பொறுமையோடு காத்திரு
என்னுடைய மாமனாரின் எழுபத்தெட்டாம் பிறந்தநாளின் போது, அவரைக் கனப்படுத்தும்படி எங்களுடைய குடும்ப நபர்களனைவரும் வந்திருந்தனர். அப்பொழுது ஒருவர் அவரிடம், “இத்தனை ஆண்டுகளில் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்ட மிக முக்கியமான காரியம் என்ன?” என்று கேட்டார். அவருடைய பதில் “பொறுமையாய் காத்திரு” என்பதே.
பொறுமையாயிரு என்ற வார்த்தையைச் சொல்வது எளிதாகத் தோன்றலாம். ஆனால் என்னுடைய மாமனார் ஒரு குருட்டு நம்பிக்கையை அல்லது நேர் முகச் சிந்தனையைக் கொடுப்பதற்காக இதனைச் சொல்லவில்லை. அவர் கடந்த எழுபத்தெட்டு ஆண்டுகளும் கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்தவர். கொஞ்ச காலம் பொறுத்திருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதாக அல்ல. கிறிஸ்து அவருடைய வாழ்வில் செய்த கிரியையின் நிமித்தமே அவர் இப்படிச் சொன்னார்.
“பொறுமையாகக் காத்திரு” என்பதையே வேதாகமம் விடாப்பிடியான முயற்சியெனக் குறிப்பிடுகின்றது. அதுவும் நம்முடைய சொந்த முயற்சியால் நடக்கக்கூடியக் காரியமல்ல. தேவன் நம்மோடிருக்கின்றார், அவர் நமக்கு பெலனளிக்கின்றார், அவர் நம்முடைய வாழ்வில் நமக்கென வைத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவார் என தேவன் திரும்பத் திரும்ப வாக்களித்துள்ளார். எனவே தான் நாமும் விடாப்பிடியாகக் காத்திருக்கின்றோம். இந்தச் செய்தியை ஏசாயா இஸ்ரவேலருக்குச் சொல்கின்றார்.
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா. 41:10).
அப்படியானால் “பொறுமையோடு காத்திருத்தல்” என்பது எதைக் காட்டுகிறது? ஏசாயா தீர்க்கனைப்பொறுத்தமட்டில் நம்பிக்கைக்கான அடிப்படையே, தேவனுடைய குணாதிசயங்கள்தான். தேவனுடைய நன்மையானது நம்மைப் பற்றியிருக்கும் பயத்தின் பிடியை முறித்து, அப்பா பிதாவையும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் பற்றிக்கொள்ளும்படி செய்கின்றது. ஒவ்வொரு நாளும் அவர் நமக்குத் தேவையான பெலனையும் உதவியையும் தருகின்றார். அவருடைய பிரசன்னம் நம்மைத் தாங்கி, தேவன் நமக்குத் தரும் ஆறுதலையும் வல்லமையையும் தந்து நம்மை பெலப்படுதுகிறது.
புயலுக்கு அடைக்கலம்
1763 ஆம் ஆண்டு, இங்கிலாந்து தேசத்தில், சோமர்செட் என்ற இடத்தில், ஒரு மலை அடிவாரத்திலுள்ள சாலை வழியே ஒரு இளம் போதகர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஏற்பட்ட கொட்டும் மழைக்கும், பயங்கர மின்னலுக்கும் தப்பும்படி ஒரு குகையினுள் அடைக்கலமானார். அங்கிருந்து சேடர் பள்ளத்தாக்குப் பகுதியைப் பார்த்து வியந்து, தனக்கு அடைக்கலமும், சமாதானமும் ஈவாகத் தந்த தேவனைக் குறித்து தியானிக்கலானார். அங்கு காத்திருந்த வேளையில், ஒரு பாடலை எழுத ஆரம்பித்தார். “பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே...’’ என்று ஆரம்பிக்கும் பாமாலை பாடலை எழுதினார்.
அகஸ்டஸ் டோப்பிளாடி இப்பாடலை எழுதிய போது, இதேப் போன்று ஒரு மலையில் மோசே பெற்ற அனுபவத்தை நினைத்திருப்பாரோ, என்னவோ நமக்குத் தெரியாது (யாத். 33:22). ஒருவேளை அப்படியும் இருந்திருக்கலாம். தேவன் மோசேக்குச் செவி கொடுத்து, இஸ்ரவேலரை விடுவிப்பதற்கான உறுதியையளிக்கின்றார் என்பதனை யாத்திராகமத்தின் இப்பகுதி விளக்குகின்றது. மோசே தேவனிடம் அவருடைய மகிமையைக் காண்பிக்கும்படி கேட்ட போது, தேவன் கிருபையாக அவனிடம், ’’ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது” என்றார் (வச. 20). அவர் மோசேயை கன்மலையின் வெடிப்பிலே வைத்து அவருடைய கரத்தினால் மூடி, அவ்விடத்தில் கடந்து சென்றார். அவருடைய பின் பக்கத்தை மட்டும் அவன் காணும்படிச் செய்தார். தேவன் அவனோடு இருக்கின்றார் என்பதை மோசே தெரிந்துகொண்டான்.
