Archives: செப்டம்பர் 2019

தண்ணீரைக் காட்டிலும் மேலானது.

என்னுடைய குழந்தைப் பருவத்தில், என்னுடைய ஆலயத்தைக் குறித்து என் நினைவில் தங்கியிருக்கும் ஒரு காட்சி -  எங்கள் போதகர் ஆலயத்தின் நடுப் பகுதி வழியே நடந்து வந்து “ஞானஸ்நானத்தின் தண்ணீரை நினைத்துக் கொள்ளுங்கள்” என்பார். ஞானஸ்நானத்தின் தண்ணீரை நினைவு படுத்துவதா? நான் எனக்குள்ளாகவே கேட்டுக் கொள்வேன்.  தண்ணீரை எப்படி நினைவில் வைப்பது? அத்தோடு அவர் ஒவ்வொருவர் மீதும் தண்ணீரைத் தெளிப்பார். குழந்தையாக இருந்த எனக்கு அது மகிழ்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது.

நாம் ஏன் ஞானஸ்நானத்தை நினைவு கூர வேண்டும்? ஒரு மனிதன் ஞானஸ்நானம் பெறும் போது தண்ணீரை விட மேலான அநேகக் காரியங்கள் அதில் அடங்கியுள்ளன. ஞானஸ்நானம் என்பது இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தால் நாம் அவரையே தரித்துக் கொள்கின்றோம் (கலா. 3:27) என்பதன் அடையாளம். இன்னும் சொல்வோமாகில், நாம் தேவனுக்குச் சொந்தமானவர்களென்பதையும், அவர் நம்மில், நம்மோடு வாசமாயிருக்கிறார் என்பதையும் நாம் ஞானஸ்நானத்தின் மூலம் கொண்டாடுகின்றோம்.

நாம் சொல்லிக் கொள்ளக் கூடிய அளவு எந்த முக்கியத்துவமும் வாய்ந்தவர்களல்ல, ஆனால்  நாம் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டவர்களானால் நம்முடைய அடையாளம் அவர் மூலமாய் வெளிப்படுகின்றது.. நாம் தேவனுடைய பிள்ளைகளாகின்றோம் (வச. 26) என இப்பகுதி தெரிவிக்கின்றது. நாம் நியாயப் பிரமாணத்தைக் கைக்கொண்டதாலல்ல, தேவன் மீதுள்ள விசுவாசத்தினாலேயே நீதிமான்களாக்கப் பட்டோம் (வச. 23-25). எனவே, நமக்குள் ஆண், பெண் என்றோ, கலாச்சாரத்தினாலோ அல்லது தகுதியினடிப்படையிலோ எந்தப் பிரிவும் இல்லை. நாம் விடுதலையாக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் நாமனைவரும் ஒன்றாயிருக்கின்றோம். இப்பொழுது, நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் (வ 28)

எனவே, நாம் ஞானஸ்நானத்தை  நினைவு கூரவும், அதன் முக்கியத்துவத்தை உணரவும் காரணங்களுள்ளன. நாம் வெறுமனே ஞானஸ்நானத்தை சடங்காச்சாரமாகப் பார்க்காமல்,  நாம் தேவனுக்குச் சொந்தமாகிறோம், அவருடைய பிள்ளையாகிறோம், என்பதை நினைவில் கொள்ளுவோம்.  நம்முடைய அடையாளமும், எதிர் காலமும், ஆவியின் விடுதலையும் அவருக்குள் உண்டாயிருக்கின்றது.

திசை திருப்பும் செய்திக்குச் செவி சாய்க்காதே

தூண்டி விட்டு திசை திருப்பும் செய்திக்குச் செவி சாய்க்காதே. ஏனெனில் “ட்ரோல்” (TROLL)  என்றழைக்கப்படும் யுக்தி வலைதளங்களில் பரவி வருகின்றது. வேண்டுமென்றே பிறரை கோபமடையச் செய்யும், காயப்படுத்தும் கருத்துக்களை செய்திகளில் அல்லது சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிக்கின்றார்கள். ஆனால் இத்தகைய செய்திகளுக்கு செவி சாய்க்கவில்லையெனில் அவர்களால் உரையாடல்களைத் திசை திருப்புவது கடினமாகி விடுகின்றது.

