Archives: டிசம்பர் 2019

நம்மை வழிநடத்தும் வெளிச்சம்

ஒரு அருங்காட்சியகத்தில், பழங்கால விளக்குகள் வைக்கப்பட்டிருந்த பகுதியைச் சுற்றி வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த  ஒரு குறிப்பு, அவை இஸ்ரவேல் தேசத்திலிருந்தவை என்பதைக் காட்டியது. செதுக்கப் பட்ட வடிவுகளால் அலங்கரிக்கப்பட்ட, நீள் வளைய, களிமண்ணாலான குவளைகளில் இரண்டு துளைகள் இருந்தன.  ஒன்று, எரிபொருளுக்காகவும், மற்றொன்று, திரி வைப்பதற்காகவும் அமைக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலர் இத்தகைய விளக்குகளைச் சாதாரணமாக மாடங்களில் வைப்பர். இவை, மனிதனின் உள்ளங்கையளவு சிறியதாக இருந்தது.

இத்தகைய விளக்குகள், தாவீது அரசனை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும், அவர் தேவனைப் போற்றிப் பாடும் போது, “கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்” (2 சாமுவேல் 22:29) என்கின்றார். தேவன்,  யுத்தங்களில் வெற்றியைக் கொடுத்த போது, தாவீது இப்பாடலைப் பாடுகின்றார். அவனுடைய தேசத்திலும், புறதேசத்திலும் உள்ள எதிரிகள், அவனைக் கொல்லும் படி பின் தொடர்ந்த போதும், அவன் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியம் அவனைப் பெலப்படுத்தியதால், மறைவிடங்களில் முடங்கிக் கிடக்காமல், தேவப் பிரசன்னம் கொடுத்த நம்பிக்கையோடு, முன்னோக்கிச் சென்று, எதிரிகளைச் சந்திக்கின்றான். தேவன் அவனுக்கு உதவி செய்தபடியால், அவனால் காரியங்களைத் தெளிவாகக் காணவும், தனக்கும், தன்னுடைய படைகளுக்கும், தன்னுடைய தேசத்திற்கும் சரியான முடிவுகளை எடுக்கவும் முடிந்தது.

தாவீதின் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள இருள் என்பது, பெலவீனம், தோல்வி, மற்றும் மரணத்தைக் குறித்த பயத்தைக் காட்டுகின்றது. நம்மில் அநேகர் இத்தகைய கவலைகளோடு வாழலாம், அது, நமக்குள் பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் உருவாக்கும். இந்த இருள் நம்மை அழுத்தும் போது, தேவன் நம்மோடு இருக்கின்றார் என்பதை நாமறிவதால், நாம் சமாதானத்தைப் பெற்றுக்கொள்கின்றோம். பரிசுத்த ஆவியானவரின் அக்கினி நமக்குள் பிரகாசித்து, நாம் இயேசுவை முக முகமாய் சந்திக்கும் வரை, நம் பாதைக்கு வெளிச்சம் காட்டுவார்.

நன்றியுள்ள மனப்பான்மை

அமெரிக்காவில் எங்களுடைய மாநிலத்தில், குளிர் காலம் கடுமையானதாகவும், பூஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையிலும், முடிவில்லா பனிப்பொழிவையும் கொண்டிருக்கும்.அப்படிப்பட்ட, மிகக் குளிர்ந்த ஒரு நாளில், எங்கள் வீட்டிற்கு முன்பக்கமிருந்த பனியை ஆயிரமாவது முறை, அகற்றிக் கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த தபால்காரர், எங்கள் நலனைக் குறித்து விசாரித்தார். நான் அவரிடம், இந்தக் குளிர் காலத்தை நான் விரும்பவில்லையெனவும், இந்த பனியினால் நான் சோர்வடைந்துவிட்டேன், எனவும் கூறினேன். அத்தோடு, இந்த மோசமான காலநிலையில், அவருடைய வேலை இன்னும் கடினமாயிருக்குமே எனவும் கேட்டேன். அவர்,” ஆம், ஆனால் எனக்கு ஒரு வேலையாகிலும் இருக்கிறதே, அநேகருக்கு வேலையும் இல்லை, நான் வேலை செய்வதற்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன்” என்றார்.

அவருடைய நன்றியுள்ள மனப்பான்மையைப் பார்த்த போது, நான், என்னுடைய குற்றத்தை உணர்ந்தேன். நம் வாழ்வின் சூழ்நிலைகள் மகிழ்ச்சியற்றதாக அமையும் போது, நாம் நன்றி கூறவேண்டிய அநேக காரியங்களைக் காணத் தவறிவிடுகின்றோம் என்பதை உணர்ந்தேன்.

கொலோசே சபை விசுவாசிகளுக்கு பவுல்,” தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.” (கொலோசெயர் 3:15) என்று எழுதுகின்றார். தெசலோனிக்கேயருக்கு எழுதும் போது,” எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது,” என்கின்றார் (1 தெச. 5:18).

போராட்டங்களும், வேதனைகளும் நிறைந்த நாட்களில், தேவனுடைய சமாதானம் நம்முடைய இருதயங்களை ஆளும்படி நாம் ஒப்புக்கொடுப்போம். அந்த சமாதானம் நமக்குள்ளே இருக்கும் போது, கிறிஸ்துவுக்குள் நாம் பெற்றுள்ள அனைத்தையும் நினைவுகூருவோம், அப்பொழுது, நாம் உண்மையாய் நன்றி கூறுவோம்.

