அவளுடைய முன் கதவின் அருகில், ஒரு கண்ணாடி குவளையில் வைக்கப்பட்டிருந்த  அழகிய சிவப்பு ரோஜாக்களும், வெண்மை நிற ரோஜாக்களும் கலாவை வரவேற்றன. கடந்த ஏழு மாதங்களாக, ஒரு பெயர் அறிவிக்காத இயேசுவின் விசுவாசி, அருகிலுள்ள பூக்கடையிலிருந்து கலாவுக்கு அழகிய மலர் கொத்துக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மாதமும், இந்த பரிசோடு, ஊக்கம் தரும் வேதவார்த்தைகளும் எழுதப்பட்டு, “அன்புடன், இயேசு” என்று கையெழுத்திடப்பட்டு வரும்.

கலா இந்த ரகசிய விநியோகத்தைக் குறித்த படங்களை முகநூலில் பகிர்ந்துகொண்டாள். ஒரு தனி மனிதனின் இரக்கத்தைக் கொண்டாடவும், தேவன் அவள் மீது கொண்டுள்ள அன்பினை, அவருடைய மக்களின் மூலமாக வெளிப்படுத்துவதை உணர்ந்து கொள்ளவும்,  இம்மலர்கள் ஒரு வாய்ப்பளித்தன. தீராத வியாதியோடுள்ள போராட்டத்தின் மத்தியிலும் தேவன் மீது நம்பிக்கையோடுள்ள அவளுக்கு, இந்த வண்ண மலர்களும், கைப்பட எழுதப்பட்ட செய்தியும், தேவன் அவள் மீது கொண்டுள்ள இரக்கத்தையும், அன்பையும் உறுதி செய்தன.

இம்மலர்களை அனுப்பியவர், தன்னை மறைத்துக் கொண்ட இச்செயல், பிறருக்கு கொடுக்கும் போது, எத்தகைய இருதயத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென தேவன் நம்மிடம் எதிர்பார்கின்றார் என்பதைக் காட்டுகின்றது. “பிறர் காணும்படியாக” நீதியின் கிரியைகளைச் செய்யாதிருங்கள் (மத் 6:1), என தேவன் எச்சரிக்கின்றார். தேவன் நமக்குச் செய்துள்ள அநேக நன்மைகளுக்காக, நன்றி நிறைந்த உள்ளத்தோடு, அவரை ஆராதிக்கும் முறை தான், நாம் செய்யும் நற்கிரியைகளாகும். நம்முடைய தயாள குணத்தை மற்றவர்களுக்கு காண்பித்து, அவர்களின் நன்மதிப்பை பெற விரும்புகின்றவர்கள், எல்லா நன்மைக்கும் காரணராகிய இயேசுவின் பார்வையைப் பெற முடியாது.

நாம் நல்லெண்ணத்தோடு கொடுப்பதை தேவன் அறிவார், (வ.4). நாம் அன்போடு செய்யும் பெருந்தன்மையான கிரியைகளையே, தேவன் விரும்புகின்றார். அதுவே தேவனுக்கு மகிமையையும், கனத்தையும், புகழ்ச்சியையும் கொடுக்கும்.