ஆக்கபூர்வமான உரையாடல்களுக்குச் சற்றும் ஆர்வம் காட்டாத மக்களைச் சந்திப்பது என்பது ஒரு புதிய காரியமல்ல. “தூண்டி விட்டு திசை திருப்பும் செய்திக்குச் செவி சாய்க்காதே” என்பதற்குச் சமமான வேதவாக்கியம் நீதிமொழிகள் 26:4ல்  கொடுக்கப் பட்டுள்ளது. “மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறு உத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்” என்பது.

ஆனால் மிகவும் பிடிவாதமான குணமுடைய மனிதனும் விலையேறப்பெற்ற தேவனுடைய சாயலைப் பெற்றவன். நாம் ஒரு  வேளை பிறரோடு அதிகம் பேசுபவராக இல்லையெனில்  நாம் நம்மைக் குறித்து உயர்வாக மதிப்பிடுபவராகவும், பிறரை மதியாதவராகவும், தேவனுடைய கிருபைக்குத் தூரமானவர்களாகவும் கருதப்படக் கூடும் (மத். 5:22)

எனவே தான் நீதிமொழிகள் 26:5 இதற்கு மாறான ஓர் ஆலோசனையைத் தருகின்றது. நாம் தாழ்மையோடு ஜெபத்தில்தேவனைச் சார்ந்து கொண்டால்தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அன்பை வெளிப் படுத்த முடியும். (கொலோசேயர் 4:5-6) சில வேளைகளில் நாம் பேச வேண்டும், வேறு சில வேளைகளில் அமைதியாயிருப்பதே மேலானது.

நாம் தேவனுக்குச் சத்துருவாக இருந்த போதும்  நம்மை அவரண்டை இழுத்துக் கொண்ட அதே தேவன் இன்றும் ஒவ்வொரு மனிதனின்  இருதயத்திலும் வல்லமையாகக் கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்பதை எல்லா சூழ்நிலைகளிலும் தெரிந்து கொண்டால் நாம் சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம்.  (ரோம. 5:10). கிறிஸ்துவின் அன்பை நாம் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் போது அவர் தரும் ஞானத்தைச் சார்ந்து கொள்வோம்.

ஒற்றுமை

1722ஆம் ஆண்டு செக்கஸ்லோவேக்கியாவில் வாழ்ந்த ஒரு சிறு கூட்டமான மொரேவியன் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலுக்குத் தப்பி, தயாளகுணம் படைத்த ஒரு ஜெர்மானிய சீமானை அடைந்தனர். நான்கு ஆண்டிற்குள் மேலும் 300 பேர் வந்து சேர்ந்தனர்.  உபத்திரவப் பட்ட இந்த அகதிகள், ஒரே குழுவாகத் தங்கியிருப்பதற்குப் பதிலாக தங்களுக்குள் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தினர்.  கிறிஸ்தவத்தை வெவ்வேறு கண்ணோட்டத்துடன் பார்த்து பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அப்பொழுது அவர்களுக்கு ஒரு சிறிய வாய்ப்பளிக்கப் பட்டது. அது அவர்களுக்குள் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. அவர்களனைவரும் எதை ஏற்றுக் கொள்ளவில்லையோ அதை விட்டு விட்டு, எதை ஏற்றுக் கொள்கின்றனரோ அதை மட்டுமே முக்கியப் படுத்த ஆரம்பித்தனர். அதன் விளைவாக ஒற்றுமை ஏற்பட்டது.

