காலத்தின் வேகத்தைக் குறைத்துக்கொள்ளல்
1840 ஆம் ஆண்டு, மின்சாரக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அநேக மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. நாம் இப்பொழுது, ஸ்மார்ட் கைக்கடிகாரங்களிலும், ஸ்மார்ட் அலைபேசிகளிலும், மடிக்கணினிகளிலும் நேரத்தைப் பார்க்கின்றோம். வாழ்க்கை வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது, நம்முடைய “ஓய்வு நேர” நடையின் வேகம் கூட அதிகரித்து விட்டது, முக்கியமாக, பட்டணங்களில் இந்நிலையைக் காணலாம். இது நம்முடைய உடல் நிலையை பெரிதும் பாதிக்கும் என அறிவாளிகள் சொல்கின்றார்கள். “நாம் வேக வேகமாக பயணம் செய்கின்றோம், நம்மால் இயன்ற மட்டும், சீக்கிரமாக மக்களைச் சந்திக்கின்றோம். எல்லா காரியங்களும் இப்பொழுதே நடந்து விட வேண்டுமென, நம்மை நினைக்கத் தூண்டுகின்றது” என்கின்றார், ஓர் அமெரிக்க பேராசிரியர்.
வேதாகமத்திலுள்ள மிகப்பழமையான சங்கீதங்களில் ஒன்றினை எழுதிய மோசே, நேரத்தைக் குறித்து சி ந்திக்கிறார். வாழ்க்கையின் வேகத்தை தேவன் கட்டுப்படுத்துகிறார், என அவர் கூறுகின்றார். “உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள் போலவும், இராச்சாமம் போலவும் இருக்கிறது” என எழுதுகிறார் (சங்.90:4).
காலத்தைக் கையாளுதலின் இரகசியம், வேகமாகச் செல்வதிலோ அல்லது மெதுவாகச் செல்வதிலோ இல்லை. அது எப்பொழுதும் தேவனோடிருத்தலாகும். அவரோடு அதிக நேரம் செலவிடுதலாகும். அப்படியாகும் போது, நாம் தேவனோடும், நம்மை உருவாக்கியவரோடும், (139:13) நாம் உருவாக்கப்பட்ட நோக்கத்தையும், திட்டங்களையும் அறிந்திருக்கிறவரோடும் ஒருமித்து செயல் பட ஆரம்பிப்போம். (வ.16)
இப்பூமியில், நாம் நிரந்தரமாக வாழப்போவதில்லை. ஆனாலும் நம்முடைய நாட்களை, நாம் ஞானத்தோடு திட்டமிடலாம். வெறுமனே கடிகாரத்தை கவனித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளையும் தேவனுடைய கரத்தில் கொடுத்து விடலாம். மோசே சொல்வது போல, “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும் (90:12) அப்பொழுது நாம் இப்பொழுதும், எப்பொழுதும் சதாகாலங்களிலும் தேவனோடு இருப்போம்.
அனைவருக்கும் தேவையானது இரக்கம்
இயேசு கிறிஸ்துவின் புதிய விசுவாசியான ஜீவன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, வெளியே வந்து, ஒரு பெரிய எண்ணெய் தொழிற்சாலையில், வேலைக்குச் சேர்ந்தார். அந்த தொழிற்சாலையின் விற்பனையாளரான அவர், அநேக நாட்கள் பிரயாணம் செய்தார், அவருடைய பிரயாணங்களின் போது, அநேகருடைய கதைகளைக் கேட்க முடிந்தது, அவற்றில் பெரும்பாலானவை, உள்ளத்தை உடையச் செய்வதாக இருந்தது. அவருடைய வாடிக்கையாளர்களுக்குத் தேவை, எண்ணெய் அல்ல, இரக்கம் என்பதைத் தெரிந்து கொண்டார். அவர்கள் தேவனை அறிய வேண்டும். இந்த அநுபவம் ஜீவனை ஒரு வேதாகம கல்லூரிக்குச் சென்று, தேவனுடைய இருதயத்தைப் பற்றி கற்றுக்கொள்ளச் செய்தது. பின்னர், அவர் ஒரு போதகரானார்.
