பதினேழாம் நூற்றாண்டு தத்துவ ஞானி தாமஸ் ஹாப்ஸ் என்பவர், “மனித வாழ்வு இயற்கையிலேயே தனிமையானது, மோசமானது, ஏழ்மையானது, முரட்டுத்தனமானது மற்றும் குறுகியது” என எழுதினார். மேலும் மற்றவரைக் காட்டிலும் நாம் உயர வேண்டும் என்ற உள் நோக்கத்தினால், சண்டையிடும் தூண்டுதலைக் கொண்டுள்ளது என்றார். எனவே, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட ஓர் அரசாங்கம் தேவை என்றார்.

மனிதகுலத்தைப் பற்றிய இந்த இருண்ட கருத்து, இயேசு கூறியவற்றை விளக்குவதாக உள்ளது. “எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக் காரருமாயிருக்கிறார்கள்” (யோவா.10:8) என்று இயேசு கூறுகின்றார். ஆனால், விரக்தியின் மத்தியில் இயேசு நம்பிக்கையைத் தருகின்றார். “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறோன்றுக்கும் வரான்” என்கின்றார், ஆனால், தேவன் நற்செய்தியைத் தருகின்றார். “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்” (வ.10) என்கின்றார்.

மேய்ப்பனானவர் தன் ஆடுகளுக்கு கொடுக்கும் புதிய வாழ்வைப் பற்றி சங்கீதம் 23, காட்டுகின்றது. அவர் நம்மோடு இருக்கும் போது நமக்கு குறைவு ஒன்றும் ஏற்படுவதில்லை (வ.1), நாம் புத்துணர்ச்சி பெறுகின்றோம் (வ.3). அவர் தன்னுடைய சித்தத்திற்கு நேராக, சரியான பாதையில் நம்மை நடத்துகின்றார், ஆகையால் நம்முடைய வாழ்வின் இருண்ட வேளைகளிலும் நாம் பயப்படத்தேவையில்லை. அவர் நம்மைத் தேற்றும்படி, நம்மோடு இருக்கின்றார் (வ.3-4). நாம் துன்பங்களைச் சந்திக்கும் போது, அவற்றை வெற்றியாக முடியப் பண்ணுகின்றார், நம்மை அவருடைய ஆசீர்வாதங்களால் நிரப்புகின்றார் (வ.5). ஒவ்வொரு நாளும் அவருடைய அன்பும் நன்மையும் நம்மைத் தொடரும். அவருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்மோடிருக்கும் பாக்கியத்தை நாம் பெற்றுள்ளோம் (வ.6).

மேய்ப்பனின் குரலுக்கு நாம் செவி கொடுப்போம். அவர் நம்மோடு இருந்து நமக்குத் தரும் செழிப்பான பரிபூரண வாழ்வை நாம் பெற்று,      அநுபவிப்போம்.