ஞானமாக உதவுதல்
சாலையின் சிவப்பு விளக்கு எரியவே சிக்னலில் வண்டியை நிறுத்தினேன். ஏற்கனே நான் பார்த்திருந்த அதே நபர் அப்போதும் சாலையோரம் நின்றிருந்தார். “உணவுவாங்க பணம் இல்லை. எந்த உதவியானாலும் சரி” என்று கையில் ஓர் அட்டையை வைத்திருந்தார். அவருக்கு உதவுவதா வேண்டாமா என்று தெரியவில்லை, பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.
உதவி தேவைப்படுவதுபோல நடிக்கிறவர்கள் இருக்கிறார்கள். வேறு சிலருக்கு உண்மையிலேயே உதவி தேவையிருக்கும், ஆனால் தவறான பழக்கங்களுக்கு அடிமைப்பட்டிருப்பார்கள். நம் நகரத்தின் சேவை பணிகளுக்கு பணம்கொடுப்பதுதான் சிறந்தது என்று சமூகப்பணியாளர்கள் எங்களிடம் கூறுகிறார்கள். மனப்பாரத்தோடு அங்கிருந்து கிளம்பினேன். அன்று நான் ஞானமாகச் செயல்பட்டிருந்தாலும்கூட, மனதிற்கு கஷ்டமாக இருந்தது.
“ஒழுங்கில்லாதவர்களையும் உழைக்காதவர்களையும் எச்சரியுங்கள், பலவீனமானவர்களுக்கு உதவிசெய்யுங்கள், எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள்” என்றுதான் மூலபாஷையில் (1 தெச. 5:14) சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நபர்களை அடையாளங்கண்டால்தான் சரியாக நாம் நடந்துகொள்ள முடியும். பலவீனமான அல்லது மனமுறிவுள்ள ஒருவரை எச்சரித்தால், அவர்களுடைய ஆவியை மேலும் சோர்வடையச் செய்துவிடுவோம். உழைக்காத ஒருவருக்கு உதவினால், அவரை மேலும் சோம்பலாக்க ஊக்கப்படுத்திவிடுவோம். எனவே, நமக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு, உண்மையில் உதவி தேவைப்படுகிறதென நாம் அறிந்தவர்களுக்கு உதவுவதுதான் சிறந்தது.
யாருக்காவது உதவும்படி தேவன் உங்களுடைய உள்ளத்தில் ஏவுகிறாரா? நல்லது! இப்போதே உதவிசெய்யத் துவங்குங்கள். அவருக்கு இன்ன தேவைகள்தாம் இருக்கிறதென நீங்களே ஏதாவது கற்பனைசெய்யாதீர்கள். அவருடைய பிரச்சனைகள் என்னவென்று கேளுங்கள், சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். ஜெபித்துவிட்டு, ஞானமாக உதவிசெய்யுங்கள், உங்களுடைய மனது சொல்கிறபடி உதவிசெய்ய நினைக்காதீர்கள். மற்றவர்களுக்கு “நன்மைசெய்கிற” நோக்கத்துடன் உதவும்போதுதான், அவர்கள் தடுமாறினாலும்கூட “எல்லாரிடமும் நீடிய சாந்தமாக இருப்போம்” (வச. 14-15).
வெற்றி பேரணி
“சிகாகோ கப்ஸ்” பேஸ்பால் அணியானது ஒரு நூற்றாண்டுக்கு பிறகு முதன்முதலாக 2016ல் தான் உலகத்தொடரை வென்றது. அதன் வெற்றிப்பேரணியில் 50 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். உலக சாம்பியன்களைக் கொண்டாடும் வகையில் நகரில் ஊர்வலமாகச் செல்லத் திரண்டார்கள்.
வெற்றிப் பேரணிகள் நவீனக் காலக் கண்டுபிடிப்புகள் கிடையாது. ரோமர்கள் போரில் வெற்றிபெறும்போது வெற்றி பேரணி நடத்துவார்கள், பண்டைய காலத்தில் அது பிரபலம். மக்கள் கூட்டத்தில் மிதந்தபடி தன்னுடைய படைகளோடும் சிறைப்பிடித்து வந்தவர்களோடும் தளபதிகள் பேரணியாகச் செல்வார்கள்.
“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி கிறுஸ்துவுக்குள்” சிறைப்பட்டவர்களாக நடத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று இந்தப் பேரணியை மனதில்வைத்துத்தான் கொரிந்து சபைக்கு பவுல் எழுதியிருக்கவேண்டும் (2 கொரி. 2:14). கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் இங்கு சிறைப்பட்டவர்களாகக் காட்டப்படுவது சுவாரஸ்யமானது. கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் அந்தப் பேரணியில் கட்டாயமாகக் கலந்துகொள்ள நிர்பந்திக்கப்படாமல், உயிர்த்தெழுந்து, வெற்றிபெற்ற கிறிஸ்துவின் தலைமையின்கீழ் மனதாரப் பங்குபெறுகிறவர்களாகக் காணப்படுவார்கள். கிறிஸ்து தாம் வெற்றிபெற்றதன்மூலம் தம்முடைய ராஜ்யத்தைக் கட்டி எழுப்புவதையும், நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளப் போவதில்லை என்பதையும் கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டாடுகிறோம்.
