “பிகெமோத்” என்னும் பெரிய மிருகத்தைக் குறித்து வேதாகமத்தில் வாசிக்கும்போது எனக்கும் அதே உணர்வுதான் ஏற்படுகிறது (யோபு 40:15). இந்த பெரிய மிருகம் மாட்டைப்போல் புல்லைத் தின்கிறது. அதின் எலும்புகள் இரும்பு கம்பிகள் போலிருக்கிறது. அதின் வாலை கேதுரு மரத்தைப் போல் நீட்டுகிறது. அது மலைகளில் மேய்ந்து, சதுப்பு நிலங்களில் படுத்துக்கொள்கிறது. நதிகளின் வெள்ளம் புரண்டுவந்தாலும் அது பயப்படாது. 

இந்த வியக்கத்தக்க உயிரினத்தை அதை உண்டாக்கியவரைத் தவிர்த்து யாராலும் கட்டுப்படுத்த முடியாது (வச. 19). இதை, கடினமான உபத்திரவத்தின் பாதையில் யோபு நடக்கும்போது தேவன் அவனுக்கு நினைப்பூட்டுகிறார். யோபு தேவனிடத்தில் கேள்வி கேட்பதற்கு முன்பு, வேதனை, குழப்பம், விரக்தி, என்று பல கடினமான பாதைகளின் ஊடாய் கடந்து வருகிறான். ஆனால் அவைகளின் உண்மையான உருவத்தை தேவனுடைய பதில் யோபுக்கு காண்பித்தது. யோபின் பிரச்சனைகளைக் காட்டிலும் தேவன் பெரியவர்; யோபைக் காட்டிலும் அந்த பிரச்சனைகளை அவரால் நேர்த்தியாய் கையாள முடியும் என்பதை யோபுக்கு உணர்த்தப்படுகிறது. கடைசியில், “தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்” (42:2) என்பதை யோபு ஒப்புக்கொண்டான்.

சமாதானமான வாழ்க்கை

ஆஸ்திரேலியாவின் பெர்த் என்ற இடத்தில் “சமாதான இல்லம்” என்று ஒரு இடமுண்டு. போதை பழக்கத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கான இடம் அது. இந்த சமாதான இல்லத்தில் தேவனுடைய சமாதானத்தை அறிவிக்கும் அன்புள்ள பணியாளர்களை அவர்கள் சந்திக்க நேரிடும். போதை, மதுபானம், சூதாட்டம் மற்றும் பல கெட்ட பழக்கங்களினால் சிதைந்துபோன வாழ்க்கை அங்கே தேவனுடைய அன்பினால் சீரமைக்கப்படுகிறது.

இங்கு நடைபெறும் மனமாற்றத்திற்கு பெரிய காரணம், சிலுவையின் செய்தியே. சமாதான இல்லத்தை நாடும் உடைக்கப்பட்ட மக்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்புவதால், தங்களுடைய ஜீவியத்திலும் உயிர்தெழும் அனுபவத்தை பெறுகிறார்கள். நாமும் கிறிஸ்துவில் சமாதானத்தையும் சுகத்தையும் அடைகிறோம்.

சமாதானம் என்பது பிரச்சனையே இல்லாத வாழ்க்கையல்ல மாறாக, பிரச்சனைகளின் மத்தியில் தேவனுடைய நிறைவை அனுபவிப்பது. நம் எல்லோருக்கும் இந்த சமாதானம் தேவை. அது கிறிஸ்துவினாலும் அவருடைய ஆவியானவராலும் மட்டுமே சாத்தியம். ஆகையினால்தான் பவுல் கலாத்திய சபையை ஆவியின் மறுரூபத்திற்கு நேராய் வழிநடத்துகிறார். பரிசுத்த ஆவி நம்முடைய வாழ்க்கையில் கிரியை செய்யும்போது, அன்பு, சந்தோஷம், நீடியபொறுமை போன்ற ஆவியின் கனிகள் நம்மில் உருவாகத் துவங்கும் (கலாத்தியர் 5:22-23). அவராலேயே நிலையான சமாதானத்தை நமக்குத் தரமுடியும்.

ஆவியானவர் நமக்கு தேவ சமாதானத்தை கொடுக்கும்போது, நம்முடைய எல்லா தேவைகளுக்காகவும் நாம் பரமபிதாவை நாடுவதற்கு பழகுகிறோம். அப்பொழுது, “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்,” “(நம்முடைய) இருதயங்களையும் (நம்முடைய) சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி. 4:7).

கிறிஸ்துவின் ஆவியில் நம்முடைய உள்ளம் மெய்சமாதானத்தை அனுபவிக்கிறது.