ஏராளமான தண்ணீர்
தீவிர வறட்சி, உஷ்ணம், நெருப்பு என்று “ஒரு மோசமான கதையை” அந்த அறிக்கை சமர்ப்பித்தது. பசபசப்பான செடிகளை காய்ந்த சருகுகளாக மாற்றக்கூடிய, வெகு குறைந்த மழையுடனான ஒரு பயங்கரமான ஆண்டைக் குறித்து அந்த அறிக்கை விவரித்தது. பொங்கி எழுந்த தீ கிராமப்புறங்களை எரித்தது. மீன்கள் உயிரிழந்தது. பயிர்கள் அற்றுபோயிற்று. எல்லாவற்றிற்கும் காரணம் நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் தண்ணீர் என்னும் ஒரு எளிய ஆதாரம் அவர்களிடம் இல்லாததுதான். நாம் அனைவரும் வாழ தண்ணீர் மிகவும் அவசியம்.
இஸ்ரவேலர்கள் கடினமான ஒரு சூழ்நிலையில் இருந்தனர். ஜனங்கள் தூசி நிறைந்த, தரிசான பாலைவனத்தில் முகாமிட்டபோது, அவர்கள் இப்படியாய் கூறுகிறார்கள்: “அங்கே ஜனங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாதிருந்தது” (யாத்திராகமம் 17:1). மக்கள் பயந்தார்கள். அவர்களின் தொண்டை வறண்டு இருந்தது. மணலின் சூடு அவர்களை தாக்கிற்று. அவர்களின் குழந்தைகளுக்கு தாகம் ஏற்பட்டது. பீதியடைந்த மக்கள், தண்ணீர் வேண்டி மோசேயுடன் வாதாடினார்கள் (வச. 2). ஆனால் மோசே என்ன செய்ய முடியும்? அவர் தேவனிடம் மட்டுமே செல்ல முடியும்.
தேவன் மோசேக்கு ஒரு விசித்திரமான அலோசனையைக் கொடுத்தார்: “உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு... நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்” (வச. 5-6). ஆகவே, மோசே கன்மலையை அடித்தான், ஒரு நதி அதிலிருந்து புறப்பட்டது, ஜனங்களுக்கும் அவர்களுடைய கால்நடைகளுக்கும் குடிக்க ஏராளமாய் தண்ணீர் கிடைத்தது. தங்கள் தேவன் தங்களை நேசிக்கிறார் என்பதை இஸ்ரவேல் அந்நாளிலே அறிந்தார்கள். அவர்களின் தேவன் ஏராளமான தண்ணீரினால் அவர்களை ஆசீர்வதித்தார்.
நீங்கள் வாழ்க்கையில் வறட்சியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்றால், அந்த சூழ்நிலை தேவனுக்கு தெரியும் என்பதையும் அவர் உங்களோடே இருக்கிறார் என்பதையும் அறியுங்கள். உங்கள் தேவை எதுவாக இருந்தாலும், உங்கள் குறைபாடு எதுவாக இருந்தாலும், அவருடைய ஏராளமான தண்ணீரில் நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் காணலாம்.
புதுப்பிக்கப்பட்ட பார்வை
எனது இடது கண்ணில் வலி மிகுந்த ஒரு சிறிய அறுவைசிகிச்சைக்குப் பிறகு, எனது மருத்துவர் பார்வை பரிசோதனைக்கு பரிந்துரைத்தார். நம்பிக்கையுடன், நான் எனது வலது கண்ணை மூடி, விளக்கப் படத்தின் ஒவ்வொரு வரியையும் எளிதாகப் படித்தேன். என் இடது கண்ணை மூடிக்கொண்டு படிக்க முயன்றபோது, நான் திணறினேன். நான் ஒருவிதத்தில் குருடனாக இருந்துள்ளேன் என்பதை எப்படி அறியாமல் போனேன்?