எபேசு சபை விசுவாசிகளை ஒற்றுமையாக வாழும்படி அப்போஸ்தலனாகிய பவுல் ஊக்கப் படுத்துகின்றார். பாவம், எப்பொழுதும் பிரச்சனைகளையும், தன்னலத்தையும், உறவுகளில் விரிசலையும் கொண்டு வரும். கிறிஸ்துவினால் புதிய வாழ்வைப் பெற்றுக் கொண்ட எபேசு சபையினர் தாங்கள் பெற்றுக் கொண்ட புதிய அடையாளத்தை, செயலில் காட்டி வாழும்படி சொல்கின்றார். (எபேசியர் 5:2) எல்லாவற்றிற்கும் மேலாக “சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்” (4:3) என்கிறார்.

இந்த சமாதானமும் ஒற்றுமையும் மனிதரின் திறமையால் கொண்டு வரக்கூடிய நட்புறவுகள் அல்ல. நாம், “மிகுந்த மனத் தாழ்மையும், சாந்தமும், நீடிய பொறுமையும் உடையவர்களால் அன்பினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும் (வச. 2) இது மனிதனால் கூடாதது. நம்முடைய சொந்த முயற்சியால் நாம் ஒற்றுமையைக் கொண்டு வர முடியாது. “மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற தேவ வல்லமையின் படியே” இது கூடும் (3:20).

எவ்வளவு விலையானாலும்

கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலைப் பற்றிய திரைப்படம், ஆரம்ப நாட்களில் சபைகளில் ஏற்பட்ட துன்பங்களை அப்படியே காட்டுகின்றது. அந்த திரைப்படத்தில் வருகின்ற சிறிய கதாப்பாத்திரங்கள் கூட இயேசுவைப் பின்பற்றுவது மிகவும் ஆபத்தானது என வெளிப்படுத்துகின்றன. அப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான அடிபடும் ஒரு பெண், அடிக்கப் படும் ஒரு ஆண் இன்னும் தங்கள் உயிரையேயிழந்த நபர்கள் 1, 2, 3 எனக் காணும் போது, இவ்வாறு சிந்திக்கத் தோன்றும்.

கிறிஸ்துவோடு நம்மை ஐக்கியப் படுத்துவது என்பது மிகவும் விலையேறப் பெற்றது. உலகின் பல பகுதிகளில் நடைபெறும் காரியங்கள்  இயேசுவைப் பின்பற்றுவது மிக ஆபத்தானது எனக் காட்டுகின்றது. இன்றும் அநேக ஆலயங்கள் இத்தகைய துன்பங்களைச் சந்திக்கின்றன. நம்மில் சிலர் தங்களுடைய விசுவாசத்தினிமித்தம் இழிவாக நடத்தப் படலாம், அல்லது தங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வு அவர்களின் விசுவாசத்தினிமித்தம் கொடுக்கப் படாமல் தடுக்கப் பட்டிருக்கலாம்.

ஆயினும் சமுதாய அந்தஸ்தை தியாகம் செய்வதற்கும், தங்களுடைய வாழ்வையே தியாகம் செய்வதற்கும் மிகப் பெரிய வேறுபாடுள்ளது. உண்மையில் தன்னார்வம், பொருளாதார நிலைப்பாடு, சமுதாய அந்தஸ்து ஆகியவை எப்பொழுதும் மனிதனை ஈர்த்துக் கொள்ளுபவை. இத்தகைய செயல்களை இயேசுவின் காலத்தில் அவரைப் பின்பற்றியவர்களிடமும்  காண்கிறோம். இயேசு சிலுவையில் அறையப் படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு வரை அநேக இஸ்ரவேலர் இயேசுவைப் புறக்கணித்த போதும் (யோவா. 12:37) அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (வச. 42) என யோவான் எழுதுகின்றார். ஆனாலும் அவர்கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கை பண்ணாதிருந்தார்கள். ஏனெனில் அவர்கள் தேவனுடைய பாராட்டுதலை விட மனிதனின் புகழ்ச்சியையே அதிகம் விரும்பினார்கள் (வ42-43)

இன்றைக்கும் சமுதாயச் சூழல்கள், கிறிஸ்துவின் மீது நாம் வைத்துள்ள  விசுவாசத்தை மறைத்துக் கொள்ளச் செய்கின்றது. ஆனால் என்ன விளைவைச் சந்திக்க நேர்ந்தாலும், நாம் அனைவரும் மனிதனின் புகழ்ச்சியை நாடாமல் தேவனுடைய பார்வைக்கு நலமானதைச் செய்ய ஒன்றுபட்டு நிற்போம்.

