ஒரு அருங்காட்சியகத்தில், பழங்கால விளக்குகள் வைக்கப்பட்டிருந்த பகுதியைச் சுற்றி வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த  ஒரு குறிப்பு, அவை இஸ்ரவேல் தேசத்திலிருந்தவை என்பதைக் காட்டியது. செதுக்கப் பட்ட வடிவுகளால் அலங்கரிக்கப்பட்ட, நீள் வளைய, களிமண்ணாலான குவளைகளில் இரண்டு துளைகள் இருந்தன.  ஒன்று, எரிபொருளுக்காகவும், மற்றொன்று, திரி வைப்பதற்காகவும் அமைக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலர் இத்தகைய விளக்குகளைச் சாதாரணமாக மாடங்களில் வைப்பர். இவை, மனிதனின் உள்ளங்கையளவு சிறியதாக இருந்தது.

இத்தகைய விளக்குகள், தாவீது அரசனை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும், அவர் தேவனைப் போற்றிப் பாடும் போது, “கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்” (2 சாமுவேல் 22:29) என்கின்றார். தேவன்,  யுத்தங்களில் வெற்றியைக் கொடுத்த போது, தாவீது இப்பாடலைப் பாடுகின்றார். அவனுடைய தேசத்திலும், புறதேசத்திலும் உள்ள எதிரிகள், அவனைக் கொல்லும் படி பின் தொடர்ந்த போதும், அவன் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியம் அவனைப் பெலப்படுத்தியதால், மறைவிடங்களில் முடங்கிக் கிடக்காமல், தேவப் பிரசன்னம் கொடுத்த நம்பிக்கையோடு, முன்னோக்கிச் சென்று, எதிரிகளைச் சந்திக்கின்றான். தேவன் அவனுக்கு உதவி செய்தபடியால், அவனால் காரியங்களைத் தெளிவாகக் காணவும், தனக்கும், தன்னுடைய படைகளுக்கும், தன்னுடைய தேசத்திற்கும் சரியான முடிவுகளை எடுக்கவும் முடிந்தது.

தாவீதின் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள இருள் என்பது, பெலவீனம், தோல்வி, மற்றும் மரணத்தைக் குறித்த பயத்தைக் காட்டுகின்றது. நம்மில் அநேகர் இத்தகைய கவலைகளோடு வாழலாம், அது, நமக்குள் பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் உருவாக்கும். இந்த இருள் நம்மை அழுத்தும் போது, தேவன் நம்மோடு இருக்கின்றார் என்பதை நாமறிவதால், நாம் சமாதானத்தைப் பெற்றுக்கொள்கின்றோம். பரிசுத்த ஆவியானவரின் அக்கினி நமக்குள் பிரகாசித்து, நாம் இயேசுவை முக முகமாய் சந்திக்கும் வரை, நம் பாதைக்கு வெளிச்சம் காட்டுவார்.