சிலுவையில் இயேசு வெற்றிபெற்றார், அதனால் விசுவாசிகளுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது என்று அறிவிக்கும்போது, “அவரை அறிகிற அறிவின் வாசனையை” எங்கும் பரவச்செய்வதற்கு நாம் உதவுகிறோம். (2 கொரி. 2:14). இந்த வாசனை சிலருக்கு இரட்சிப்பின் நிச்சயத்தை உறுதிப்படுத்துகிற நற்வாசனையாக இருக்கலாம் அல்லது அவர்களுடைய தோல்விக்கான வாசனையாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், கண்ணுக்குப் புலப்படாத இந்த வல்லமையான வாசனையானது நாம் செல்கிற இடங்களிளெல்லாம் நுகரப்படும்.
கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள், அவர் வெற்றியோடு உயிர்த்தெழுந்ததை அறிவிப்பார்கள், அந்த வெற்றிதான் உலகத்திற்கு இரட்சிப்பைப் பெற்றுத்தந்துள்ளது.
விலையேறப்பெற்றவர்
“என் பொக்கிஷம். . .” டால்கினின் லார்ட் ஆப் த ரிங்ஸ் என்கிற தொடர்கதைகளில் வருகிற “கொலும்” கதாபாத்திரம் சொல்லும் வசனம் இது. மூன்றுபாக திரைப்படமாகவும் இக்கதை எடுக்கப்பட்டுள்ளது. மெலிந்து உடலுடன், “சக்தி தரும் அரிய மோதிரத்தின்மேல்” கொள்ளை ஆசைகொண்டு அலைகிற கொலும் என்கிற குள்ளனை, இன்று பேராசைக்கும், தீராதவெறிக்கும், பித்துப்பிடித்த நிலைக்கும் மிகச்சரியான ஓர் அடையாளமாகக் காட்டலாம்.
“கொலும்” கதாபாத்திரம் சிக்கலானதும்கூட. மோதிரத்தின் மேலான விருப்பும்-வெறுப்பும், தன் மேலான விருப்பும்-வெறுப்பும் அதை பாடாய்ப்படுத்தும். “கொலுமின்” இந்த மனக்குமுறல்கள் போலத்தான் இன்று நம் ஒவ்வொருவருடைய மனவேட்கைகளும் உள்ளன. ஏதாவது ஒரு காரியத்தின்மேல் குறியாக இருப்போம் அல்லது “அதிகமாக” வேண்டுமென்கிற வேண்டாத ஏக்கம் இருக்கும். நாம் “பொக்கிஷமாகக்” கருதுகிற அந்தக் காரியங்கள் கிடைத்தால்தான் நமக்கு நிம்மதியே வரும். உண்மை என்னவென்றால், நமக்கு மனதிருப்தியைத் தருமென நாம் நினைக்கிற அந்தக் காரியங்கள்தாமே முன்பைவிட வெறுமையான உணர்வை உண்டாக்கிடும்.
ஆனால் இதைவிட மேலான ஒரு வாழ்க்கையும் இருக்கிறது. சங்கீதம் 16இல் தாவீது சொல்வதுபோல, நம் இருதயங்களின் ஏக்கங்கள் நம்மை இளைக்கச்செய்துவிடும்போல மிரட்டும்போது, மனநிம்மதி கிடைக்காமல் திண்டாடும்போது (வசனம் 4), தேவனிடம் அடைக்கலம் உண்டு என்கிற ஞாபகம் வரவேண்டும் (வச. 1), ஒவ்வொரு நற்காரியமும் அவரிடமிருந்து வருகிறது என்கிற ஞாபகம் வரவேண்டும் (வச. 2.)
அவற்றைப் பார்க்கும்போது மனநிம்மதி உண்டாகிறது என்பது தவறானது, பார்க்கும் நற்காரியங்களில் தேவ அழகு தெரிகிறது என்பதற்காகப் பார்க்கவேண்டும். (வசனம் 8). அப்போது மெய்யான மனரம்மியத்தை அனுபவிக்கலாம். தேவனுடைய சமுகத்தில் “பரிபூரண ஆனந்தம்” கிடைக்கும், “ஜீவ மார்க்கத்தில்” இன்றும் என்றென்றும் அவரோடு நடக்கலாம் (வச.11).