நாம் எதைச் செய்தாலும்

சி.எஸ். லூயிஸ் என்பவர் தான் எழுதிய “எதிர் பாராத சந்தோஷம்” (Surprised by Joy) என்ற புத்தகத்தில் தனது 33வது வயதில் எப்படி கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார் என்று எழுதியுள்ளார். “எதிர்ப்பைத் தெரிவித்தும், போராடியும், வெறுப்பைக் காண்பித்தும், ஏதாவது ஒரு வழியில் தப்பித்துக் கொள்ள வகை தேடியும்” முடியாமல் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதாக தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார். லூயிஸின் தனிப்பட்ட எதிர்ப்புகள், குறைபாடுகள் மற்றும் தடைகளின் மத்தியிலும், தேவன் அவரை ஒரு தைரியமான விசுவாச வீரனாக மாற்றினார். கிறிஸ்துவின் உண்மை, அன்பு ஆகியவற்றை லூயிஸ் தன்னுடைய வல்லமையான கதைகளாலும், கட்டுரைகளாலும் வெளிக் காட்டினார். அவர் மரித்த பின்னரும் ஐம்பத்தைந்து ஆண்டுகளாக அவை வாசிக்கப்பட்டும், பிறரோடு பகிர்ந்து கொள்ளப்பட்டும் வருகின்றன. அவருடைய வாழ்வு அவருடைய நம்பிக்கையை வெளிப் படுத்தியது. “ஒரு மனிதன் மற்றொரு இலக்கினை நிர்ணயிக்க அல்லது ஒரு புதிய கனவினைக் காண வயது ஒரு வரம்பல்ல” என்பதை அவருடைய வாழ்வு காட்டியது.

நாம். நமக்குத் திட்டங்களை ஏற்படுத்தி, கனவுகளைக் காணும் போது, தேவன் நம்முடைய திட்டங்களைத் தூய்மைப் படுத்தி, நாம் தேவனுக்காகச் செய்யும் காரியங்களை முழு அர்ப்பணத்தோடு செய்யும்படி நம்மை பெலப் படுத்துகின்றார் (நீதி. 16:1-3). சாதாரணப் பணியிலிருந்து மிகப் பெரிய சாதனை வரை அனைத்திலும் நம்மைப் படைத்த சர்வ வல்ல தேவனுக்கு மகிமையுண்டாகும்படி நம்மால் வாழ முடியும். ஏனெனில், நம்முடைய நடைகளை உறுதிப் படுத்துகின்றவர் கர்த்தர் (வச. 4,9). நம்முடைய ஒவ்வொரு செயலையும், ஒவ்வொரு வார்த்தையையும் தேவனே கவனித்துக் கொள்வதால் (வச. 7) அவை தேவனை கனப்படுத்துவதாக இருக்கின்றன.

நம்முடைய தடைகளும், குறுக்கீடுகளும், ஓரிடத்தில் நிலைப்பட்டு விடும் தன்மையும், குறுகிய கனவுகளும் தேவனுடைய செயல்பாட்டிற்குத் தடைகளாகாது. நாம் அவருக்காக வாழ தேர்ந்து கொள்ளும் போது, நம்மை முழுமையாக அர்ப்பணித்து அவரையே சார்ந்து இருப்போமாகில், அவர் நமக்கென்று  வைத்திருக்கும் திட்டங்களைச் செயல் படுத்துவார். நாம் எதைச் செய்தாலும் அவரோடும் அவருக்காகவும் அவர் மூலமாகவுமே செய்ய முடியும்.