Archives: ஜூன் 2020

பூரண வாழ்வு

பதினேழாம் நூற்றாண்டு தத்துவ ஞானி தாமஸ் ஹாப்ஸ் என்பவர், “மனித வாழ்வு இயற்கையிலேயே தனிமையானது, மோசமானது, ஏழ்மையானது, முரட்டுத்தனமானது மற்றும் குறுகியது” என எழுதினார். மேலும் மற்றவரைக் காட்டிலும் நாம் உயர வேண்டும் என்ற உள் நோக்கத்தினால், சண்டையிடும் தூண்டுதலைக் கொண்டுள்ளது என்றார். எனவே, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட ஓர் அரசாங்கம் தேவை என்றார்.

மனிதகுலத்தைப் பற்றிய இந்த இருண்ட கருத்து, இயேசு கூறியவற்றை விளக்குவதாக உள்ளது. “எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக் காரருமாயிருக்கிறார்கள்” (யோவா.10:8) என்று இயேசு கூறுகின்றார். ஆனால், விரக்தியின் மத்தியில் இயேசு நம்பிக்கையைத் தருகின்றார். “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறோன்றுக்கும் வரான்” என்கின்றார், ஆனால், தேவன் நற்செய்தியைத் தருகின்றார். “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்” (வ.10) என்கின்றார்.

மேய்ப்பனானவர் தன் ஆடுகளுக்கு கொடுக்கும் புதிய வாழ்வைப் பற்றி சங்கீதம் 23, காட்டுகின்றது. அவர் நம்மோடு இருக்கும் போது நமக்கு குறைவு ஒன்றும் ஏற்படுவதில்லை (வ.1), நாம் புத்துணர்ச்சி பெறுகின்றோம் (வ.3). அவர் தன்னுடைய சித்தத்திற்கு நேராக, சரியான பாதையில் நம்மை நடத்துகின்றார், ஆகையால் நம்முடைய வாழ்வின் இருண்ட வேளைகளிலும் நாம் பயப்படத்தேவையில்லை. அவர் நம்மைத் தேற்றும்படி, நம்மோடு இருக்கின்றார் (வ.3-4). நாம் துன்பங்களைச் சந்திக்கும் போது, அவற்றை வெற்றியாக முடியப் பண்ணுகின்றார், நம்மை அவருடைய ஆசீர்வாதங்களால் நிரப்புகின்றார் (வ.5). ஒவ்வொரு நாளும் அவருடைய அன்பும் நன்மையும் நம்மைத் தொடரும். அவருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்மோடிருக்கும் பாக்கியத்தை நாம் பெற்றுள்ளோம் (வ.6).

மேய்ப்பனின் குரலுக்கு நாம் செவி கொடுப்போம். அவர் நம்மோடு இருந்து நமக்குத் தரும் செழிப்பான பரிபூரண வாழ்வை நாம் பெற்று,      அநுபவிப்போம்.

நேராக முன்னோக்கி

நேர் வரிசையில் டிராக்டரைச் செலுத்துவதற்கு, விவசாயியின் நிலையான கண்களும் உறுதியான கரங்களும் தேவை. ஆனாலும்,  ஒரு நாளின் இறுதி வேளையில், திறமையான கண்களும், உறுதியான கரங்களும் கூட சோர்வடையும் போது, வரிசைகள் மேற்பொருந்துமாறு டிராக்டரைச் செலுத்திவிட நேரிடும். ஆனால், தற்சமயம் தானியங்கி கியர் மற்றும் ஜிபிஎஸ் போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் மூலம் உழுதல், செடி நடுதல், தெளித்தல் போன்றவற்றை ஓர் அங்குலம் வரை துல்லியமாக செய்ய முடிகின்றது. இது வியத்தகு திறமையை கொண்டுள்ளது, நம்முடைய கரங்களுக்கு வேலையை குறைக்கின்றது. ஒரு பெரிய யானை அளவு மிகப் பெரிய டிராக்டரில் அமர்ந்து கொண்டு, அதன் திசைதிருப்பி சக்கரத்தை கரத்தில் பிடித்திருப்பதற்குப் பதிலாக, ஒரு சிக்கன் 65 ஐ கையில் பிடித்து உட்கார்ந்திருப்பதை கற்பனை செய்துபார். இது  நம்மை நேராக முன்னோக்கிக் கொண்டு செல்லும் ஒரு வியத்தகு சாதனம்.

யோசியா என்ற பெயரை நினைவிருக்கலாம். அவன் ராஜாவாக முடிசூட்டப்பட்ட போது, அவனுக்கு வயது எட்டு (2 இரா.22:1). அநேக ஆண்டுகளுக்குப் பின்பு, கிட்டத்தட்ட இருபத்தைந்து வயதாகிறபோது, பிரதான ஆசாரியனான இல்க்கியா கர்த்தரின் ஆலயத்திலே “நியாயப்பிரமாணப் புத்தகத்தைக்” கண்டுபிடித்து (வ.8), அதை இந்த இளம் அரசனுக்கு முன்பாக வாசித்தான். தன்னுடைய முன்னோர்கள் தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுக்கவில்லை என்பதை  அறிந்த யோசியா, வருத்தத்தில் தன்னுடைய வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டான். பின்னர் அவன் “கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்ய” (வ.2) முற்பட்டான். ஜனங்களை இடது புறம், வலது புறம் சாயாமல், நேரான பாதையில் கொண்டு செல்ல வழிகாட்டும் கருவியாக இந்த புத்தகம் செயல் பட்டது.  காரியங்களைச் சரிசெய்ய தேவனுடைய வார்த்தை இருந்தது.