கண்ணியில் சிக்கிவிடாதீர்கள்
வட கரோலினாவில் எங்களுடைய வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் மணல்பாங்கான ஒரு சிறு ஈரநிலப்பகுதியில்தான் வீனஸ் என்கிற பூச்சுண்ணி தாவரத்தை முதன்முதலாகக் கண்டுபிடித்தார்கள். ஊனுண்ணியான இந்தத் தாவரத்தைப் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
வீனஸ் பூச்சுண்ணி தாவரங்கள் பார்ப்பதற்கு விரிந்த ஒரு பூ போலத் தெரியும். ஆனால் அது ஒரு கண்ணியமைப்பு. மணமிக்க தேன் போன்ற திரவம் அதனுள்ளே சுரக்கும். பூச்சிகள் அதற்குள்ளாக ஊர்ந்துசெல்லும்போது அதன் வெளிப்புற விளிம்போரங்களில் உள்ள சென்சார்கள் தூண்டப்படும், பொறியின் கதவுகள் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் இறுக மூடிக்கொள்ளும். இரை உள்ளே மாட்டிக்கொள்ளும். அந்தப் பொறியானது இரையை மேலும் இறுக்கி, நொதி திரவங்களை வெளியிட்டு, அந்த இரையை கொஞ்சம் கொஞ்சமாக உணவாக்கிவிடும். அந்த மணல்பாங்கான பகுதியில் கிடைக்காத ஊட்டச்சத்தை இவ்வாறு பெற்றுக்கொள்ளும்.
நாம் எதிர்பாராத நேரத்தில் நம்மைச் சிக்கவைக்கும் வேறொரு பொறி பற்றி வேதாகமம் கூறுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் தன் சீடனான தீமோத்தேயுவுக்குச் சொல்லும் புத்திமதியில் அதைக் காணமுடிகிறது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.” மேலும், “சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” (1 தீமோ. 6:9-10).
பணமும் பொருட்களும் சந்தோஷத்திற்கு உத்தரவாதமளிப்பது போலத் தோன்றலாம், ஆனால் வாழ்க்கையில் அவற்றிற்கு முதலிடம் கொடுத்துவிட்டால், அது பொறியில் கால்வைப்பதற்கு சமமாகும். இயேசுவின் மூலம் தேவன் நமக்குச் செய்திருக்கிற நன்மையை மட்டுமே எண்ணி, நன்றியும் தாழ்மையும் நிறைந்த இருதயங்களோடு வாழும்போது இந்தப் பொறியிலிருந்து தப்பலாம். ஏனென்றால், “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.”
தேவன் தருகிற மனரம்மியத்தை இந்த உலகத்தின் தற்காலிக பொருட்களால் தரவே முடியாது. அவரோடு நாம் உறவு வைத்தால்தான் மெய்யான, நிலையான மனநிம்மதியைக் காணமுடியும்.
உயிருள்ள வண்ணத்தில்
சேவியர் மெக்கூரியின் பத்தாவது பிறந்த நாளை முன்னிட்டு, அவனுடைய அத்தை செலினா கண்ணாடி ஒன்றை பரிசாக அனுப்பியிருந்தார். கண்ணாடியை முகத்தில் மாட்டியதுமே அவன் அழுதுவிட்டான். பிறவிலேயே அவனுக்கு நிறக்குருடு இருந்தது. இதுவரையிலும் பார்த்த எல்லாமே சாம்பல், வெள்ளை, கருப்பு நிறங்களில் தான் தெரிந்திருந்தன. ஆனால் அவனுடைய அத்தை அனுப்பியிருந்தது என்குரோமா கண்ணாடிகள்; அதனால் தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக அவன் நிறங்களைப் பார்க்கமுடிந்தது. தன்னைச் சுற்றிலுமிருந்த ஒவ்வொரு அழகையும் கண்டு அவன் மகிழ்ச்சியில் திளைத்தபடியால், ஏதோ அற்புதம் நிகழ்ந்துவிட்டது போல அவனுடைய குடும்பத்தாரும் உணர்ந்தார்கள்.
தேவனிடமிருந்து வண்ணவண்ண ஒளிக்கதிர்கள் பளிச்சிட்ட காட்சியின் அழகைக் கண்டபோது, அப்போஸ்தலனாகிய யோவான் திக்குமுக்காடிப் போனார் (வெளி. 1:17). உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை அவருடைய முழுமகிமையில் காண்கிற பாக்கியம் யோவானுக்கு சற்று கிடைத்தது. “வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று … அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்கள் ... புறப்பட்டன” (வெளி. 4:2-5).
முன்னொரு காலத்தில் எசேக்கியேல் இதைப் போன்றதொரு தரிசனத்தைக் கண்டார். "நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும்" அதன் மீது உட்கார்ந்திருந்தவர் "அக்கினிமயமான சொகுசாவின் நிறமாக இருந்ததையும், அவரைச் சுற்றிலும் மகிமையின் பிரகாசமாக இருந்ததையும் கண்டார்.
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை ஒரு நாளில் நாம் முகமுகமாகச் சந்திக்கப்போகிறோம். அப்போது நாம் காணப்போகிற மிக அற்புதமான காட்சியை இந்தத் தரிசனங்கள் சற்றே நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. தேவனுடைய சிருஷ்டிப்பில் இப்போது வெளிப்படுகிற தேவ அழகைக் கண்டு நாம் கொண்டாடலாம், இனி வெளிப்படயிருக்கும் மகிமையைக் காண்கிற ஆவலோடு வாழலாம்.