1914 ல், பெல்ஜியத்தில் ஒரு குளிர்ந்த கிறிஸ்மஸ் ஈவ் அன்று வீரர்கள் தோண்டிய ஒரு பதுங்கு குழியிலிருந்து பாடல் சத்தம் மிதந்துக் கொண்டிருந்தது. ‘சைலன்ட் நைட்” என்ற பாடல் ஜெர்மன் மொழியிலும் பிறகு ஆங்கிலத்திலும் ஒலித்தன. முந்தய நாளில் ஒருவருக்கொருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய போர் வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அகழிகளிலிருந்து வெளியே வந்து அவர்களுக்கு இடையே இருந்த யாருக்கும் சொந்தமல்லாத நிலத்தில், கைக்குலுக்கவும், கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும், எதிர்பாராத பரிசுகளையும் பரிமாறிக்கொண்டனர். போர் நிறுத்தம் அடுத்த நாள் வரை தொடர்ந்தது. வீரர்கள் பேசுவதும், சிரிப்பதும், ஒன்றாக சேர்ந்து கால்பந்து போட்டிகளையும் ஏற்பாடு செய்தனர்.

முதலாம் உலகப் போரின் வெஸ்டர்ன் ஃபிரன்டில் 1914ம் ஆண்டு நிகழ்ந்த கிறிஸ்மஸ் போர்நிறுத்தம், நீண்ட காலத்திற்கு முன்பு கிறிஸ்மஸ் ஈவ் அன்று தேவதூதர்கள் அறிவித்த சமாதானத்தின் சுருக்கமாக காட்சியளித்தது. பயந்துப்போன மேய்ப்பர்களிடம் ஒரு தூதன் ‘பயப்படாதிருங்கள்; இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்ற உறுதியளிக்கும் வார்த்தைகளால் பேசினார் (லூக். 2:10-11). அப்பொழுது பரமசேனைத் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” என்றுச் சொல்லி தேவனைத் துதித்தனர் (வச. 13-14).

இயேசு சமாதானக் காரணர் – நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டவர் (ஏசா. 9:6). சிலுவையில் அவர் செய்த தியாகத்தினிமித்தம் அவர் பாவமன்னிப்பையும், அவரை நம்புகிற அனைவருக்கும் தேவனோடு சமாதானத்தையும் கொடுக்கிறார்.