நம் வாழ்வில், தேவனுடைய சித்தத்தை அறிந்து, அதற்கு நேராக நம்மை வழி நடத்தும்படி, வியத்தகு கருவியான வேத வார்த்தைகளைக் கைக்கொள்ளுவோமாயின், நாம் நேராக முன்னோக்கிச் செல்ல முடியும்.

தேவனுக்கு முன்பாக நடனம்

அநேக வருடங்களுக்கு முன்பு, என்னுடைய மனைவியும் நானும் அருகிலுள்ள ஒரு சிறிய ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். அங்கு ஆராதனை வேளையில், ஒரு பெண் நடுப்பகுதியில் நடனம் ஆட ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில், அவளோடு மற்றும் அநேகர் இணைந்து கொண்டனர். கேரலினும் நானும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டோம். “நான் இல்லை!” என எங்களுக்குள்ளே பார்வையாலே தெரிவித்துக் கொண்டோம். நாங்கள் ஓர் அமைதலான ஆராதனை முறையை வழக்கமாகக் கொண்டுள்ள ஆலயத்திற்குச் செல்வதால், இந்த மாற்று ஆராதனை முறை எங்களுக்குப் பொருந்திவரவில்லை.

மாற்கு கூறும், மரியாளின் கதையில் வரும் “வீண் செலவு” என்பது அவள் இயேசுவின் மேல் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்று, அது மற்றவர்களுக்குப் பொருந்திவரவில்லை (மாற்.14:1-9). மரியாள் செய்த தைலாபிஷேகத்தின் மதிப்பு, ஒருவருடைய ஒரு வருட கூலிக்குச் சமம். இது ஒரு “ஞானமற்றச்” செயல் என்று சீஷர்கள் முறுமுறுப்பதற்குக் காரணமாயிருந்தது. முறுமுறுப்பவர்களின் அதிருப்தியையும் இவர் இதற்குத் தகுதியற்றவர் என்பதாக இழிவு படுத்தினதையும் மாற்கு குறிப்பிடுகின்றார். இயேசு என்ன சொல்லுவாரோ என்று எண்ணி மரியாளும் பின்வாங்கியிருக்கலாம். ஆனால் இயேசுவோ அவளுடைய  தன்னலமற்றச் செயலைப் பாராட்டினார், அவளைத் தன்னுடைய சொந்த சீஷர்களிடமிருந்து பாதுகாக்கின்றார், ஏனெனில், அவர் இச்செயலைத் தூண்டிய அவளுடைய அன்பைப் பார்க்கின்றார், மற்றவர்கள் அவளுடைய செயலை, செய்யக் கூடாததாக கருதிய போதிலும், அவர்  “ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” (வ.6) என்றார்.

வெவ்வேறு வகையான ஆராதனைகள் – பாரம்பரிய முறை, பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்டது, அமைதியான முறை அல்லது ஆரவாரத்தோடு ஆராதிப்பது எல்லாமே இயேசுவின் மீதுள்ள அன்பை உண்மையாக வெளிப்படுத்துவதாகும். உள்ளதின் ஆழத்திலிருந்து வரும் அன்போடு, ஆராதிக்க அவர் தகுதியானவர்.

இது போன்ற விக்கிரகம்

சாம் பணி ஓய்வு பெற்றபோது, கிடைத்த தொகையின் கணக்கை ஒவ்வொரு நாளும் இரு முறை சரிபார்த்தான். அவன் 30 ஆண்டுகளாகச் சேமித்தான். அத்தோடு, பங்குச் சந்தை விலையேற்றத்தாலும் அவனுக்குப் போதுமான பணம் இருந்ததால், ஓய்வு பெற்றான். ஆனால், பங்குச் சந்தை சரியாமல் இருக்க வேண்டுமே. இந்த பயத்தினால், சாம் தன்னிடமிருந்த எஞ்சிய பணத்தைக் குறித்து கவலையுற்றான்.

“யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி” என்று எரேமியா தீர்க்கதரிசி எச்சரிக்கின்றார்.

