இயேசு கிறிஸ்துவின் புதிய விசுவாசியான ஜீவன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, வெளியே வந்து, ஒரு பெரிய எண்ணெய் தொழிற்சாலையில், வேலைக்குச் சேர்ந்தார். அந்த தொழிற்சாலையின் விற்பனையாளரான அவர், அநேக நாட்கள் பிரயாணம் செய்தார், அவருடைய பிரயாணங்களின் போது, அநேகருடைய கதைகளைக் கேட்க முடிந்தது, அவற்றில் பெரும்பாலானவை, உள்ளத்தை உடையச் செய்வதாக இருந்தது. அவருடைய வாடிக்கையாளர்களுக்குத் தேவை, எண்ணெய் அல்ல, இரக்கம் என்பதைத் தெரிந்து கொண்டார். அவர்கள் தேவனை அறிய வேண்டும். இந்த அநுபவம் ஜீவனை ஒரு வேதாகம கல்லூரிக்குச் சென்று, தேவனுடைய இருதயத்தைப் பற்றி கற்றுக்கொள்ளச் செய்தது. பின்னர், அவர் ஒரு போதகரானார்.

இயேசு கிறிஸ்து காட்டிய இரக்கத்தை ஜீவனும் காட்டினார். மத்தேயு 9:27-33 ல் கிறிஸ்து காட்டிய இரக்கத்தை, இரண்டு குருடர்களை அற்புதமாக சுகப்படுத்தியதிலும், பிசாசு பிடித்த மனிதனைக் குணப்படுத்தியதிலும் காண்கின்றோம். அவருடைய ஆரம்ப கால ஊழியத்தில், அவர் சகல பட்டணங்கள், மற்றும் கிராமங்களுக்கு சென்று, சுவிசேஷத்தை பிரசங்கித்ததோடு, சகல வியாதிகளையும் குணப்படுத்தினார் (வ.35). ஏன்? “அவர் திரளான ஜனங்களைக் கண்ட பொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து  போனவர்களும்,சிதறப்பட்டவர்களுமாய் இரு ந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகினார்” (வ.36)

இன்றைய உலகம் பிரச்சனைகளாலும், காயப்படுத்தும் மக்களாலும் நிறைந்து காணப்படுகின்றது. அவர்களுக்கு இரட்சகரின் கனிவான கவனம் தேவை. மேய்ப்பன் தன் ஆடுகளைப் பாதுகாத்து, பராமரித்து, வழிநடத்துவது போல, இயேசுவும் அவரிடம் வரும் யாவரிடமும் இரக்கத்தைக் காட்டுகிறார் (11:28). நாம் வாழ்க்கையில் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த பிரச்சனைகளைச் சந்தித்தாலும் சரி, நாம் அவரிடத்தில் வரும் போது, அவருடைய உள்ளம் நம்மீது கரிசனையினாலும், இரக்கத்தினாலும் பொங்கி வழிகிறது.  அவருடைய அன்பின் இரக்கத்தை, நாம் பெற்றுக் கொண்டிருப்போமாயின், அதனைப் பிறருக்கும் தவறாது கொடுப்போம்.