மோசேயிடம் தேவன் சொல்லிய வார்த்தைகளை நாமும் நம்புவோம். “என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்” (வச. 14) என்றார். நாமும் தேவன் தரும் அடைக்கலத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மோசேயும் அந்த ஆங்கிலேயப் போதகரும் சந்தித்ததைப் போன்று நாமும் நம் வாழ்வில் அநேகப் புயல்களைச் சந்திக்கலாம். நாம் தேவனை நோக்கிக் கூப்பிடும் போது அவருடைய பிரசன்னம் நம்மோடிருந்து, அவருடைய சமாதானத்தால் நம்மை நிரப்பும்.
மாயக்காரரைக் குறித்து தேவன்
“என்னுடைய குழுவிலுள்ள நபர் ஒருவர் இதைச் செய்திருந்தால் நான் மிகவும் வருத்தப் பட்டிருப்பேன்’’ என்று ஒரு கிரிக்கெட் வீரர், 2016 ஆம் ஆண்டு நடை பெற்ற ஒரு போட்டியில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட்வீரர் ஒருவர் ஏமாற்றியதைக் குறித்து இப்படிச் சொன்னார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதே கிரிக்கெட் வீரர், இதே போன்ற மற்றொரு ஏமாற்று வேலையைச் செய்தமைக்காகப் பிடிபட்டார்.
இப்படிப்பட்ட மாய்மாலமான செயல்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன .ஆதியாகமம் 38ல் குறிப்பிடப் பட்டுள்ள யூதாவின் மாய்மாலம் மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. தாமாரைத் திருமணம் செய்த தனது இரு மகன்களும் மரித்த பின்பு, யூதா அவளுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் இருந்து விடுகிறான் (வச. 8-11). ஏமாற்றமடைந்த தாமார் தன்னை மறைத்து, ஒரு வேசியைப் போல முக்காடிட்டுக் கொண்டு யூதாவைச் சந்தித்து, அவனோடு சேருகின்றாள் (வச. 15-16).
ஆனால் கைம்பெண்ணான தன்னுடைய மருமகள் கர்ப்பவதியானாள் என்று கேள்வி பட்டபோது ,அவன் அவளைக் கொலை செய்யும்படி எழும்புகின்றான். “அவளை வெளியே கொண்டு வாருங்கள்; அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும்” என்கின்றான் (வச. 24). ஆனால், யூதாவே அதற்குக் காரணமானவன் என்பதற்கு அவள் சான்று வைத்திருந்தாள் (வச. 25).
அங்கு யூதா உண்மையை மறைத்திருக்கலாம். ஆனால் அவன் தன்னுடைய இரட்டை வேடத்தை ஒத்துக்கொண்டான். அவளுடைய எதிர்காலத்திற்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றான். என்னிலும் அவள் நீதியுள்ளவள் என்கின்றான் (வச. 26).
யூதா மற்றும் தாமாரின் இருண்ட பகுதியை தேவன் பிணைத்து நமக்கான மீட்பின் கதையை உருவாக்குகின்றார். தாமாரின் பிள்ளைகள், இயேசுவின் முன்னோர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர் (மத். 1:2-3).
ஆதியாகமம் 38ஆம் அதிகாரம் ஏன் வேதாகமத்தில் இடம் பெற்றது? ஒன்று, மனிதனின் திருக்குள்ள இருதயத்தைக் காட்டவும் ,மற்றொன்று தேவனின் அன்பும், கிருபையும்,கருணையும் நிறைந்த இருதயத்தைக் காட்டவுமே.
அதில் கூறியுள்ளபடி செய்
பிரையன், தன்னுடைய சகோதரனின் திருமண நிகழ்ச்சியில் வரவேற்பாளராக நியமிக்கப்பட்டான். அவன் அதைச் சரியாக செய்யவில்லை. எனவே, அவனுடைய குடும்பத்தினர் யாவரும் அவனைக் குறித்து அதிருப்தியடைந்தனர். அவனுடைய சகோதரி ஜாஸ்மின்னும் கூட. அவள் தான் அன்றைய வைபவத்தில் வேதாகமப் பகுதியை வாசிக்கும் படி நியமிக்கப் பட்டிருந்தாள். அந்த நிகழ்ச்சியில், அவள் 1 கொரிந்தியர் 13 ஆம் அதிகாரத்தை தவறில்லாமல், அழகாக வாசித்தாள். திருமணம் முடிந்த பின்னர், அவளுடைய தந்தை அவளை, அவளுடைய சகோதரனுக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வழங்குமாறு கூறினார். அவள் தயங்கினாள். அவளால் தான் வாசித்த வேத பகுதியிலுள்ளபடி அன்பு செய்வது கடினமாயிருந்தது. அன்று மாலை முடியுமுன் அவள் தன் மனதை மாற்றிக் கொண்டாள். “நான் அன்பைக் குறித்த வேத வாக்கியங்களை வாசித்து விட்டு, அதன்படி செயல் படாமல் இருக்க முடியாது” என்றாள்.