யூதாவின் விக்கிரக ஆராதனை குறிப்பிடத்தகுந்தது. அவர்கள்  தேவனை அறிவர், அப்படியிருந்தும் அவர்களால் எவ்வாறு மற்றவற்றை வணங்க முடிகிறது? அவர்கள் தங்களின் லாபத்திற்காக இரண்டுபேரையும் வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். மரணத்திற்குப் பின் உள்ள வாழ்விற்காக தேவனையும், ஏனெனில் உண்மையான தேவனால் தான், அவர்களை உயிர்த்தெழச் செய்ய முடியும். ஆனால், இப்பொழுது என்ன வேண்டும்? அந்நிய தேவர்கள் சுகத்தையும், செல்வத்தையும், செழிப்பையும் தருவதாக வாக்களிக்கின்றார்களே, ஒரு வேளை அப்படியிருந்தால், நாம் ஏன் அவர்களிடம் கேட்கக் கூடாது? என்று நினைக்கின்றார்கள்.

யூதாவின் விக்கிரக ஆராதனையைப் போன்று நாமும் சோதனையில் இழுக்கப்படுகின்றோம். திறமை, கல்வி, செல்வம் அனைத்தையும் பெற்றிருப்பது நல்லது. ஆனால் நாம் கவனத்தோடு இல்லையெனில், நம்முடைய நம்பிக்கை இவற்றின் மீது சென்றுவிடும். நாம் சாகும் போது நம்முடைய தேவன்  நமக்குத் தேவை, நாம் இப்பொழுதே தேவன் நம்மை ஆசீர்வதிக்கும்படி கேட்போம். நாம் இவற்றின் மீது சற்றே சாய்ந்து கொள்ளலாம் என்று எண்ணாதே.

உன்னுடைய நம்பிக்கை எங்கேயுள்ளது? விக்கிரகங்கள் இன்னமும் சிலைகளாகவே உள்ளன. தேவன் நமக்குத் தந்துள்ள அநேக நன்மைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.  ஆனால், இவை ஒன்றின் மீதும் நம்பிக்கையை வைப்பதில்லை என்று தேவனிடம் சொல்லு. உன்னுடைய நம்பிக்கை தேவனாகிய கர்த்தர் மீதேயிருக்கட்டும்.

திரும்பக் கட்டுவது எப்படி?

இரவு வேளையில், தனக்கு முன்பாக இருக்கின்ற வேலையைக் குறித்து ஆராயும் படி, அந்தத் தலைவன் தன்னுடைய குதிரையில் புறப்பட்டான். இடிபாடுகளைச் சுற்றி வந்த அவன், பட்டணத்தின் சுற்றுச் சுவர் அழிக்கப்பட்டிருப்பதையும் அதன் வாயிற்கதவுகள் எரிக்கப்பட்டிருப்பதையும் கண்டான். சில பகுதிகளில் உள்ள இடிபாடுகளின் குவியல்களுக்கிடையே அவனுடைய குதிரை செல்வதற்கு வழியில்லாதிருந்தது. துக்கத்தோடு அந்த பிரயாணி, வீட்டிற்குத் திரும்புகின்றான்.

அந்தப் பட்டணத்தின் பாதிப்பைக் குறித்து, அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்த போது அவன், “நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே” (நெகே.2:17) என்று ஆரம்பிக்கின்றான். பின்னர் அந்த பட்டணம் அழிக்கப்பட்டு கிடக்கிறதையும், அதனைப் பாதுகாக்க வேண்டிய அலங்கம் உடைக்கப் பட்டு பயனற்றுக் கிடக்கின்றதையும் பற்றி கூறினான்.

துயரத்தில் இருக்கும் அந்த பட்டணத்தின் மக்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும்வகையில், “ தேவனுடைய கரம் அவன் மேல் நன்மையாக இருக்கிறதையும்” அவர்களுக்கு அறிவித்தான். உடனே அந்த ஜனங்கள், “எழுந்து கட்டுவோம் வாருங்கள்” (வ.18) என்றனர்.

அப்படியே செய்தார்கள்.

தேவன் மீதுள்ள நம்பிக்கையோடும், தங்களின் முழு முயற்சியோடும், எதிரிகளின் எதிர்ப்பின் மத்தியிலும், தங்களால் கூடாது என்று எண்ணக் கூடிய மிகப் பெரிய வேலையை எருசலேம் மக்கள், நெகேமியாவின் தலைமையில், அலங்கத்தை திரும்ப 52 நாட்களில் கட்டிமுடித்தனர் (6:15).

உன்னுடைய சூழ் நிலைகளைப் பார்க்கும் போது, தேவன் உன்னிடம் எதிர்பார்க்கும் வேலை, உனக்கு மிகவும் கடினமானதாக தோன்றுகின்றதா? ஒரு பாவச் செயலை விட்டு விட கடினமாக இருக்கின்றதா? ஓர் உறவு தேவன் விரும்பாதவகையில் போய் கொண்டிருக்கின்றதா? தேவனுக்காக செய்ய வேண்டிய ஒன்று கடினமானதாக காணப்படுகின்றதா?

தேவன் உன்னை வழி நடத்தும் படி கேள் (2:4-5), பிரச்சனைகளை ஆராய்ந்து பார் (வ.11-15), தேவனுடைய வழி நடத்துதலை அறிந்து கொள்(வ.18), பின்னர் கட்டுகின்ற வேலையைத் தொடங்கு.