ஜிம்பாபே என்ற ஆப்பிரிக்க தேசத்தின் மக்கள், யுத்தத்தின் விளைவாலும், அதிக வேலையில்லா திண்டாட்டத்தினாலும் விரக்தியடைந்துள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கைத் தரும் ஒரே இடம் “நண்பர்கள் இருக்கை” என்ற அமைப்பு. நம்பிக்கையிழந்த மக்கள் அவ்விடத்திற்குச் சென்று, பயிற்சி பெற்ற “பாட்டியம்மா” க்களிடம் பேசலாம். இந்த மூத்த பெண்கள், மன அழுத்தத்தால் போராடிக் கொண்டிருக்கிறவர்களின் பேச்சை கவனித்துக் கேட்க கற்றுக் கொண்டவர்கள். அவர்களின் தேச மொழியாகிய ஷோனா மொழியிலே, மன அழுத்தம் என்பது kufungisisa எனப்படும், அதாவது “அதிகமாகச் சிந்தித்தல்” என்பதாகும்.

இந்த நண்பர்களின் இருக்கை, என்ற திட்டம் இன்னும் அநேக இடங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. சான்சிபார், லண்டன் மற்றும் நியூயார்க் ஆகிய பட்டணங்களிலும் இவை உண்டு. “அதன் விளைவுகளைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனோம்” என்கின்றார், லண்டனைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர். நியூயார்க்கைச் சேர்ந்த ஓர் ஆலோசகர், “ நீ அத்தகைய ஒரு நண்பர்களின் இருக்கையில் அமர்ந்திருக்கின்றாய் என்பதை அறியும் முன்பே, உன் மீது கரிசனை கொண்ட ஒருவருடன், நீ ஒரு அன்பின் உரையாடலில் இருப்பாய்” என்றார்.

இந்தச்  செயல் திட்டத்தின் மூலம், சர்வ வல்ல தேவனிடம் உறவாடும் அற்புதத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர முடிகிறது. மோசே தேவனோடு உறவாடுவதற்கு இருக்கைகளை பயன் படுத்தவில்லை, மாறாக ஒரு கூடாரம் அமைத்தான். அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவது போல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்” (யாத். 33:11) அவனுடைய பணிவிடைக் காரனாகிய யோசுவா, ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான். அவன் தேவனோடு செலவிடும் நேரத்தை மிகவும் விலையேறப் பெற்றதாகக் கருதியிருக்க வேண்டும் (வ.11).

இப்பொழுது நமக்கு ஓர் ஆசரிப்புக் கூடாரம் தேவையில்லை, இயேசு, பிதாவை நம்மருகிலேயே கொண்டுவந்துவிட்டார். அவர் தம் சீடர்களிடம், “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (யோவா.15:15). ஆம், நம் தேவன் நமக்காகக் காத்திருக்கின்றார், அவர் நம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஞானமுள்ள உதவியாளர், நம்மைப் புரிந்து கொள்ளும் நல்ல நண்பர். இப்பொழுதே அவரிடம் பேசு.