புதிய கண்ணாடியை அணிந்து, என் பார்வையை சரிசெய்யும்போது, தினசரி சோதனைகள் எப்படி என்னை கிட்டப்பார்வையுள்ளவனாய் மாற்றுகிறது என்பதை உணர்ந்தேன். என் கண்ணில்படுகிற என்னுடைய வேதனைகளையே நான் பார்க்க நேரிட்டது. என்னுடைய நித்தியமான தேவனைப்பற்றியும் அவருடைய உண்மைத்துவத்தையும் நான் பார்ப்பதில் நான் குருடனாகவே செயல்பட்டேன். அத்தகைய குறுகிய கண்ணோட்டத்தில், நம்பிக்கை என்பது பார்வைக்கு தெளிவாய் புலப்படவில்லை.
வேதனை, நிச்சயமற்ற தன்மை மற்றும் இழப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியதினால் தேவனின் நம்பகத்தன்மையை அங்கீகரிக்கத் தவறிய மற்றொரு பெண்ணின் கதையை 1 சாமுவேல் 1ம் அதிகாரம் சொல்கிறது. அன்னாளுக்கு பிள்ளையில்லாததினாலும் அவளுடைய கணவனின் மற்றொரு மனைவியாகிய பெனின்னாளின் மனமடிவாக்கும் பேச்சினாலும் சொல்லமுடியாத ஆழ்ந்த துயரத்தை சகித்தாள். அன்னாளின் கணவர் அவளை தேற்றினாலும், அவளால் திருப்தியாயிருக்கமுடியவில்லை. ஒரு நாள், அவள் மனகிலேசத்தினால் ஜெபித்தாள். ஆசாரியன் ஏலி அவளிடம் கேள்வி எழுப்பியபோது, அவள் தன்னுடைய நிலைமையை விளக்குகிறாள். அவள் கிளம்பும்போது, “ஏலி, சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்” (1 சாமுவேல் 1:17). அன்னாளின் நிலைமை உடனடியாக மாறவில்லை என்றாலும், அவள் நம்பிக்கையுடன் வெளியேறினாள் (வச.18).
1சாமுவேல் 2:1-2-ல் அன்னாளின் ஜெபம் அவளுடைய திசைமாற்றப்பட்ட கவனத்தைக் காட்டுகிறது. அவளுடைய பிரச்சனை மாறுவதற்கு முன்னமே, அன்னாளின் புதுப்பிக்கப்பட்ட பார்வை அவளுடைய பார்வையையும் அவளுடைய அணுகுமுறையையும் மாற்றியது. அவளுடைய கன்மலையும் நித்திய நம்பிக்கையுமான தேவனுடைய பிரசன்னத்தில் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.
விவேகமான ஆலோசனையைக் கேட்பது
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு அரசியல்வாதியைப் பிரியப்படுத்த விரும்புவதாகக் கண்டார். எனவே அவர் சில யூனியன் ராணுவ படைவகுப்புகளை மாற்றுவதற்கான கட்டளையை வெளியிட்டார். போர் குழுவின் செயலாளர் எட்வின் ஸ்டாண்டன் இந்த உத்தரவைப் பெற்றபோது, அதை நிறைவேற்ற அவர் மறுத்துவிட்டார். ஜனாதிபதி ஒரு முட்டாள் என்று அவர் கூறினார். ஸ்டாண்டன் கூறியதை லிங்கனிடம் கூறினார்கள், அவர் பதிலளித்தார்: “நான் ஒரு முட்டாள் என்று ஸ்டாண்டன் சொன்னால், நான் அப்படியாக தான் இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் எப்போதும் சரியானவர்; நான் என்னை சரிசெய்துக் கொள்கிறேன்.” இரண்டு பேரும் பேசினப்போது, ஜனாதிபதி தனது முடிவு ஒரு மோசமான தவறு என்பதை விரைவாக உணர்ந்தார். தயக்கமின்றி அவர் அதைத் திரும்பப் பெற்றார். ஸ்டாண்டன் லிங்கனை ஒரு முட்டாள் என்று அழைத்தபோதிலும், ஸ்டாண்டன் அவருடன் உடன்படாதபோது ஜனாதிபதி தனது தவறான முடிவை பிடித்துக்கொண்டு இல்லாதபடி, அதற்கு பதிலாக, லிங்கன் ஆலோசனையைக் கேட்டு, அதைக் கருத்தில்கொண்டு, மனதை மாற்றிக்கொண்டதின் மூலம் புத்திசாலி என நிரூபித்தார்.