எப்பொழுதாகிலும் நீ வாசித்த அல்லது கேட்ட வேத வார்த்தையின் படி செயல் படவில்லையே யென்று குத்தப்பட்டதுண்டா? இதில் நீ தனிப்பட்டவனல்ல தேவனுடைய வார்த்தையை கேட்பதும், வாசிப்பதும் எளிது. ஆனால் அதின் படி நடக்க வேண்டுமே! எனவே, தான் யாக்கோபு “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின் படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (யாக். 1:22) எனக் குறிப்பிடுகின்றார். அவர் தரும் கண்ணாடி பிம்பத்தின் எடுத்துக்காட்டு நம்மைச் சிரிக்க செய்கின்றது. அதின் மூலம் நம்மில் காணப்படும் குறைகளை நாம் உணர்ந்து அதில் கவனம் செலுத்தும் படி அவர் சொல்கின்றார். ஆனால், குறைகளை உணர்வது மட்டும் போதும் என்றிருப்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். மேலும் வேத வார்த்தைகளை “உற்றுப்பார்த்து” அதில் “நிலைத்திரு” (வச. 25) என யாக்கோபு நம்மைத் தூண்டுகிறார். ஜாஸ்மின் எதைக் கட்டாயமாகச் செய்யும்படித் தூண்டப்பட்டாளோ அதை நாமும் செய்யும்படி அவர் நம்மை ஊக்கப்படுத்துகின்றார். வேத வார்த்தைகளின் படி வாழ்ந்து காட்டு. இதை விட வேறொன்றையும் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை
உன்னுடைய ஆயுதத்தின் மேல் நம்பிக்கையாயிரு
ஓர் இளம் எழுத்தாளரான நான், எழுத்தாளர் மாநாடுகளில் இருக்கும் போது அடிக்கடி என்னுடைய திறமையின் மீது சந்தேகம் கொள்வதுண்டு. நான் அந்த அறையைச் சுற்றிப் பார்க்கும் போது அங்குள்ள மனிதர்கள் யாவரும் ராட்சதர்களைப் போல எனக்குக் காட்சித்தருகின்றனர். எனக்குப் போதிய பயிற்சியும் முன் அநுபவமும் இல்லாததால் இப்படித் தோன்றுகின்றது. எனக்கிருந்ததெல்லாம் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில் எழுதப்பட்ட வேதாகமத்தின் நடையும், தொனியும், மொழியுமே. அதுவே என் பேச்சும், என் எழுத்தின் நடையாகவும் அமைந்தது. அதுவே என்னுடைய ஆயுதம். அதன் ஓசை எனக்குள் மகிழ்ச்சியைத் தந்தது. அது எல்லாருக்கும் அப்படியேயிருக்குமெனவும் நம்புகின்றேன்.
இளம் மேய்ப்பனான தாவீதும் கோலியாத்துடன் யுத்தம் செய்யும்படி சவுலின் போராயுதங்களை அணியும் வரை தன்னைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை (1 சாமு. 17:38-39). அந்த போராயுதங்களை அணிந்து கொண்டு அவனால் நடக்க முடியவில்லை. ஒரு மனிதனுடைய ஆயுதங்கள் மற்றொரு மனிதனுக்குச் சிறை போன்றது என்பதை தாவீது புரிந்திருப்பான். “நான் இவைகளைப்போட்டுக் கொண்டு போகக் கூடாது” (வச. 39) என்றான். அவன் அறிந்திருந்ததை நம்பினான். அந்த நேரத்தில் அவனுக்கு எது தேவையோ அதை தேவன் அவனுக்குள் தயாரித்து வைத்திருந்தார் (வச. 34-35) கவணும், கற்களும் தான் தாவீதுக்கு பழக்கமானவை. அவையே அவனுடைய ஆயுதங்கள். அவற்றை தேவன் பயன்படுத்தி இஸ்ரவேலரின் அதிபதிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார். நீயும் உன்னைக் குறித்து அறியாமல் இருந்த நேரங்களுண்டா? பிறர் பெற்றுள்ள ஏதோவொன்றை நான் பெற்றிருந்தால் என்னுடைய வாழ்க்கையும் வேறு விதமாக அமைந்திருக்குமென நினைக்கின்றாயா?
தேவன் உனக்கென்று தந்துள்ள திறமைகளையும் அனுபவத்தையும் நினைத்துப்பார். அவர் உனக்குத் தந்துள்ள ஆயுதத்தை நம்பு.