அமெரிக்காவில் எங்களுடைய மாநிலத்தில், குளிர் காலம் கடுமையானதாகவும், பூஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையிலும், முடிவில்லா பனிப்பொழிவையும் கொண்டிருக்கும்.அப்படிப்பட்ட, மிகக் குளிர்ந்த ஒரு நாளில், எங்கள் வீட்டிற்கு முன்பக்கமிருந்த பனியை ஆயிரமாவது முறை, அகற்றிக் கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த தபால்காரர், எங்கள் நலனைக் குறித்து விசாரித்தார். நான் அவரிடம், இந்தக் குளிர் காலத்தை நான் விரும்பவில்லையெனவும், இந்த பனியினால் நான் சோர்வடைந்துவிட்டேன், எனவும் கூறினேன். அத்தோடு, இந்த மோசமான காலநிலையில், அவருடைய வேலை இன்னும் கடினமாயிருக்குமே எனவும் கேட்டேன். அவர்,” ஆம், ஆனால் எனக்கு ஒரு வேலையாகிலும் இருக்கிறதே, அநேகருக்கு வேலையும் இல்லை, நான் வேலை செய்வதற்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன்” என்றார்.

அவருடைய நன்றியுள்ள மனப்பான்மையைப் பார்த்த போது, நான், என்னுடைய குற்றத்தை உணர்ந்தேன். நம் வாழ்வின் சூழ்நிலைகள் மகிழ்ச்சியற்றதாக அமையும் போது, நாம் நன்றி கூறவேண்டிய அநேக காரியங்களைக் காணத் தவறிவிடுகின்றோம் என்பதை உணர்ந்தேன்.

கொலோசே சபை விசுவாசிகளுக்கு பவுல்,” தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.” (கொலோசெயர் 3:15) என்று எழுதுகின்றார். தெசலோனிக்கேயருக்கு எழுதும் போது,” எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது,” என்கின்றார் (1 தெச. 5:18).

போராட்டங்களும், வேதனைகளும் நிறைந்த நாட்களில், தேவனுடைய சமாதானம் நம்முடைய இருதயங்களை ஆளும்படி நாம் ஒப்புக்கொடுப்போம். அந்த சமாதானம் நமக்குள்ளே இருக்கும் போது, கிறிஸ்துவுக்குள் நாம் பெற்றுள்ள அனைத்தையும் நினைவுகூருவோம், அப்பொழுது, நாம் உண்மையாய் நன்றி கூறுவோம்.