எல்லாம் தருபவரை மறந்து விடாதே

அது கிறிஸ்மஸுக்கு முந்திய நாட்கள், அவளுடைய குழந்தைகளின் இருதயத்தில் நன்றியறிதலை உருவாக்குவது, கடினமாயிருந்தது. அவளுடைய குழந்தைகளின் சிந்தனையில் அதனை எவ்வாறு எளிதாக கொண்டு வருவது என்பதனையும், அவர்களின் இருதயத்தில் அதனை எவ்வாறு ஆழமாகப் பதியச் செய்வது என்பதையும் அவள் திட்டமிட்டாள். அவள் தன்னுடைய வீட்டில் அநேக இடங்களில் சிவப்பு ரிப்பன்களைக் கட்டினாள், சுவிட்சுகள், அலமாரியின் கதவுகள், குளிர் சாதனப் பெட்டியின் கதவு, துவைக்கும் இயந்திரம், உலர்ப்பான், தண்ணீர் குழாய்கள், என பல இடங்களில் சிவப்பு ரிப்பன்களோடு, “தேவன் தந்துள்ள அநேக  ஈவுகளை நாம் எளிதாக மறந்து விடுகிறோம், எனவே நான் அவற்றில் ஒரு ரிபன் கட்டியுள்ளேன், தேவன் நம் குடும்பத்தில் எத்தனை நல்லவராய் இருக்கிறார், அவரிடத்திலிருந்து வருகின்ற ஈவுகளை நாம் மறவாதிருப்போம்” என்ற குறிப்பையும் எழுதி வைத்தேன்.

உபாகமம் 6ஆம் அதிகாரத்தில் நாம் காண்கின்றோம், இஸ்ரவேலர்கள் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தை அடைவதற்கு முன்பாக அநேக இடங்களில் வெற்றி பெற வேண்டியிருந்தது. அவர்கள் கட்டாத வசதியான பெரிய பட்டணங்களில் பிரவேசிப்பார்கள், (வ.10) சகல நல்ல வஸ்துக்களால் நிரப்பப்பட்ட வீடுகளில் குடியேறுவார்கள், அவர்கள் வெட்டாத துரவுகளையும், நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும் அவர் உங்களுக்கு கொடுப்பார்,(வ.11) இத்தனை ஆசீர்வாதங்களையும் தருபவர் “உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே”(வ.10) இவை அத்தனையும், இன்னும் அநேக நன்மைகளையும் அன்போடு தேவன் தருகின்றார் எனவே மோசே ஜனங்களிடம்,” உன் கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” (வ.12) என்கின்றார்.

நம் வாழ்வின் சில காலங்களை, நாம் எளிதாக மறந்து விடுகின்றோம். ஆனால் நம்முடைய அனைத்து ஆசிர்வாதங்களுக்கும் காரணராகிய தேவனையும், அவருடைய நன்மைகளையும் நம் கண்கள் காணத் தவறக்கூடாது.

பரத்திலிருந்து வரும் ஈவு

ஒரு பழங்கால கதையில், நிக்கோலாஸ் என்ற ஒரு மனிதன் (கிபி 270 ல் பிறந்தவர்) ஓர் ஏழை தகப்பனைக் குறித்துக் கேள்விப் படுகின்றான். அவர் தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளையும் வளர்க்க கஷ்டப்படுகின்றார், அவர்களைத் திருமணம் செய்து கொடுக்கவும் அவரிடம் ஒன்றுமில்லை. அந்த தகப்பனாருக்கு ரகசியமாக உதவும் படி விரும்பிய நிக்கோலாஸ், தங்கம் வைக்கப்பட்ட ஒரு பையை, ஜன்னல் வழியே எறிகின்றார். அது அங்கு, அனல் அடுப்பின் அருகில் உலர்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஷூவுக்குள் விழுந்தது. அவர் தான் செயின்ட். நிக்கோலாஸ், பின்னர் சான்டா கிளாஸ் என்று நினைவு கூறப்படுகின்றவர்.

நான், பரிசுகள் மேலிருந்து வரும் என்ற கதையை கேட்டபோது, நம்முடைய பிதாவாகிய தேவன், நம்மீது உள்ள அன்பினாலும், இரக்கத்தினாலும், தம்முடைய சொந்த குமாரனை, இவ்வுலகிற்கு மிகப்பெரிய ஈவாக, ஓர் அற்புதமான பிறப்பின் மூலமாக அனுப்பினார், என்பதை நினைத்துக் கொண்டேன். பழைய ஏற்பாட்டில் கூறப் பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்படி, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள், இம்மானுவேல் என்பதற்கு “தேவன் நம்மோடு இருக்கிறார்” என்று அர்த்தம் (1:23) என்பதை மத்தேயு சுவிசேஷத்தில் காண்கின்றோம்.

நிக்கோலாஸ்ஸின் பரிசு எத்தனை அருமையாயிருந்ததோ, அதையும் விட மிகவும் அற்புதமானது இயேசுவாகிய ஈவு. அவர் பரலோகத்தை விட்டு இறங்கி, மனிதனாகப் பிறந்தார். மரித்தார், மீண்டும் உயிர்த்தெழுந்தார், அவர் இப்பொழுது நம்மோடிருக்கும் தேவன். நாம் கவலையும் வேதனையும் அடைந்த வேளைகளில் நமக்கு ஆறுதல் தருகின்றார், நாம் மனம் சோர்ந்த வேளைகளில், நமக்கு ஊக்கம் தருகின்றார், நாம் ஏமாற்றப்படும் போது, நமக்கு உண்மையைத் தெரிவிக்கிறார்.