தசைநார் தேய்வு என்ற நோயினால் லீலா வேதனைப் பட்டுக்கொண்டிருந்தாள். ஒரு நாள், அவள் இரயில் நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த போது, அதிகமான படிகளை ஏற வேண்டியதிருந்தது. அங்கு நகரும் மின் படிகளும் இல்லை. அவளுக்கு கண்ணீர் வர இருந்த வேளையில், திடீரென ஒரு மனிதன் அங்கு வந்து, அவளுடைய பைகளைச் சுமந்து கொண்டு, அவளும் மெதுவாக படியில் ஏறும் படி உதவினார். அவள்  நன்றி கூறத் திரும்பிய போது, அவரைக் காணவில்லை.

மைக்கேல், ஒரு கூட்டத்திற்குச் செல்வதற்கு தாமதமாகிவிட்டது. ஓர் உறவின் மன முறிவினால் ஏற்பட்ட மனஅழுத்தம் ஒருபுறம், லண்டன் பட்டணத்தின் வாகன நெரிசல் மறுபுறம், இவற்றின் ஊடே கார் டயரில் காற்று இறங்கிவிட்டது. அவன் உதவியற்றவனாக, மழையில் நனைந்து கொண்டிருக்கும் போது, கூட்டத்திலிருந்து வ ந்த ஒரு மனிதன், காரின் பொருள் வைக்கும் பகுதியைத் திறந்து, காரை உயர்த்தி, டயரை மாற்றினான். மைக்கேல் நன்றி கூறத் திரும்பிய போது, அவரைக் காணவில்லை.

யார் இ ந்த மர்மமான உதவியாளர்கள்? இரக்கமுள்ள அந்நியர்கள்? அல்லது அதையும் விட மேலானவர்களா?

 பிரகாசமான தோற்றமும், இறக்கைகளும் கொண்ட உருவம் தான், நாம் தேவதூதர்களுக்கு  கொடுத்து வைத்திருக்கும் பிரபலமான உருவம். இதில் சிறிதளவே உண்மையுள்ளது. சில தேவதூதர்கள் இவ்வாறு தோன்றுகின்றனர் (ஏசா 6:2; மத் 28:3), மற்றும் சிலர் நிலத்தில் கால் பதித்து வருவதோடு, உணவு உண்ணவும் தயாராயிருக்கின்றனர். (ஆதி 18:1-5). அவர்களை நாம் சாதாரண மக்கள் என தவறாகவும் கருதக் கூடும். (நியா 13:16). நாம் அந்நியரை  உபசரிப்பதன் மூலம், சில வேளைகளில் தேவதூதரையும் உபசரிப்பதுண்டு என்று எபிரெயரை எழுதியவர் கூறுகின்றார். (13:2)

லீலாவுக்கும், மைக்கேலுக்கும் உதவியவர்கள் தேவதூதர்கள் தானா, என்பதை நாம் அறியோம். ஆனால், வேதாகமத்தின் அடிப்படையில் நாம் பார்க்கும் போது, அப்படியும் இருக்கலாம். தேவதூதர்கள் இப்பொழுதும், தேவனுடைய பிள்ளைகளுக்கு உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள் (எபி 1:14). அவர்கள் சாதாரணமாக நாம் தெருவில் பார்க்கும் மனிதர்களைப் போன்றும் வரலாம்.