ஆஸ்திரேலியாவின் பெர்த் என்ற இடத்தில் “சமாதான இல்லம்” என்று ஒரு இடமுண்டு. போதை பழக்கத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கான இடம் அது. இந்த சமாதான இல்லத்தில் தேவனுடைய சமாதானத்தை அறிவிக்கும் அன்புள்ள பணியாளர்களை அவர்கள் சந்திக்க நேரிடும். போதை, மதுபானம், சூதாட்டம் மற்றும் பல கெட்ட பழக்கங்களினால் சிதைந்துபோன வாழ்க்கை அங்கே தேவனுடைய அன்பினால் சீரமைக்கப்படுகிறது.

இங்கு நடைபெறும் மனமாற்றத்திற்கு பெரிய காரணம், சிலுவையின் செய்தியே. சமாதான இல்லத்தை நாடும் உடைக்கப்பட்ட மக்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்புவதால், தங்களுடைய ஜீவியத்திலும் உயிர்தெழும் அனுபவத்தை பெறுகிறார்கள். நாமும் கிறிஸ்துவில் சமாதானத்தையும் சுகத்தையும் அடைகிறோம்.

சமாதானம் என்பது பிரச்சனையே இல்லாத வாழ்க்கையல்ல மாறாக, பிரச்சனைகளின் மத்தியில் தேவனுடைய நிறைவை அனுபவிப்பது. நம் எல்லோருக்கும் இந்த சமாதானம் தேவை. அது கிறிஸ்துவினாலும் அவருடைய ஆவியானவராலும் மட்டுமே சாத்தியம். ஆகையினால்தான் பவுல் கலாத்திய சபையை ஆவியின் மறுரூபத்திற்கு நேராய் வழிநடத்துகிறார். பரிசுத்த ஆவி நம்முடைய வாழ்க்கையில் கிரியை செய்யும்போது, அன்பு, சந்தோஷம், நீடியபொறுமை போன்ற ஆவியின் கனிகள் நம்மில் உருவாகத் துவங்கும் (கலாத்தியர் 5:22-23). அவராலேயே நிலையான சமாதானத்தை நமக்குத் தரமுடியும்.

ஆவியானவர் நமக்கு தேவ சமாதானத்தை கொடுக்கும்போது, நம்முடைய எல்லா தேவைகளுக்காகவும் நாம் பரமபிதாவை நாடுவதற்கு பழகுகிறோம். அப்பொழுது, “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்,” “(நம்முடைய) இருதயங்களையும் (நம்முடைய) சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி. 4:7).

கிறிஸ்துவின் ஆவியில் நம்முடைய உள்ளம் மெய்சமாதானத்தை அனுபவிக்கிறது.