இயேசு கிறிஸ்து காட்டிய இரக்கத்தை ஜீவனும் காட்டினார். மத்தேயு 9:27-33 ல் கிறிஸ்து காட்டிய இரக்கத்தை, இரண்டு குருடர்களை அற்புதமாக சுகப்படுத்தியதிலும், பிசாசு பிடித்த மனிதனைக் குணப்படுத்தியதிலும் காண்கின்றோம். அவருடைய ஆரம்ப கால ஊழியத்தில், அவர் சகல பட்டணங்கள், மற்றும் கிராமங்களுக்கு சென்று, சுவிசேஷத்தை பிரசங்கித்ததோடு, சகல வியாதிகளையும் குணப்படுத்தினார் (வ.35). ஏன்? “அவர் திரளான ஜனங்களைக் கண்ட பொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து போனவர்களும்,சிதறப்பட்டவர்களுமாய் இரு ந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகினார்” (வ.36)
இன்றைய உலகம் பிரச்சனைகளாலும், காயப்படுத்தும் மக்களாலும் நிறைந்து காணப்படுகின்றது. அவர்களுக்கு இரட்சகரின் கனிவான கவனம் தேவை. மேய்ப்பன் தன் ஆடுகளைப் பாதுகாத்து, பராமரித்து, வழிநடத்துவது போல, இயேசுவும் அவரிடம் வரும் யாவரிடமும் இரக்கத்தைக் காட்டுகிறார் (11:28). நாம் வாழ்க்கையில் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த பிரச்சனைகளைச் சந்தித்தாலும் சரி, நாம் அவரிடத்தில் வரும் போது, அவருடைய உள்ளம் நம்மீது கரிசனையினாலும், இரக்கத்தினாலும் பொங்கி வழிகிறது. அவருடைய அன்பின் இரக்கத்தை, நாம் பெற்றுக் கொண்டிருப்போமாயின், அதனைப் பிறருக்கும் தவறாது கொடுப்போம்.
எப்பொழுதும் அவரைப் போற்றும் வாழ்க்கைமுறை
வாலஸ் ஸ்டேக்னரின் தாயார் ஐம்பதாவது வயதில் மரித்துப் போனார். வாலஸ், தன்னுடைய எண்பதாவது வயதில், தன்னுடைய தாயாருக்கு ஒரு குறிப்பு எழுதினார். “மிகப் பிந்திய ஒரு கடிதம்” என்ற அந்த கடிதத்தில், மிக கடுமையான நாட்களில், வளர்ந்து, திருமணம் புரிந்து, இரண்டு மகன்களையும் வளர்த்த ஒரு பெண்ணின் குணங்களைப் பாராட்டியிருந்தார். அவள், ஒரு மனைவியாக, தாயாராக இருந்து, அனைவரையும், விரும்பத்தகாதவர்களையும் ஊக்கப்படுத்துவார். தன்னுடைய தாயார், தன்னுடைய குரலின் வாயிலாக வெளிப்படுத்தின வல்லமையை நினைத்துப் பார்த்தார். “நீங்கள் பாடுவதற்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் நழுவ விடவில்லை” என்று எழுதுகின்றார். அவருடைய தாயார் வாழ்ந்த நாட்களெல்லாம், சிறிதும் பெரிதுமான ஆசிர்வாதங்களுக்காக நன்றி செலுத்திப் பாடினார்.
சங்கீதக்காரனும், தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் பாடினார். அவர் மகிழ்ச்சியான நாட்களிலும் பாடினார், துன்ப நாட்களிலும் பாடினார். அந்தப் பாடல்கள் எந்த கட்டாயத்தின் பேரிலும் பாடப்படவில்லை, அவை, “வானத்தையும், பூமியையும் உண்டாக்கினவரையும்” (146:6), பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறவரையும்” (வ.7), “குருடரின் கண்களைத் திறக்கிறவரையும்” (வ.8), “திக்கற்ற பிள்ளையையும், விதவையையும் ஆதரிக்கிறவரையும்” (வ.9) போற்றிப் பாடப் பட்ட பாடல்கள். “யாக்கோபின் தேவனைத்” தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்களுக்கு, பெலனாக இருக்கிறவரும், “என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவரும்” ஆகிய தேவனைப் பாடுவதே உண்மையான, பாடலோடு கூடிய வாழ்க்கை முறை (வ.5-6).
நம்முடைய குரல் நன்றாயிருக்கின்றதற்காக அல்ல, நம்மை நன்மையால் நிரப்பினவரைப் போற்றிப் பாடுவதே, நம் வாழ்க்கை முறையாயிருக்கட்டும். ஒரு பழைய பாடலில் “என் உள்ளத்தில் ஒரு பாடலுண்டு” எழுதப் பட்டுள்ளதைப் போன்று, நம்முடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து பாடல்கள் எழும்பட்டும்.
ஒரே ராஜா
ஐந்து வயதான எலியா இயேசு பரலோகத்தை விட்டு பூமிக்கு வந்தார் என்று போதகர் கூறியதை கவனித்துக் கொண்டிருந்தான். பின்னர் அவர் ஜெபிக்கும் போது, நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்தார் எனக் கூறி, நன்றி செலுத்திய போது, அவன், திணறியவனாய், “ஓ, இல்லை! அவர் மரித்துவிட்டாரா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.
