தீவிர வறட்சி, உஷ்ணம், நெருப்பு என்று “ஒரு மோசமான கதையை” அந்த அறிக்கை சமர்ப்பித்தது. பசபசப்பான செடிகளை காய்ந்த சருகுகளாக மாற்றக்கூடிய, வெகு குறைந்த மழையுடனான ஒரு பயங்கரமான ஆண்டைக் குறித்து அந்த அறிக்கை விவரித்தது. பொங்கி எழுந்த தீ கிராமப்புறங்களை எரித்தது. மீன்கள் உயிரிழந்தது. பயிர்கள் அற்றுபோயிற்று. எல்லாவற்றிற்கும் காரணம் நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் தண்ணீர் என்னும் ஒரு எளிய ஆதாரம் அவர்களிடம் இல்லாததுதான். நாம் அனைவரும் வாழ தண்ணீர் மிகவும் அவசியம்.

இஸ்ரவேலர்கள் கடினமான ஒரு சூழ்நிலையில் இருந்தனர். ஜனங்கள் தூசி நிறைந்த, தரிசான பாலைவனத்தில் முகாமிட்டபோது, அவர்கள் இப்படியாய் கூறுகிறார்கள்: “அங்கே ஜனங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாதிருந்தது” (யாத்திராகமம் 17:1). மக்கள் பயந்தார்கள். அவர்களின் தொண்டை வறண்டு இருந்தது. மணலின் சூடு அவர்களை தாக்கிற்று. அவர்களின் குழந்தைகளுக்கு தாகம் ஏற்பட்டது. பீதியடைந்த மக்கள், தண்ணீர் வேண்டி மோசேயுடன் வாதாடினார்கள் (வச. 2). ஆனால் மோசே என்ன செய்ய முடியும்? அவர் தேவனிடம் மட்டுமே செல்ல முடியும்.

தேவன் மோசேக்கு ஒரு விசித்திரமான அலோசனையைக் கொடுத்தார்: “உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு… நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்” (வச. 5-6). ஆகவே, மோசே கன்மலையை அடித்தான், ஒரு நதி அதிலிருந்து புறப்பட்டது, ஜனங்களுக்கும் அவர்களுடைய கால்நடைகளுக்கும் குடிக்க ஏராளமாய் தண்ணீர் கிடைத்தது. தங்கள் தேவன் தங்களை நேசிக்கிறார் என்பதை இஸ்ரவேல் அந்நாளிலே அறிந்தார்கள். அவர்களின் தேவன் ஏராளமான தண்ணீரினால் அவர்களை ஆசீர்வதித்தார்.

நீங்கள் வாழ்க்கையில் வறட்சியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்றால், அந்த சூழ்நிலை தேவனுக்கு தெரியும் என்பதையும் அவர் உங்களோடே இருக்கிறார் என்பதையும் அறியுங்கள். உங்கள் தேவை எதுவாக இருந்தாலும், உங்கள் குறைபாடு எதுவாக இருந்தாலும், அவருடைய ஏராளமான தண்ணீரில் நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் காணலாம்.