ஞானமான ஆலோசனையைக் கேட்காத ஒருவரை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? (1 இராஜாக்கள் 12:1-11 ஐ காண்க.) இது எரிச்சலூட்டுகிறதல்லவா? அல்லது, இன்னும் தனிப்பட்ட முறையில், நீங்கள் எப்போதாவது ஆலோசனையைக் கேட்க மறுத்திருக்கிறீர்களா? நீதிமொழிகள் 12:15 கூறுவது போல், “மதியீனனுடைய வழி அவன் பார்வைக்கு செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்கு செவிக்கொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.” மக்கள் எப்போதுமே சரியாக இருப்பார்கள் என்று கூறமுடியாது, அது நமக்கும் அது பொருந்தும்! எல்லோரும் தவறு செய்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்கள் மட்டுமே விதிவிலக்கு என்று முட்டாள்கள் கருதுகிறார்கள். அதற்கு பதிலாக, நாம் ஆரம்பத்தில் உடன்படவில்லை என்றாலும், தெய்வீக ஞானத்தைக் கடைபிடிப்போம்; மற்றவர்களின் ஞானமான ஆலோசனையைக் கேட்போம். சில சமயங்களில் தேவன் நம்முடைய நன்மைக்காகவே அவ்வாறு செயல்படுகிறார் (வச. 2).
நமக்கு மேல் பாடுவது
ஒரு இளம் தந்தை தனது ஆண் குழந்தையை கைகளில் பிடித்து, அவனிடம் பாடி, இனிமையான தாளத்தில் ஆட்டினார். குழந்தைக்கு காது கேட்கும் திறன் இல்லாதிருந்தது, எனவே அந்த பாடலின் மெட்டையோ அல்லது சொற்களையோ அதனால் கேட்க முடியவில்லை. ஆயினும் தந்தை அழகான, கனிவான அன்பில் தனது மகனை நோக்கி தொடர்ந்து பாடினார். அவரது முயற்சிகளுக்கு பலனாக அவரது பிள்ளையிடமிருந்து ஒரு மகிழ்ச்சியான புன்னகை பதிலாகக் கிடைத்தது.
தந்தை-மகன் பரிமாற்றத்தின் பிம்பங்களுக்கும் செப்பனியாவின் வார்த்தைகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பழைய ஏற்பாட்டின் இந்த தீர்க்கதரிசி, தேவன் உன்பேரில் கெம்பீரமாய் களிகூருவார் என்று கூறுகிறார் (செப்பனியா 3:17). தேவன் தம்முடைய அன்புக்குரிய மக்களுக்கு அவர்களின் ஆக்கினைகளை அகற்றி, சத்துருக்களை விலக்குவது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதில் மகிழ்ச்சியடைகிறார் (வச.15). இனி அவர்கள் பயப்பட தேவையில்லை, அதற்கு பதிலாக மகிழ்ந்து களிகூரலாம் என்று செப்பனியா கூறுகிறார்.
இயேசு கிறிஸ்துவின் தியாகத்தினால் மீட்கப்பட்ட தேவ பிள்ளைகளாகிய நாம் சில சமயங்களில் தேவன் நமக்காய் பாடும் தெய்வீக அன்பிற்கு செவிகொடுக்க விரும்புவதும் முயற்சிப்பதும் இல்லை. அவர் நம்மீது அதிக அன்பு கொண்டிருப்பது அந்த இளம் தந்தையைப் போன்றது. அவருடைய மகனால் கேட்க முடியாத போதிலும் அவனிடம் அன்பாகப் பாடினார். அவர் நமது தண்டனையை சுமந்து கொண்டார். நாம் மகிழ்ச்சியடைய மேலும் காரணத்தைத் தருகிறார். அவருடைய குரலில் சந்தோஷம் சத்தமாக ஒலிப்பதைக் கேட்க நாம் இன்னும் அருகில் நெருக்கமாக சென்று கேட்க முயற்சி செய்யலாம். பிதாவே, உங்கள் அன்பான மெட்டுக்களை கேட்க மற்றும் உங்கள் கைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதை அனுபவிக்க எங்களுக்கு உதவும்.