இவ்வுலகில், இயேசு கிறிஸ்து தன் வாழ்வைத் துவங்கிய நாளிலிருந்து, அநேகர் அவர் மரிக்க வேண்டுமென விரும்பினர். ஏரோது அரசனின் ஆட்சி காலத்தில், ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம்” என்றார்கள். (மத்.2:2) அரசன் இதைக் கேட்ட போது, ஒரு நாள், தன்னுடைய அரசாட்சியை இயேசுவிடம் இழக்க நேரிடும் என்று பயந்தான். எனவே அவன், தன் படை வீரர்களை அனுப்பி, பெத்லகேமின் சுற்றுப் புறங்களிலுள்ள அனைத்து இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளையும் கொன்று போட்டான். ஆனால் தேவன், அவருடைய மகனைப் பாதுகாக்க, ஒரு தூதனை அனுப்பி, அவருடைய பெற்றோரை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தார். அவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறி, குழந்தையைக் காப்பாற்றினார்கள். (வ.13-18)
இயேசு, தன்னுடைய ஊழியக் காலத்தை நிறைவு செய்த போது, உலக மக்களின் பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட்டார். அவரைக் கேலி செய்யும் படியாக, பிலாத்து அவருடைய சிலுவைக்கு மேலாக, “இவர் இயேசு, யூதருக்கு ராஜா” என்று எழுதி வைத்தான் (27:37). ஆனால் மூன்று நாளைக்குப் பின், அவர் வெற்றியாக, கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர், பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, சிங்காசனத்தில் ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக உட்கார்ந்தார். (பிலி. 2:8-11)
இந்த ராஜா, நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்- உன்னுடைய ,என்னுடைய, மற்றும் எலியாவின் பாவங்களுக்காக மரித்தார். நம்முடைய இருதயங்களை அவர் ஆட்சி செய்யும் படி, அவரிடம் கொடுப்போம்.
இங்கே கொள்ளிவாய் விலங்குகள் உள்ளனவா?
பழங்காலத்தில் வந்த உலகப் படங்களின் எல்லைகளில், “இங்கே இராட்சத விலங்கினங்கள் உள்ளன” எனக் குறிப்பிட்டிருப்பார்கள். உலகப் படங்களை உருவாக்கியவர்கள் அவ்வாறு நினைத்திருந்தனர். அநேகமான உலகப் படங்களின் எல்லைகளில், பயங்கரமான இராட்சத விலங்குகள் மறைந்திருப்பது போன்ற படங்கள் காணப்படும். இது பழங்கால கதைகள் தரும் செய்தி.
இடைக்காலத்தில், உலகப் படங்களை வரைந்தவர்கள், இந்த வார்த்தைகளை எழுதினார்கள் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லையெனினும், அவர்கள் எழுதியிருக்க வேண்டுமெனவே நான் விரும்புகிறேன். ஒருவேளை அது நல்லதல்ல என்று கருதினாலும், நாம் அறியாத ஓர் இடத்திற்கு தைரியமாகச் செல்ல துணியும் போது, அங்கு என்ன நடக்கும் என்பதை நாம் அறியாதபடியால், “இங்கே இராட்சத விலங்குகள் உள்ளன” என்ற எச்சரிக்கை கொடுப்பது சரியானதாகவே படுகின்றது.
நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஆபத்துக்களைத் தவிர்க்கவும் ஏற்றதாக நான் கருதும் இந்தக் கொள்கையிலும் ஒரு பிரச்சனை உள்ளது. அது, இயேசுவின் விசுவாசியான நான் தைரியமாகச் செயல்பட வேண்டும் என்பதை மறுப்பதாக உள்ளது. (2 தீமோ 1:7)
உண்மையிலேயே ஆபத்தானது, என்ன என்பதை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நீங்கள் கருதலாம். பவுல் கூறுவதைப் போன்று, இந்த உடைந்த உலகத்தில், தைரியமாக கிறிஸ்துவைப் பின் பற்றுவது என்பது சில வேளைகளில் வேதனை தருவதாக இருக்கலாம் (வ.8). சாவிலிருந்து ஜீவனுக்குள் கொண்டுவரப்பட்ட நாம், நம்மை ஆவியானவரின் வழி நடத்தலுக்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கும் போது, ஏன் நம்மால் தைரியமாக வாழ முடியாது? (வ.9-10,14)
தேவன் நமக்குத் தந்துள்ள மிகப் பெரிய ஈவு என்னவெனின், அவர் நமக்கு முன் சென்று நம்மை வழி நடத்துகின்றார். நாம் இதுவரை செல்லாத பாதைகளின் வழியே செல்ல நேர்ந்தாலும், நாம் அவரைப் பின் தொடர்வோம். மாறாக, பயத்தினால், தடுமாறி, நாம் பின்வாங்கிப் போவோமேயானால் அதையும் விட சோகமான வாழ்வு வேறொன்றுமில்லை (வ.6-8,12). நம் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிப்போம், நம் எதிர் காலத்தை அவர் பார்த்துக்கொள்வார் (வ.12).